Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]

இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]

இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான்.
அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது.
மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு கத்தினான்.
தனது சித்தப்பாவை அந்த சடலம் இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்று குற்றமும் சாட்டினான். இதனால்
இரு பிரிவினருக்கும் மத்தியில் பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டது. எனவே, இறுதியில் மூஸா நபியிடம் சென்று முறையிட
முன்வந்தனர்.

மூஸா நபியிடம் பிரச்சினை முன்வைக்கப்பட்டது. மூஸா நபி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு, “அல்லாஹ் ஒரு மாட்டை அறுக்குமாறு கட்டளையிடுகின்றான்” என்று கூறினார்.

இதைக் கேட்ட மக்கள் ஆச்சரியப்பட்டனர். கொலையாளியைப் பற்றிக்கேட்டால் மாட்டை அறுக்கச் சொல்கின்றாரே என எண்ணிய அவர்கள், “எங்களைக் கேலி பண்ணுகின்றீர்களா?” என்று நபியை எதிர்த்துக் கேட்டனர்.

“அறிவீனன்தான் அல்லாஹ்வின் பெயரில் பொய்யுரைப்பான். நான் அத்தகைய அறிவீனனாக இருப்பதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்றார் மூஸா நபி.

அந்த மக்கள் நபி கூறியதற்குக் கட்டுப்பட்டு மாட்டை அறுத்திருக்கலாம். ஆனால், அதை விட்டு விட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டனர். “மாடு என்றால் எத்தகைய மாடு” என்று கேட்டனர். அதற்கு, “அது கிழடும் அல்ல கன்றும் அல்ல இரண்டுக்கும் இடைப்பட்ட வயதையுடையதாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அதன் பின்னர் என்ன நிறமுடைய மாட்டை அறுக்க வேண்டும் என்று கேட்டனர். பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தக் கூடிய அமைப்பில் உள்ள கருமஞ்சல் நிற மாடு என்று பதில் வந்தது. பின்னரும் அந்த மாட்டைப் பற்றி விசாரித்தனர். அந்த மாடு நிலத்தை உழவோ விவசாயத்திற்கு நீர் இறைக்கவோ பழக்கப்படாத மாடு. குறைகளோ, தழும்புகளோ அற்றதாக இருக்க வேண்டும் என்று மூஸா நபி கூறினார்.

அதன் பின்னர் தான் அத்தகைய மாட்டை அறுக்க முடிவெடுத்தனர். இவ்வளவு வர்ணனைகளும் உள்ள மாட்டைத் தேடி அலைந்தனர். பன்மடங்கு செல்வத்தை கொட்டிக் கொடுத்து அதை வாங்கி அறுத்தனர். அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியை எடுத்து இறந்தவரின் சடலத்தின் மீது அடிக்குமாறு அல்லாஹ் கூறினான். அவ்வாறு அடித்ததும் அந்த ஆச்சரியம் நடந்தது. இறந்தவர் உயிர் பெற்று தன்னைக் கொன்றவன் தனது சகோதரன் மகன் தான் என கொலையாளியை அடையாளப்படுத்தினார்.

மீண்டும் அவரது உயிர் போய்விட்டது. கொலைகாரன் வசமாக மாட்டிக் கொண்டான். அவனது பண ஆசை அவனுக்கு அழிவைக் கொடுத்தது. அவன் தண்டனை பெற்றான்.

இதன் மூலம் அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான் என்பதை நேரடியாக அவர்கள் கண்ணால் கண்டார்கள். இருப்பினும் அந்த மக்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படும் இயல்பு உள்ளவர்ககளாக மாறவில்லை.

அதிக ஆசை ஆபத்தானது. என்பதையும் குறுக்கு வழியில் அடைய முயலக் கூடாது. குற்றம் செய்தவன் எவ்வளவு தந்திரம் செய்தாலும் மாட்டிக் கொள்வான். குற்றம் செய்து விட்டு அதை அடுத்தவர் தலையில் போடுவது பெருங்குற்றம். அளவுக்கு மீறிய கேள்விகள் அர்த்தமற்றவை. கொலையாளியைக் கண்டுபிடிக்க இறந்த உடலைப் பிரேத பரிசோனைக்குற்படுத்தலாம். போன்ற பல அம்சங்களை இக்கதை வாயிலாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *