Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்!

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்!

ஏகத்துவப் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கை சொந்தங்களுக்கு, السلام عليكم ورحمة الله وبركاته

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்!

அழைப்புப் பணியை தங்கள் முழு முதல் பணியாகக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கைச் சொந்தங்களே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் என்றென்றும் நிலவ பிரார்த்தித்தவனாய் எனது இம்மடலை ஆரம்பிக்கின்றேன்.

நாம் வாழ்கின்ற சமகாலச் சூழலில் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளமை நிதர்சனம். சர்வதேச ரீதியாக இந்த உம்மத்தின் அவலம் நீடித்து வரும் தருணத்தில் அதன் தாக்கம் எமது இலங்கை மண்ணிலும் எதிரொலிக்கின்றமை இயல்பானதே!

உரிமை சார்ந்த, உலகியல் சார்ந்த பிரச்சினைகள் ஒரு புறத்திலும், கொள்கை சார்ந்த சவால்கள் மறுபுறத்திலும் என இரு வேறு சவால்களை ஏக காலத்தில் எதிர் கொண்டு தீர்வுகளை பெற்று மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய ஒரு இக்கட்டான விளிம்பு நிலையிலேயே எமது பயணம் அமைந்துள்ளமை யதார்த்தம்.

உணர்வுபூர்வமான இத்தருணத்தில் எமது முதன்மைப் பணியாக நாம் எமது தோள்களில் சுமக்க வேண்டியது மறுமையோடு ஒட்டிய கொள்கை போராட்டமே என்பதை நீங்கள் யாரும் மறுதலிக்க மாட்டீர்கள் என்று கருதுகின்றேன்.
காதியானிகள், ஷீயாக்கள், கபுருவணங்கிகள், ஹிஸ்புத் தஹ்ரீரி சிந்தனைவயப் பட்டோரின் ஆட்சிக் கோஷங்கள், அத்வைதிகள், சவுதியையும் ஸலபுகளையும் எதிர்க்கிறோம் என்ற போர்வையில் தவ்ஹீத் சிந்தனைப் பள்ளியை சிதைக்கத் துடிக்கும் ஜமாஅதுஸ்ஸலாமா – ஜமாஅதே இஸ்லாமி சிந்தனைப் பிரிவுகளின் அல்லக்கைகள் என அழைப்புப் பணியில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் இமையமாய் எம் விழிகளுக்கு முன் எழுந்து நிற்பதனை காணலாம்.

இத்தனை வழிகேடுகளும் தூய அகீதாவுக்கு எதிரானவை என்பதில் பெரும் பாலும் எமது கொள்கை அன்பர்கள் ஒருமித்த கருத்திலேயே இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

ஆனால், தவ்ஹீதின் ஏகபோக உரிமையாளர்கள் போன்று தங்களை சித்தரித்துக் கொண்டு, வீரியமாக குர்ஆன் – ஸூன்னாவை எத்திவைப்போர் என்று வீராப்புப் பேசிக் கொண்டு, வஹியின் ஒரு பகுதியான ஹதீஸ் மறுப்புக் கொள்கையினை தமிழ் பேசும் உலகில் விதைத்துக் கொண்டு வரும் பயங்கரமான வழிகெட்டப் பிரிவினரே TNTJ மற்றும் SLTJ எனும் அமைப்பினர்.

இவர்களின் வழிகேட்டின் தன்மை வெளியே தெரியாத வண்ணம் குர்ஆன் – ஸூன்னா எனும் முழாம் பூசப்பட்டிருப்பதனால் பல கொள்கை அன்பர்கள் கூட இவர்களின் தப்பான பிரச்சாரத்தின் வீச்சில் வீழ்ந்து போகின்ற பரிதாபகரமான நிலையினை பரவலாக காணமுடிகிறது.

குறிப்பாக, தவ்ஹீத் கல்லூரிகளில் கற்றுத் தேர்ந்த ஆலிம்கள் – ஆலிமாக்கள் கூட இவர்களின் பிரச்சாரத்திலுள்ள வீரியத்தினாலும், சமுதாயப் பணிகளில் காட்டுகின்ற ஆர்வத்தினாலும் ஈர்க்கப்பட்டு தங்களை அவர்களுடைய பிரச்சாரத்துடன் இணைத்துக் கொள்ளுகின்ற, குறைந்த பட்சம் அவர்களையும் சரிகாணுகின்ற அவலம் நடந்து வருகின்றது.

இது ஒரு பேராபத்தான கட்டமாகும். தவ்ஹீதின் பெயரில் முகாமிட்டு, வஹியை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் ஹதீஸ்களை குழிதோண்டிப் புதைக்கும் வழிகேடு இன்னும் இன்னும் வேர்பிடிக்க விட்டோமேயானால் அது ஆழ விருட்ஷமாய் எழுந்து அப்பாவி மக்களின் ஈமானை கருவறுக்கும் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

எனவே காலத்தின் தவிர்க்க முடியாத ஒரு தேவையும், அழைப்புப் பணியில் சமகாலத்தில் நாம் முன்னுரிமையளித்து வீரியமாக எதிர் பிரச்சாரம் செய்யவேண்டியதுமான பணியே இந்த ஹதீஸ் நிராகரிப்புக்கு எதிரான பிரச்சாரப் பணி.

இந்த வழிகேட்டை விதைப்பவர்கள், தங்கள் பிரச்சாரத்தை பல்வேறு வடிவங்களில், பல யுக்திகளை கையாண்டு வீரியமாக முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கெதிரான எதிர் பிரச்சாரம் இது வரை நாடு தழுவிய ரீதியில் திட்டமிடப்பட்ட ஒரு அமைப்பில் இடம் பெறாத ஒரு நிலையே காணக்கிடைக்கின்றமை கவலைக்குரிய நிலையாகும்.

இலங்கையில் களப்பணியாற்றும் கொள்கை அன்பர்களுக்கு மத்தியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் சில விடயங்களிலும், தஃவா அனுகுமுறைகளிலும் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு சாராரும் தான் இருக்கும் நிலைப்பாட்டிலேயே இருந்து கொண்டு ஹதீஸ் மறுப்பு எனும் வழிகேட்டை வேரடி மண்ணோடு வெட்டிச்சாய்க்கும் வீரியப் பிரச்சாரத்தில் இறங்க வேண்டும் என்பதே எனது இம்மடலின் அதிபிரதான வேண்டுகோளாகும்.

குறிப்பாக: ஹதீஸ் மறுப்புக்கு எதிராக “வஹி பாதுகாப்பு மாநாடு” எனும் கருப்பொருளை மையமாக எடுத்து, சுமார் 6 மாதங்கள் எனும் காலத்தை வரையறை செய்து, ஒவ்வொரு தவ்ஹீத் சிந்தனைப் பிரிவினரும் தங்களுடைய அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களையும் ஒன்றிணைத்து இது குறித்த தங்கள் திட்டத்தினை முன்வைத்து, 2018 ஆம் ஆண்டின் அதிபிரதான இலக்காக இதனை ஆக்கி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக தேசியளவில் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து, இறுதியாக முத்தாய்ப்பாக கருப்பொருளுக்கு உட்பட்ட மாநாட்டினை தேசியளவில் வைத்தால் பாரிய விழ்ப்புணர்வினை இந்நாட்டிலும், தமிழ் பேசும் உலகிலும் இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்த முடியுமாக இருக்கும்.

இதற்காக வேண்டி,
1. வாராந்த ஜூம்ஆக்கள் (பெண்களுக்கும் சேர்த்து)
2. வாராந்த ஆண் – பெண் தொடர் வகுப்புக்கள்
3. தெரு முனை பயான்கள்
4. Pocket Meeting எனும் சிறு குழு பயான் நிகழ்ச்சிகள்
5. குடும்ப ரீதியான திட்டமிட்ட பயான் நிகழ்ச்சிகள் (வாரம் ஒரு வீடு)
6. மாதாந்த பகிரங்க பொதுக் கூட்டங்கள் (திறந்த வெளியில்)
7. ஊர், மாவட்ட, மாகாண ரீதியிலான இஜ்திமாக்கள் (ஆண்கள் – பெண்கள்)
8. கருத்தரங்குகள், உள்ளரங்கு நிகழ்ச்சிகள்
9. மாணவர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்
10. அரபு கல்லூரி மாணவ – மாணவியருக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள்
11. பல்கலைக்கழகங்களில் திட்டமிடப்பட்ட வகுப்புகள் (மஜ்லிஸ் ஊடாக)
12. தொடர் துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பெணர்கள், கட்அவுட்கள்…. ஊடாக விழிப்புணர்வு ஊட்டுதல்.
13. வழிகெட்ட கூட்டங்களின் கொள்கை குழப்பங்களை சித்தரிக்கும் கண்காட்சிகள்
14. ஹதீஸ் மறுப்புக் குறித்து இது வரை ஆற்றப்பட்ட உரைகளை மலிவு விலையில், அல்லது இலவசமாக வீடு வீடாக விநியோகம் செய்தல்.

போன்ற இன்னும் உள்ள வழிமுறைகளையும் மஷூரா செய்து, 2018 ஆம் ஆண்டின் அதி பிரதான தஃவா பணியின் இலக்காக ஹதீஸ் மறுப்புக்கு எதிரான “வஹி பாதுகாப்பு மாநாடு” எனும் கருப்பொருள் தேசிய ரீதியில் அமுல்படுத்தப்படல் வேண்டும்.

இப்படியான முறைப்படுத்தப்பட்ட ஒரு தஃவாவின் ஊடாகவே மக்கள் மத்தியில் TNTJ / SLTJ யின் போலித்தனமான வாதங்கள் குறித்த தெளிவையும், விழிப்புணர்வினையும் ஏற்படுத்த முடியும் என்பது என்னுடைய பணிவான ஆலோசனை.

அரபு மொழியில் நன்கு புலமையுள்ள, ஹதீஸ் மற்றும் ஷரீஆ துறைகளில் பாண்டித்தியம் நிறைந்த, நூற்றுக்கணக்கான கொள்கை அறிஞர்கள் எமக்கு மத்தியில் உள்ளனர். இவர்களின் திறமைகளும், புலமைகளும் சிதறிக்கிடக்கின்றதை காண்கிறேன். இவையனைத்தும் ஒன்று திறட்டப்பட்டு, திட்டமிடப்படுமேயானால் பாரிய கொள்கை எழுச்சியொன்றினை இந்நாட்டில் இறையருளால் ஏற்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ்.

இப்பாரிய பணியினை உங்கள் சிந்தனைக்கு முன்வைத்திருக்கிறேன். இப்பணியின் சுமையினையும், எமக்கு முன்னால் உள்ள அமானிதத்தின் அழுத்தத்தினையும் உணர்ந்து நல்லதொரு முடிவினை எடுக்குமாறு அன்பாய் வேண்டி விடை பெறுகிறேன்.
அல்லாஹ் எம் எண்ணங்களை தூய்மைப் படுத்தி, பணிகளை பொருந்திக்கொள்ளுவானாக!

இப்படிக்கு,
இஸ்லாமிய ஊழியன்
M.T.M.பர்ஸான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *