Featured Posts
Home » இஸ்லாம் » மறுமை » உலக அழிவும், மறுமை விசாரணையும்… [01]

உலக அழிவும், மறுமை விசாரணையும்… [01]

இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும்.

இந்த உலகம் எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் துறைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டாலும்,அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை காலம் நிரூபித்து வருகிறது.

நபியவர்கள் மறுமை நாளைப்பற்றி அடிக்கடி மக்கத்து மக்களுக்கு மத்தியில் எச்சரித்து வந்த நேரத்தில், இந்த மறுமை நாள் எப்போது வரும் என்ற கேள்வியை இறை நிராகரிப்பாளர்கள் நபியவர்களிடம் கேட்ட போது, நபியவர்கள் மௌனமாக இருந்த நேரத்தில் படைத்தவன் அதற்கு இப்படி பதிலளித்தான்

“எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? மகத்தான அச்செய்தியைப் பற்றி, ‏எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி, அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள். (78:1-5)

அந்த மறுமை நாள் எப்போது நிகழும் என்பதை படைத்த அல்லாஹ் மட்டுமே அறிவான். உலக அழிவதற்கு முன் ஏற்ப்படும் பல முன் அறிவிப்புகளை நபியவர்கள் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதே நேரம் இத்தனையாம் ஆண்டு உலகம் அழியும் என்று யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு அதை அல்லாஹ் இரகசியமாகவே வைத்துள்ளான் என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

“நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது… (31:34)

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறக்கேட்டேன். ( புகாரி 4936)

உலக அழிவு நாள்…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1548)

இங்கு உலக அழிவு நாள் வெள்ளிக்கிழமை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த வெள்ளிக்கிழமை இந்த உலகம் அழிக்கப்படும் என்பதை குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

சூர் ஊதுதல்…
உலகம் சம்பூர்ணமாக அழிக்கப்படுவதற்கு முன் முதலாவது எக்காளம்(சூர்) ஊதப்படும். முதலாவது சூர் ஊதப்பட்டவுடன் வானங்கள், பூமி. சூரியன் சந்திரன், நட்சத்திங்கள், கடல்கள், மலைகள் அனைத்தும் தூள், தூளாக… தூக்கி வீசப்படும்.அதன் பிறகு இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் பூமியிலிருந்து அனைவரும் எழுப்பப்படுவார்கள்.

“ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். (39:68)

அல்லாஹ் நாடியோர்களைத் தவிர என்றால், முதல் சூரின் போது மலக்குமார்கள் அழிக்கப்பட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்

“அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்
‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர், ‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள். (புகாரி 4935)

எனவே முதல் சூர் ஊதப்பட்டவுடன் இந்த உலகம் எப்படி அழியும் என்ற காட்சியை குர்ஆன் பின் வருமாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

பூமி தூள், தூளாக…
“பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

“பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது – இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1-2)

அல்லாஹ் உலகத்தை அழிக்க நாடும் போது பூமியை அப்படியே தூள் தூளாகத் தூக்கி புரட்டிப் போடுவான்.

மலைகள் வெடித்து சிதறும்…
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

“மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.(101:05)

பூமி அசையாமல் இருப்பதற்காக அல்லாஹ் மலைகளை அமைத்துள்ளான். அந்த மலைகள் உலக அழிவு நாள் அன்று காற்றில் பறக்கும் பஞ்சைப் போல காற்றோடு, காற்றாக, பறக்கும் என்பதை அந்த குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சூரியன், நட்சத்திரங்கள், ஒளியிழந்து உதிர்தல்…
“நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது (82: 2)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் சூரியன், நட்சத்திரங்கள் அனைத்தும் தனது ஒளியை இழப்பதோடு, அப்படியே மேலிருந்து கீழே உதிர்ந்து கொட்டும் என்பதை அல்லாஹ் அந்த வசனங்கள் மூலம் குறிப்பிடுகிறான்.

வானம் பிளக்கும்…
“வானம் பிளந்து விடும்போது (84:1)

“எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் இந்த வானம் துண்டு, துண்டாக, பிளந்து உருகி வடியும் என்பதை அந்த குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

கடல் கொந்தளிப்பு…
“கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது…(82:3)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் கடல் தண்ணீர் கொந்தளிக்கப்பட்டு, பூமியின் பக்கம் தண்ணீர் தூக்கி வீசப்படும். இப்படி பல ரீதியில் உலக அழிவுகள் ஏற்பட்டப் பின் வெறும் மையானமாக இந்த பூமி காட்சி தரும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *