Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » மியன்மார்: இனசங்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள்

மியன்மார்: இனசங்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள்

-எம். ஐ அன்வர் (ஸலபி)-

ஐ.நா வின் அறிக்கையின்படி உலகில் இன்று தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும், அதேநேரம் மோசமான மனித அழிவை சந்தித்துவரும் சிறுபான்மை சமூகக் குழுவாக ரோஹிங்ய முஸ்லிம்கள்அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மியன்மார் அரசாங்கத்தின் முஸ்லிம் சிறுபான்மையான ரோஹிங்யர்களின் மீதான ஒடுக்குமுறை சர்வதேச நாடுகளின் கவனத்தைக் ஈர்த்துள்ள மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது.

மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அதிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் அங்கு வாழ்கிறார்கள். வரலாற்று ஆதாரங்களின் படி 1000 வருடங்களுக்கு முன் குடியேறிய முஸ்லிம் வியாபாரிகளின் வழித்தோன்றல்களே இவர்களாவர்.

மியன்மாரில் 325 இனக் குழுமங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டபோதும் ரோஹிங்யா முஸ்லிம்களை குடிமக்களாக அங்கீகரிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. மியன்மார் நாட்டில் 4 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அங்கு பிரதான மூன்று முஸ்லிம் இனக்குழுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

1. பஷூஷ் இன முஸ்லிம்கள். இவர்கள் மியன்மார் பூர்விக குடிகளாவர். நபித்தோழர்களின் பிரசாரம் மூலம் இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்கள் 15 இலட்சம் (1.5) மக்கள் தொகையினராக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் பிரதேசங்களில் கலவரங்களோ , பிரச்சினைகளோ குறைவு.

2. பான்தாய் இன முஸ்லிம்கள் . இவர்கள் இந்திய வம்சாவளியினர். இவர்கள் 10 இலட்சம் (1 மில்லியன் ) மக்கள் தொகையினர் . இவர்களின் வாழ்விடங்களில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய கலவரங்களோ பிரச்சினைகளோ கிடையாது.

3. ரோஹிங்யர்கள் அராகான் முஸ்லிம் குடியரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிம்கள். இவர்கள் சுமார் 11 இலட்சம் தொகையினர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மியன்மாரின் அராக்கான் மாகாணத்தில் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். ரோஹிங்யா என்பது
அவர்கள் பேசும் மொழி. இம்மக்கள் மியன்மார் ‌ நாட்டின் பூர்விக குடிகள் என்பதை சாட்சியங்களோடு நிறுவும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இருந்தாலும் அவர்கள் வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக மியன்மாரில் குடியேறியவர்கள் என்றும் அவர்கள் பெளத்தத்திற்கு எதிரானவர்கள் என்றும் கூறி அவர்கள் மீது கடும் வன்முறையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து வருகின்றது அந்நாட்டு அரசும் அதனைப் பின்னின்று இயக்கும் பெளத்த பேரினவாதமும்.

ரோஹிங்ய முஸ்லிம்களின் வரலாறு
அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீதின் காலத்தில் இஸ்லாம் ரோஹிங்கியாவில் பரவியது. புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் A.B அஸ்மாரத் Burma Gazzetter எனும் அவரது புத்தகத்தில் அராக்கானில் இஸ்லாத்தின் பரவல் பற்றி இவ்வாறு கூறுகின்றார் கி.பி 788 க்கு முன்பிருந்தே அராக்கான் மக்களுக்கும் ,அராபியர்களுக்கும் ஒரு சிறந்த வர்த்தக தொடர்பு காணப்பட்டது. இக்காலப் பகுதியில் அராபியர்கள் அராக்கான் மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினர் . வியாபார நோக்கமாக வந்த அரபு முஸ்லிம்களின் பண்பாட்டையும் , நாணயத்தையும் கண்டு கவரப்பட்ட அராக்கான் பூர்வீக குடிகள் இஸ்லாத்தை தமது மார்க்கமாக ஏற்றுக்கொண்டனர். இன்னும் அதிகமான அரபு முஸ்லிம்கள் மியன்மார் பெண்களை திருமணம் செய்து அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.

கி.பி 1430 இல் அராக்கானில் முதலாவது இஸ்லாமிய ஆட்சியை ஆரம்பத்தில் பெளத்தராக இருந்து பின் இஸ்லாத்தை தழுவிய நராமீஹ்லா சுலைமான் ஷா நிறுவினார். அராக்கான் அரசின் நாணய அலகில் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்ற கலிமாவும் வஅன் அகீமு அல்தீன என்ற ஷூரா அத்தியாயத்தின் 13 ஆவது வசனமும் பொறிக்கப்பட்டிருந்ததாக வரலாறு பதிவு செய்துள்ளது.

இவ்வாறு கி.பி 1430 தொடக்கம் கி.பி 1784 வரை அராக்கானை நான்கு நூற்றாண்டுகள் 48 முஸ்லிம் மன்னர்கள் தொடர்ச்சியாக ஆண்டுள்ளனர். கி.பி 1784 இல் அராக்கான் பூதா பாய் எனும் பர்மிய பெளத்த மன்னனின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்தது. இவனது கொடுங்கோல் ஆட்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் ரோஹிங்ய முஸ்லிம்களே ஆவர். அராக்கானில் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகராக இருந்த மரூகாங் பிரதேசத்தின் மீது போர் தொடுத்து அங்குள்ள மக்களை கொன்று குவித்து வளங்களையும் சூறையாடினான். இதில் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் அறிஞர்களும் கண்மூடித்தனமாக கொள்ளப்பட்டனர். அங்கிருந்த பாடசாலைகள் , பள்ளிவாசல்கள் என்பன தகர்க்கப்பட்டன. இதன் பின்னர் வரலாறு நெடுக்கிலும் முஸ்லிம்களின் பிரதேசமாக இருந்து வந்த அராக்கான் நூற்றுக்கணக்கான பெளத்த வணக்கஸ்தலங்கள் நிறைந்த பூமியாக மாறியது. இதனால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அயல் நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புக ஆரம்பித்தனர்.

1824 ல் பிரித்தானியா மியன்மாரை ஆக்கிரமித்ததுடன் இந்தியாவில் இருந்த பிரித்தானிய காலணித்துவத்துடன் மியன்மாரையும் இணைத்தது ,மேலும் 1937ல் பிரித்தானியா அராக்கனுடன் இணைத்தது. மியன்மார் பிரித்தானிய காலனித்துவத்தை உருவாக்கியது. எனினும் இதற்கு எதிராக போராடிய முஸ்லிம்களின் வீரத்தையும் உத்வேகத்தையும் கண்டு பிரித்தானியர் அச்சம் அடைந்து தமது பிரித்தாலும் கொள்கையாலும் (Rule and Divide ) முஸ்லிகளுக்கெதிராக பௌத்தர்களை தூண்டி விடுவதன் மூலம் இப்போராட்டத்தை பலவீனமடையச் செய்தனர். தவிர 1938 இல் 30000 முஸ்லிம்களைக் கொலை செய்ய பௌத்தர்களைத் தூண்டினர். மேலும் 1947 இல் பீன்க் லோன்க் இல் இடம்பெற்ற ஆக்கிரமிப்புக்கெதிரான உடன்படிக்கையில் ரோஹிங்ய முஸ்லிம்களைத் தவிர ஏனைய அனைத்துத்தரப்புக்களும் அழைக்கப்பட்டன. இதே ஆண்டு இடம்பெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பெயர் பட்டியலிலும் ரோஹிங்ய முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் .

1948 ஜனவரி 4ல் மியன்மார் சுதந்திரம் பெற்றது. பிரித்தானியாவுக்கும் மியன்மாருக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் அராக்கான் இஸ்லாமியக் குடியரசு மியன்மாருடன் இணைக்கப்பட்டது. அதன்படி பத்து ஆண்டுகளின் பின்னர் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது. என்றாலும் இவை யாவற்றையும் மியன்மார் அரசு மறுத்தது. அத்தோடு மியன்மார் ஜனாதிபதியால் பர்மா எனும் சொல் பூதா விலிருந்து தோன்றியது எனவும் பௌத்தர்களே இந்நாட்டின் குடிமக்கள் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்புக்களை நீக்கச்செய்து சகல முஸ்லிம்களின் பெயர்களையும் பௌத்த பெயர்களாக மாற்றி முஸ்லிம் பெண்களை பௌத்தர்களை திருமணம் செய்து கொள்ளவும் கட்டாயப்படுத்தி மறுத்தவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

பெளத்த பேரினவாதத்தின் அடக்குமுறையிருந்து தம்மை பாதுகாத்துக்
கொள்ள 1967 இல் அராகான் பகுதியிலிருந்து 28,000 முஸ்லிம்கள் வெளியேறினர். மேலும் 1977 இல் 300,000 முஸ்லிம்கள் நாட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டனர். அத்தோடு 1978 இல் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்ததோடு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோரை நாட்டை விட்டும் துரத்தியடித்தது.
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கெதிரான நெருக்குதல்கள்.

1982 ஆம் ஆண்டு மியன்மாரில் ஜெனரல் நே வின் அரசால் பின்வரும் மூன்று வகையான பிரஜாவுரிமைகள் வழங்கப்பட்டன.

1 . உயர்குலத்தவர்கள் (பௌத்தர்கள்)
2 . இரண்டாம் தர வர்க்கத்தினர்
3 . மூன்றாம் தர வர்க்கத்தினர் (முஸ்லிம்கள்)

ஆனால் அரசு ரோஹிங்ய இன‌ மக்களுக்கான குடியுரிமையை மறுத்தது. “ரோஹிங்யா” என்ற சொல்லைக் கூட பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வங்காளிகள் என்று தான் அவர்களை அழைக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் மியன்மார் மக்களிடையே இச்சிறுபான்மை இனத்தவரை வந்தேறிகள் என அடையாளப்படுத்தி அந்நியப்படுத்தும் திட்டம் வெற்றிகரமாக முடுக்கி விடப்பட்டது.
ரோஹிங்யா இன முஸ்லிம்கள், ஒரு பெளத்த மதப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து விட்டார்கள் என ஒரு வதந்தி பரப்பப்பட்டு, ரோஹிங்யா இன‌ மக்களின் மீது வெறுப்பு விதைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு,ஜூன் 10 ஆம் நாள் மியன்மார் அரசு அவசரநிலை பிரகடனம் செய்ததை அடுத்து, ராக்கான் பெளத்தர்கள் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான‌ ரோஹிங்யா முஸ்லிம்களைக் கொன்றனர். எஞ்சியவர்களை வீட்டை விட்டு விரட்டியடித்தனர். வீடுகள், கடைகள், கல்வி , வர்த்தக நிலையங்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இராணுவம் காவல்துறையும் இத்தாக்குதல்களுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் துணை நின்றது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பெளத்த மதத்தினருக்குமிடையில் நிகழும் போராட்டங்கள் காரணமாக 1,20,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் அயல்நாடுகளில் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். இங்கு போதிய அடிப்படை வசதிகள் இன்றி அவர்கள் தவித்துவருகிறார்கள்.

ரோஹிங்ய முஸ்லிம்கள் பெளத்தத்தை மதிக்காதவர்கள். அவர்கள் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள் என்று அறைகூவல் விடுப்பதன் மூலம் பெளத்த பேரினவாதம் அவர்களைத் தரம் பிரித்து அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மியன்மாரில் 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ‌ரோஹிங்யா மக்கள் கடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வாக்குரிமை கிடையாது, உயர்கல்வி, மருத்துவம், வேலை, கடவுச்சீட்டு என எதுவும் அவர்களுக்கு கிடையாது. உள்நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர அரசிடம் அனுமதி பெற வேண்டும். திருமணம் செய்து கொள்ள இராணுவத்தின் நான்கு எல்லைகளிடமும் அனுமதி பெற வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. அவர்கள் நிலங்களை அரசு நினைத்தால் பிடுங்கிக் கொள்ளவும் முடியும்.
பாலம் கட்டுதல், பாதைகளை சீரமைத்தல் மற்றும் அபாயகரமான கடினமான வேலைகளில், குறைந்த கூலியில் கொத்தடிமைகளாக வேலை செய்ய ரோஹிங்யா முஸ்லிம்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். 7 வயது குழந்தைகள் முதல் இத்தகைய தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது மட்டுமின்றி, காவல்துறை நினைத்தால், எந்நேரமும் இம்மக்களின் வீடுகளில் புகுந்து சோதனை செய்வதும், ஒன்றாகக் கூடினால் துப்பாக்கிச் சூடும் நடத்திக் கொலை செய்வதும் வாடிக்கையான விடயமாகும்.

சமீபத்தில் பெளத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியன்மாரிலிருந்து கடல் வழியாக படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்ய மக்களை பங்களாதேஷ் மற்றும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுக்கடலில் தத்தளித்தனர். பின்னர் மலேசியாவும் இந்தோனேசியாவும் அடைக்கலம் கொடுக்க முன் வந்தமை குறிப்பிடதக்கது. இது குறித்த வீடியோ காணொளிகள் முகநூல் போன்ற சமூக வலயத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நாமனைவரும் அறிந்ததே!

969 பௌத்த தீவிரவாத இயக்கம்
பௌத்த நாடுகளில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென்ற கோஷத்தோடு பர்மாவில் 1999 ஆம் ஆண்டு கடும்போக்குவாத பௌத்த பிக்குவான க்யூ லியூன் என்பவரால் 969 எனும் இயக்கம் நிறுவப்பட்டது. இவ்வியக்கத்தில் 2001 ஆம் ஆண்டு அங்கத்தவராக இணைந்து கொண்ட அசின் விராது என்ற பிக்கு அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றதோடு அவ்வியக்கத்தை தேசிய ரீதியிலும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியடையச்செய்தார். 2003 ஆம் ஆண்டு மத எதிர்ப்பு பிரச்சாரத்தினால் 25 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இவர் 2010 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளுடன் சேர்த்து விடுவிக்கப்பட்டார். அத்தோடு 2011 ஆம் ஆண்டு பர்மா அரசு அறிவித்த அரசியல் சீர்திருத்தங்களை ஆதரித்து கருத்து வெளியிட்ட இவர் அரசின் நன்மதிப்பை பெற்றார். 2012 ஆம் ஆண்டு பர்மா அரசு கொண்டுவந்த ரோஹிங்ய முஸ்லிம்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் திட்டத்தை ஆதரிக்கவும் செய்தார்.

முஸ்லிம்கள் தொடர்பாக இவர் நீ அன்பையும் அறிவையும் அதிகளவு கொண்டிருக்கலாம். ஆனால் நீ ஒரு முட்டாள் நாய்க்கு அருகில் கூட தூங்க தகுதியற்றவன் என்பதாக தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியிருந்தார். அந்தவகையில் இவரது தீவிரவாத செயற்பாடுகளைக் கண்ட அமெரிக்காவின் டைம்ஸ் சஞ்சிகை 2013 ஜூன் 20ல் வெளிவந்த அதனது பிரதியில் முதல் பக்கத்தில் (The Face of Buddhist Terror) தீவிரவாதப் பிக்குவின் முகம் எனும் தலைப்பில் இவர் பற்றி எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலை
இத்தகைய கடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஒரு சமூகம் கொதித்தெழுவது இயல்பு. அந்தவகையில் தம்மீதான இராணுவத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்து “அராகான் அல்யகீன்” என முன்னர் அறியப்பட்ட அராகான் இராணுவ இஸ்லாமிய விடுதலை அமைப்பினர் தமது இருப்பையும், எதிர்காலத்தையும பாதுகாப்பதற்காக போராடி வருகின்றனர்.

எனினும் தமது உரிமைகளை காப்பதற்காக போராடும் இவர்களை மியன்மார் அரசு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களின் செயற்பாடுகளை முறியடிப்பதாய் கூறி மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மக்களை கொன்று குவித்து, பெண்களை துஷ்பிரயோகம் செய்து ரோஹிங்ய சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தனது அடக்குமுறையை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.

இராணுவம் ரோஹிங்யா மக்களை பலவித கொடுமைகளுக்கு ஆளாக்குவதாக குற்றசாட்டுகள் எழுந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் மியன்மாரை விட்டு வெளியேறி பங்களாதேஷ் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலமானார்கள்.
மியன்மாரில் இராணுவத்தினர் குழந்தைகளை கொல்வதாகவும், மக்களை உயிருடன் எரிப்பதாகவும், பெண்களை கற்பழிப்பதாகவும் ஐ.நா விசாரணை அதிகாரிகளிடம் மியன்மாரில் இருந்து தப்பியவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த குற்றசாட்டுகளால் மியன்மாரில் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமைகள் கமிஷனின் தீர்மானத்தை மியன்மார் முழுமையாக மறுக்கிறது என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சு அப்போது தெரிவித்திருந்தது. இந்த விசாரணை, பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதில் மேலும் சிக்கலாக்கும் எனவும் கூறியது.

மியன்மார் துணை ஜனாதிபதி மைண்ட் ஸ்வீ அவர்களின் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினையை ஆராய பணிக்கப்பட்டது. குறித்த ஆய்வறிக்கையில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஒட்டுமொத்தமாக குடும்பக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அராகான் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை இருமடங்காக அதிகரிக்க வேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ரோஹிங்ய மக்களுக்கு எந்தவித நிவாரண திட்டங்களையும் பரிந்துரைசெய்யாத குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கையை வெறும் கண் துடைப்பு என சமூக அமைப்புகளும் ஐ.நா சபையும் அப்போது விமர்சனம் செய்திருந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழும் அராகான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 30 க்கும் மேற்பட்ட இராணுவக் காவல் அரண்கள் மீது இஸ்லாமிய விடுதலைப்போராளிகள் தாக்கியதாக குற்றம்சாட்டி இராணுவத்தினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 125000 பேர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளனர். அதே நேரம் இராணுவத்த்தரப்பில் 12 படைவீரர்கள் இறந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தொடர்ந்தும் இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தமது கிராமங்களை விட்டு மூட்டை முடிச்சுகளோடு வயோதிபர்கள், பெண்கள், சிறுவர்கள் என கூட்டம் கூட்டமாக வெளியேறும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் சமூக வலையத்தளங்களில வைரலாக பரவின.

தவிர ரோஹிங்ய முஸ்லிம்களுக்கெதிராக இராணுவம் அரச இயந்திரத்தின் அனுசரணையின் கீழ் கட்டவிழ்த்துவிடப்படும் காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளுக்குப் பின்னால் சமூக, பொருளாதார காரணங்கள் இருப்பதாகவும் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

அராக்கான் பகுதியில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். எரிவாயு காணப்படும் இடத்தில் பெற்றோலியம் இருப்பது உறுதியானதாகவும். எனவே அதனை குறைந்த விலையில் கொள்ளையடிப்பதற்காக பெரும் வல்லரசுகளான அமெரிக்கா, இந்தியா பல்தேசிய கம்பனிகளுடன் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனாலேயே ஆரம்பத்தில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கெதிரான மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளுக்கு அசின் விராது தலமையிலான 969 அமைப்பு செயற்பட்ட போதும் தற்பொது அரசு இயந்திரமே அவர்களுக்கெதிரான காட்டுமிராண்டித்தனமான வன்செயல்களை இராணுவத்தைக்கொண்டு மேற்கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

இனச்சுத்திகரிப்பை நியாயப்படுத்தும் சூகி
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் முழு உலகையுமே கொதிப்படையச் செய்துள்ளன. மனித உரிமைகள் பற்றி உரத்துப் பேசும் இந்த நவீன உலகில்தான் இந்த இனச் சுத்திகரிப்பு பட்டப்பகலில் அரங்கேறுகிறது என்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகவுள்ளது.

அதுவும் அமைதியின் சின்னமென்றும் மனித உரிமைப் போராளி என்றும் வர்ணிக்கப்படுகின்ற அமைதிக்கான நோபல் பரிசை சென்ற ஆங் சாங் சூகி எனும் பெண்ணைத் தலைவராகக் கொண்ட அரசாங்கத்தினால் தான் இந்த அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்பதும் நம்புவதற்குக் கஷ்டமான ஒன்றாகவே தெரிகிறது.

கடந்த மாதம் இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
ராக்கைன் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் தமது நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாக சூகி குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை சூகி தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என சித்திரிப்பது உறுதியாகிறது. இதன் மூலம் அவர் இந்த இனப்படுகொலைகளை பகிரங்கமாக நியாயப்படுத்த முனைந்துள்ளார். அந்த வகையில் ஆங் சாங் சூகியின் உண்மை முகம் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது.

இதனால்தான் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மீளப் பெற வேண்டும் எனும் கோரிக்கைகள் சர்வதேச ரீதியாக எழுந்துள்ளன. உலகின் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதற்காக உலகளவில் கையெழுத்து வேட்டைகளும் இடம்பெற்று வருகின்றன.

உலகளவில் எழுந்த கண்டனங்கள்
இந்நூற்றாண்டின் மிகப்பெரிய மனித பேரவலமாக உருபெற்றிருக்கும் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களின் மீதான அந்நாட்டு அரசின் இனச் சுத்திகரிப்பை மனித உரிமை ஆர்வலர்களும் , அமைப்புக்களும் கடுமையாக எச்சரித்துவருகின்றனர். ஆயினும் சமாதானத்திற்கான நோபல்பரிசு பெற்ற ஆங்சாங் சூகி தலைமையிலான தற்போதைய மியன்மார் அரசு பெரும்பான்மை சமூகத்தின் மக்கள் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதற்காக குறித்த பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதானது சர்வதேச அளவில் கடும் விமர்சனக்கனைகளை தோற்றுவித்துள்ளது.

மாஉங் சர்னி மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஒரு பௌத்தர். மனித உரிமை செயற்பாட்டாளர். அந்நாட்டு முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்.

மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பாக சர்வதேச தளத்தில் நின்று போராட்டங்களை நடாத்துபவர். மியன்மாரில் திட்டமிடப்பட்ட இன அழிப்பு அரங்கேறுவதாக மாஉங் சர்னி கூறுகிறார்.

தவிர ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினையை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட அதன் முன்னால் செயலாளர் நாயகம் கோபிf அனானின் தலைமையிலான விசாரணைக்குழு ரோஹிங்ய முஸ்லிம்களுக்கெதிரான மியன்மார் அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை எச்சரித்துள்ளதோடு பலப்பிரயோகத்தை தவிர்த்து சமாதான வழிகளில் குறித்த பிரச்சினைக்கு தீர்வை எட்ட உரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பரிந்துரை செய்திருந்தது.

அதேபோன்று உலகளவில் மலேசியா, பங்களாதேஷ் , இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்படும் இனச் சுத்திகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன. மற்றும் மியன்மார் நாட்டு அதிபரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டு அரசுக்கெதிராக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இலங்கையிலும் தலைநகர் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் ஊர் ஜமாஆத்தார்கள் , இஸ்லாமிய அமைப்புகள் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு தமது ஆதரவை தெரிவித்து அங்கு அவர்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்படும் மனித இன அழிப்பை எதிர்த்து ஆர்பரபாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றதோடு இலங்கையிலுள்ள மியன்மார் தூதரகத்துக்கு இது தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

சவூதி அரேபியாவின் முன்மாதிரி
சவூதி அரேபியாவுக்கு ரோஹிங்ய பிரச்சினையுடன் 70 வருட போற்றத் தக்க நிலைப்பாடுகள் இருக்கின்றன. சவூதி ஆரம்பம் முதல் அவர்களது பிரச்சினைக்கு உதவிய நாடு. சர்வதேச ரீதியிலும் ஐ.நாவின் மனித உரிமைகள் சபையிலும் அவர்களின் பிரச்சினையை கொண்டு சென்றது. அதுபோல் 1982 இல் அவர்களை குடிமக்களாக அங்கீகரிக்கும் படி மியன்மார் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

அது மட்டுமன்றி கல்வி, சுகாதார திட்டங்களுக்காக அவர்களுக்கு 50 மில்லியன் டொலர்களை செலவிட்டது. 1948 முதல் மூன்று இலட்சம் பேரை தனது பூமியில் அடைக்கலம் கொடுத்து வரவேற்றிருக்கிறது.

தொடர்ச்சியாக பலமுறை இந்த மக்கள் மீதான வன்முறையை, கொலை , மானபங்கம் பலவந்த வெளியேற்றம் , துன்புறுத்தல் , இனவழிப்பு என எல்லாவற்றுக்கும் அறிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக சவூதி வெளியிட்டுள்ளது.

அண்மையிலும் சவூதி வெளிவிவகார அமைச்சு கடந்த நிகழ்வுகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சர்வதேச சமுகத்தை இந்த அத்துமீறல்களுக்கு எதிரான கண்டனங்களை தெரிவிக்கும் படி கோரப்பட்டது. மேலும் சவூதி பல நடவடிக்கைகளை எடுத்தது. முதலாவதாக சர்வதேச அளவில் இந்த பிரச்சினையை விரைவாக கொண்டு செல்வது. அதற்காக ஐ.நா செயலாளரை உடனடியாக தொடர்பு கொண்டது. இதுகுறித்து ரியாத் பாதுகாப்பு சபையில் உள்ள முக்கிய நாடுகளுடன் தொடர்பு கொண்டது.

இஸ்லாமிய உலகின் தலைமை இடத்தில் இருந்து இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ரீதியில் தொடர்புகளை மேற்கொண்டு முழு முயற்சிகளையும் சவூதி எடுப்பது அனைவரினதும் அவசரகுரலாக உள்ளது. இந்த வகையில் துருக்கி , மலேசியா உள்ளிட்ட சில நாடுகள் ரோஹிங்ய பிரச்சினை விடயத்தில் கரிசனை காட்டி வருவது வரவேற்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *