Featured Posts
Home » சட்டங்கள் » முஹர்ரம் » ஹிஜ்ரத்தின் நோக்கமும் படிப்பினைகளும்…

ஹிஜ்ரத்தின் நோக்கமும் படிப்பினைகளும்…

முஹர்ரம் மாதம் வந்து விட்டால், நபியவர்களின் ஹிஜ்ரத்தைப்பற்றி பல ரீதியான செய்திகளை தொடராக பேசி வருவார்கள். நபியவர்களின் வரலாறுகள் அடிக்கடி பேசப்பட வேண்டும். அந்த வரலாறுகளில் சொல்லப்பட்ட சான்றுகளை படிப்பினையாக நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும்.

அந்த வரிசையில் இந்த ஹிஜ்ரத் ஏன் நடைப் பெற்றது, அந்த ஹிஜ்ரத்தின் மூலம் நபியவர்கள் நமக்கு என்ன பாடங்களை சொல்லித் தருகிறார்கள், என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.

நபியவர்களின் ஹிஜ்ரத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக முஹம்மது மக்காவிலிருந்து பயந்து மதீனாவிற்கு ஓடினார் என்றும், பிழைப்பு தேடி மதீனாவிற்கு சென்றார் என்றும், நபியவர்களும், அவரின் தோழர்களும் இடம் பெயர்ந்து மதீனாவிற்குச் சென்றதாக இப்படி பல கதைகளை அளந்து விட்டிருந்தாலும், ஹிஜ்ரத்தின் உண்மையான நோக்கத்தை நபியின் வரலாற்றிலே நாம் காணலாம்.

ஹிஜ்ரத்தின் நோக்கம்…

அல்லாஹ் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்றால் போல் நபிமார்களை தொடராக அனுப்பிக் கொண்டே இருந்தான். இறுதி நபியாக முஹம்மது (ஸல்) அவர்களை மக்கமா நகரை மைய்யப்படுத்தி உலக மக்களுக்கு நபியாக தேர்ந்தெடுத்து அனுப்பினான்.
பொதுவாக அந்தந்த ஊர் மக்கள் நபிமார்களை தனது ஏகத்துவ பிரச்சார பணியை ஒழுங்காக செய்ய விடமாட்டார்கள். இதை ஆரம்ப கால நபி முதல் கடைசி வரையிலான நபிமார்களின் வரலாறுகளில் நாம் காணலாம். நபி கொண்டு வந்த மார்க்த்தை கொச்சைப்படுத்துவது, கிண்டல் அடிப்பது, யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏனைய சாதாரண மக்களை தடுப்பதும். தூண்டி விடுவதும், அவர் பைத்தியக்காரர், சூனியக்காரர், ஊரை இரண்டாக பிரிக்கவந்துள்ளார், குடும்பத்திற்குள் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வந்துள்ளார். புதிய கொள்கையை திணிக்க வந்துள்ளார் என்று நபிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதோடு,, யார் மீறி நபியை ஏற்றுக் கொள்கிறாரோ அவரை கடுமையான முறையில் சித்தரவதை செய்து உச்சக்கட்ட தண்டனையாக கொலை செய்து விடுவார்கள்.

இதற்கு மத்தியில் தான் இறைவனின் தூய வஹி செய்தியை ஒவ்வொரு நபிமார்களும் கொண்டு சென்றனர். அந்த வரிசையில் தான், நபியவர்களும் தொடராக அல்லாஹ்வின் வஹி செய்தியை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு எதிரிகள் பல வகையிலும் இடையூறு செய்துக் கொண்டே இருந்தார்கள்.
நபியின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களை அநியாயமான முறையில் அடித்து, துன்புறுத்தி, சுடு மண்ணில் இழுத்துச் சென்று சித்தரவதை செய்தார்கள். சுமையா (ரலி) அவர்களையும்,மற்றும் அவரது கணவர் யாசிர் (ரலி) அவர்களையும் கடுமையான முறையில் கொடுமைப்படுத்தி, இறுதியில் உயிருடன் கொலை செய்தார்கள்.
நாளுக்கு நாள் எதிரிகளின் அட்டகாசங்கள் அதிகரிக்கவே அல்லாஹ்வின் கட்டளைப்படி நபியவர்கள் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் செல்வதற்கு தயாராகுகிறார்கள்.

படிப்பினைகள்…

(1) யார் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் பல மனித சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

(2) இஸ்லாத்தை ஏற்றப்பின் எதுவும், எந்த நேரத்திலும் நடக்கலாம்.

(3)அல்லாஹ்விற்காக சொந்தம், பந்தம், சொத்து சுகங்களை, ஏன் இறுதியில் ஊரை விட்டும் வெளியேறுவதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.

(4)உயிரையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க வேண்டும்.

நபியவர்களின் அழகிய திட்டமிடல்…

நீங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் போகலாம் என்ற இறை கட்டளை கனவின் மூலமாக வந்தவுடன் நபியவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உடனே மதீனாவிற்கு போகவில்லை மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்வதற்கான பல ஆயத்தங்களை முதலில் திட்டமிட்டு செய்கிறார்கள்.

தன்னோடு தோழர் அபூபக்கரை அழைத்துச் செல்வதற்கு முடிவு செய்து அவர்களுடன் பயணத்திற்கான முழு ஏற்ப்பாடுகள் சம்பந்தமாக ஆலாசனை செய்கிறார்கள்.
மக்காவிலிருந்து செல்வதற்கு வழிக்காட்டி ஒருவர் தேவை, ஏன் என்றால் நபியவர்களுக்கோ, அபூபக்கர் அவர்களுக்கோ, மதீனா செல்வதற்கு சரியாக பாதை (வழி) தெரியாது. மதீனாவிற்கு வழிக்காட்டியாக “பனு அப்த் பின் அதீ குலத்தில் பனு அத்தீல் எனும் கிளையை சேர்ந்த குறைஷி இறை மறுப்பாளர், “அப்துல்லாஹ் பின் உரைக்கித்தை தங்களின் பயணத் தோழராக தெரிவு செய்கிறார்கள். இவர் நம்பிக்கையானவர் ஆனால் அவர் முஸ்லிம் கிடையாது. தாங்கள் பயணம் செல்வதற்காக இரண்டு ஒட்டகங்களை நான்கு மாதங்களாக தயார் செய்து இறுதியில் “அப்துல்லாஹ் பின் உரைகிதிடம் கொடுத்து மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட இடத்திற்கு வரும் படி ஒட்டகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டார்கள். அபூ பக்கர் அவர்கள் நபியவர்களுக்கு ஒரு ஒட்டகத்தை சும்மா தான் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு சும்மா வேண்டாம், கிரயத்தை கொடுத்தே நபியவர்கள் அபூபக்கரிடம் அதை விலைக்கு வாங்கினார்கள்.

அடுத்ததாக ஹிஜ்ரத் செல்லும் வழியில் தங்குவற்காக “ஸவ்ர்” குகையை தெரிவு செய்கிறார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்குவதற்கான பின்வரும் ஏற்ப்பாடுகளையும் முன்னேற்பாடாக செய்கிறார்கள். குகையில் தங்கியிருக்கும் போது உணவை கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகளான அஸ்மா அவர்களை தெரிவு செய்கிறார்கள். அஸ்மா அவர்கள் உணவை கொண்டு வரும் போது அவரின் கால் பாத அச்சை (சுவட்டை) ஆடுகளை ஓட்டிச் சென்று அழிப்பதற்காகவும், ஆட்டிலிருந்து பாலை கரந்து குடிப்பதற்காகவும், அபூ பக்கர் அவர்களின் முன்னால் அடிமையான “ஆமிர் இப்னு புஹைரா அவர்களை தெரிவு செய்கிறார்கள். தங்களைப் பற்றி மக்கத்து காபிர்கள் (எதிரிகள்) என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற தகவலை இரவு நேரத்தில் கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகன் அப்துல்லாவை தெரிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அபீபக்கர் அவரகள் இரவு நேரத்தில் இவர்களுடன் குகையில் தங்கி ஸஹர் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் வந்து விடுவார்கள்.இப்படியே மூன்று இரவுகள் செய்தார்கள். நபியவர்கள் தனது வீட்டிலிருந்து செல்லும் போது வீட்டில் தங்க வைப்பதற்காக அலி (ரலி) அவர்களை தெரிவு செய்கிறார்கள்.

இப்படி பல திட்டங்களை செய்த பின் அபூபக்கர் அவர்களிடம் நீங்கள் தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் நான் உங்கள் வீட்டை நோக்கி வரலாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.

ஒரு நாள் பகல் நேரம் நபியவர்கள் தலையை மூடிக் கொண்டு அபூபக்கர் அவர்களின் வீட்டிற்கு சென்று, எனக்கு ஹிஜ்ரத் செல்ல அனுமதி வழங்கப்பட்டு விட்டது, வாருங்கள் நாம் ஹிஜ்ரத் போவோம் என்று மதீனாவை நோக்கி புனித ஹிஜ்ரத் பயணம் செல்கிறார்கள். அல்லாஹ் நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும், பாதுகாத்த செய்தியை பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

“(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.” (8-30)

எனவே ஒரு மனிதர் ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன், அது சம்பந்தமாக பல முன் ஏற்ப்பாடுகளையும், திட்டங்களையும், தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதையும், அல்லாஹ்வின் மீது கடைசி வரை நம்பிக்கையிருக்க வேண்டும் என்பதையும், இந்த ஹிஜ்ரத் நமக்கு பல முக்கிய பாடங்களையும், படிப்பினைகளையும், கற்றுத் தருகிறது. அல்ஹம்து லில்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *