Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!

படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!

Articleவிரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

சிந்திக்கும் திறன் உள்ளவனே மனிதன்! அண்டப் பெருவெளியின் மையத்தில் நிற்கும் அவனிடம் இயற்கையாகவே சில கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகள் அனைத்தும் அவனையும் அவனைச் சூழ்ந்திருக்கும் இப் பெருவெளியைக் குறித்தும் அறிய விரும்பும் அவனது ஆவலை வெளிப்படுத்துவதாகும். அறியாப் பாமரன் முதல் அறிவியலாளன் வரை அனைவரது உள்ளத்திலும் இக்கேள்விகள் எழுகின்றன. மனிதனுக்கு எப்போது அறிவும் சிந்தனையும் வழங்கப்பட்டதோ அன்று முதல் அவன் இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். நாகரீக வளர்ச்சியின் படித்தரங்களை ஆராய்ந்தால் இதுவே நமக்குப் புலப்படுகிறது.

மனிதனால் முன்வைக்கப்படும் கேள்விகளில் முதன்மையானது இப்பேரண்டத்தை உருவாக்கியவன் யார்? என்பதாகும். சிகரங்களின் உச்சியிலோ கடலின் அடியிலோ ஆகாயத்தின் வெளியிலோ அவற்றை உருவாக்கியவனின் பெயர் எழுதப்படவில்லை. ஆனால் மலைகள், கடல்கள், ஆகாய வெளி, காற்று, நீர் என ஒழுங்காகப் படைக்கப்பட்டிருக்கும் பெருவெளியின் ஒவ்வொரு அங்கமும் இதற்குப்பின்னால் வல்லமை மிக்க ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதற்கு அமைதியான சாட்சிகளாக இருக்கின்றன!

மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?

சிந்தனை செய்து இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள குர்ஆன் அழைக்கிறது!

படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது.

“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)”  (அல்குர்ஆன் 88: 17-20)

பரந்து வியாபித்திருக்கும் பேரண்டப் பெருவெளியின் அழகிய படைப்பைக் குறித்து ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் மாபெரும் படைப்பாளனின் அதியற்புத சக்தியை விளங்கிக் கொள்ள இயலும்! கற்பனைக் கதைகளுடனும் புரியாத தத்துவங்களுடனும் கடவுளைக் கற்பித்த புராதன கால கட்டத்திலேயே இஸ்லாம் இம்மா பெரும் பிரபஞ்ச நாதனின் வல்லமைகளைக் குறித்த அறிவுப் பூர்வமான விளக்கங்களை அளித்தது! கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96: 1 -4)

மேற்கண்ட வசனங்கள் மனிதனின் சிந்தனை உணர்வைத் தட்டியெழுப்பக் கூடியதாக உள்ளன.

இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் நம் நிலை எவ்வாறிருந்தது? நம் தந்தையின் உடலில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுவில் ஒரு அணுவாக, தாயின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகளில் ஒரு முட்டையாக வேறுபட்டுக் கிடந்த ஓர் ஆன்மா. பின்னர் விந்தணுவும் சினை முட்டையும் இணைந்த ஒரு கருவாக. பின்னர் முதிர்ச்சியடைந்த தசைப் பிண்டமாக. பின்னர் அதில் எலும்புகளும் மஜ்ஜைகளும் ஊருவாகி கண், காது மூக்கு, கை, கால் என எல்லா உறுப்புகளும் உருவாகி ஒரு முழு மனிதனாகப் பிறந்து வருகிறோம். இவ்வுலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களுள் ஒரு மனிதனாக நாமும் வாழ்கிறோம்! நம்முடைய உடலில் பல்வேறு செயல்பாடுகள். எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், சுவாச உறுப்புகள், ஜீரண உறுப்புகள், நோய் எதிர்ப்பு என வியக்கத் தக்க செயல்பாடுகள் நடை பெறுகின்றன. இன்னின்னவாறு செயல்படுங்கள் என்று நாம் அவ்வுறுப்புகளுக்குக் கட்டளையிடுவதில்லை! நாம் சாப்பிடுகிறோம், ஜீரணமாகிறது. உடலுக்குத் தேவையான சக்திகளை உணவிலிருந்து தயாரிக்க உறுப்புகள்! கழிவை வெளியேற்ற, இரத்தத்தைச் சுத்தீகரிக்க, சிந்திக்க, செயல்பட, எழுத, பேச என அனைத்தும் உடல் உறுப்புகளின் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும் வியத்தகு செயல்பாடுகள்! யாருடைய செயல்பாடு இதற்குப் பின்னால் உள்ளன? கண்ணுக்குத் தெரியாத கற்பனை செய்ய முடியாத இரு வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்த விந்தணுவையும் சினை முட்டையையும் இணைத்து நம்மைப் படிப்படியாக வளரச் செய்து முழு மனிதனாக்கிய அவ்விறைவனின் அதியற்புத ஏற்பாடு இது! இவ்வாறு படைத்த இறைவனே நம்மைப் படைத்த விதத்தை எடுத்துக்கூறி நம்மை சிந்திக்கச் சொல்கிறான். அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது. இதோ வல்லமை மிக்கவனாகிய அந்த இறைவன் குர்ஆனில் மக்களைப் பார்த்துக் கேட்கின்றான்.

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)

இவ்வாறான வசனங்கள் நம்மைப் படைத்தவனை நோக்கிய சிந்தனையின் பால் இட்டுச் செல்கிறது. அவ்விறைவனின் மகா வல்லமையை விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே மனிதனின் ஆன்மீக லௌகீக வாழ்வுகள் சீரடைகின்றன. இறை சிந்தனையைப் பற்றிய இன்னும் சில விபரங்களை அடுத்த பதிவில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.

2 comments

  1. very useful to me and my family,ensa allah i will show this page to my friends and my relatives thank for you.

  2. K.M. Seyed ibrahim

    Masha allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *