Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » சலப், சலபி – சரியான புரிதல்!

சலப், சலபி – சரியான புரிதல்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

சமீப காலமாக சலப் வழிமுறையை பின்பற்றுவது குறித்து அதிகமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதை பார்க்கிறோம். கவனித்துப் பார்க்கும்போது அது கூடாது என்று கூறும் பலரும் சலப் வழிமுறையைப் பின்பற்றுவதென்றால் என்ன என்ற தெளிவு இல்லாமலேயே சச்சரவு செய்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. எனவே இது குறித்த தெளிவை வழங்குவதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடியவனாக இதனை எழுதுகிறேன்.

முதலில் இந்த வார்த்தைகள் உணர்த்தும் கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.

சலப் என்ற வார்த்தைக்கு முன்னோர் எனபது பொருள். இது அஸ்ஸபுஸ் ஸாலிஹ் – நல்ல முன்னோர் – என்பதின் சுருக்கம். சலபி என்ற வார்த்தைக்கு முன்னோரைச் சார்ந்தவர் எனபது பொருளாகும் அதாவது நல்ல முன்னோரின் வழியில் நடப்பவர் எனபது கருத்து.

மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகளை நல்ல முன்னோர் எவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பவர், குர்ஆனையும் ஹதீஸையும் அவர்கள் எவ்வாறு அணுகினார்களோ அதே முறையில் அணுகுபவர் என்ற கருத்திலேயே குர்ஆன், ஹதீஸை பின்பற்றும் மக்கள் சலபி என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். நல்ல முன்னோர் குர்ஆனையும் ஹதீஸையும் அணுகிய முறை என்பது சுய கருத்து, மனோ இச்சை, தனது கூட்டத்தின் கருத்து ஆகியவற்றையெல்லாம் விட இவ்விரண்டுக்கும் முன்னுரிமை வழங்கி இரண்டையும் ஏற்று நடப்பதாகும்.

மேலும் அடிப்படை நம்பிக்கைகளான அல்லாஹ், அவனது பண்புகள், விதி உள்ளிட்ட நம்பிக்கைகளிலேயே சுய கருத்துக்களை நுழைத்ததால் வழிகேடுகள் தோன்றின. இதுபோன்ற வழிகேடுகளுக்கு அப்பாற்பட்டு தூய்மையான நம்பிக்கைகளை கொண்டவர்களாக இருந்த சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉதாபிஈன்கள் ஆகியோரின் வழிமுறையை குறிப்பிடுவதற்கும் சலப் வழிமுறை என்ற வாசகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சரியான அணுகுமுறைக்கு மாற்றம் செய்த கெட்ட பின்னோரால்தான் முஸ்லிம் உம்மத்தில் குழப்பங்களும் வழிகேடுகளும் ஏற்பட்டன. தவறான அணுகுமுறையால் வழி கெட்டுப்போனவர்கள் தாமும் குர்ஆன் ஹதீஸ் வழியில் இருப்பதாக வாதம் செய்து கொண்டிருப்பதால் சரியான அணுகுமுறை கொண்டவர்கள் ஒரு அடையாளத்துக்காக சலபி என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர் அவ்வளவுதான். இது ஒரு ஜமாஅத்தின் பெயரல்ல.பிரிவு அல்ல.

சரி! மேற்கண்ட கருத்தில் ஒருவர், தான் நல்ல முன்னோரின் வழிநடப்பதாக சொல்லிக்கொள்ளலாமா? சொல்லிக்கொள்ளலாம்!

அல்லாஹு தாஆலா நபிமார்கள் குறித்தும் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நல்லோர்கள் குறித்தும் பேசிவிட்டு, “இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால் இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக” என்று நபிக்கு கூறுகிறான்.(அல்குர்ஆன் 6: 90).

வஹியின் மூலம் வழங்கியிருப்பதையே பின்பற்ற வேண்டும் என்று நபிக்கும் நமக்கும் குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்தியுள்ள அல்லாஹ் மேற்கண்டவாரும் கூறியுள்ளான். இரண்டையும் முரண்பாடில்லாமல் புரிந்து கொள்கிறோம். இது போலவே சலப் வழிமுறையில் நடப்பது என்பது குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதற்கு முரணல்ல.

மேற்கண்ட வசனத்தை போலவே, “பின்னர் நேர்மையாளரான இப்ராஹிமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும் என்று நாம் உமக்கு வஹி அறிவித்தோம்” (16:123) என்ற வசனத்தின் கருத்தும் அமைந்துள்ளது.

இன்னொரு வசனம்: அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவ மன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். (4: 26)

நம்மை குர்ஆன் வழியிலும் நபியின் வழியிலும் நடக்க வேண்டுமென்று பல இடங்களில் வலியுறுத்தும் அல்லாஹ் இப்படியும் சொல்கிறான்.

இது சரிதான் எனும்போது குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுபவர்கள் நல்ல முன்னோரின் வழிமுறையில் நடப்பதாக சொல்வதும் சரிதான். இந்த கருத்தில்தான் நபித்தோழர்கள் உள்ளிட்ட மார்க்கத்தை நமக்கு எத்திவைத்த நல்லோர் எல்லாம் நபிதோழர்களையும் நல்ல முன்னோரையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கூறுகின்றனர். உதாரணத்துக்கு சிலருடைய கூற்றுக்களை கீழே தருகிறேன்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் முன்மாதிரியை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால் நபித்தோழர்களை முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள்ளவும். அவர்களே இந்த சமுதாயத்தில் மிக நல்ல உள்ளம் கொண்டவர்கள், ஆழமான கல்வி உடையவர்கள், குறைவாக சிரமம் எடுத்துக் கொள்பவர்கள், நேர்வழியில் நிலையானவர்கள், மிக அழகிய நிலையை உடையவர்கள். தனது நபியின் தோழமைக்காக அல்லாஹ் தேர்வு செய்த கூட்டம். எனவே அவர்களின் சிறப்பை ஒப்புக்கொள்ளுங்கள், அவர்களின் அடிச்சுவடுகளில் அவர்களை பின்பற்றுங்கள். ஏனெனில் அவர்கள் நேரான வழியில் இருந்தனர். (நூல்: ஜாமிஉ பயானில் இல்மி வபழ்லிஹி )

மிகப் பெரிய ஹதீஸ் அறிவிப்பாளரும் தபஉத் தாபியீன்களில் மூத்தவருமான அல் அவ்ஜாயி (ரஹ்) கூறுகிறார்கள்: மக்கள் உன்னை புறக்கணித்தாலும் முன் சென்றவர்களின் அடிச்சுவடுகளை நீ பற்றிப்பிடி! மனிதர்களின் கருத்துக்களை குறித்து எச்சரிக்கையாக இரு – அவர்கள் அலங்காரமாக பேசினாலும்! (நூல்: அஷ்ஷரீஆ (ஆஜுரி), ஷரபு அஸ்ஹாபில் ஹதீஸ் )

இப்னு மஸ்ஊத்(ரலி), அல் அவ்ஜாயி (ரஹ்) ஆகியோர் கூறியிருப்பது போன்று நல்வழியில் நடந்த அக்கால பெரியோர் பலரும் கூறியுள்ளனர். இக்காலத்தில் சிலர் சொல்வது போல் சலபுக்களின் வழிமுறையில் நடப்பது வழிகேடு என்றால் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அல் அவ்ஜாயி (ரஹ்) அவர்களும் வழிகேட்டை போதித்த வழிகேடர்கள் ஆவார்கள். (நவூது பில்லாஹ்) வழிகேடர்கள் என்றால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்றாகும். இவர்கள் இப்படிச் சொல்வார்களா?

இது போல் குர்ஆன்,ஹதீஸை நிலை நாட்டுவதற்காக பாடுபட்ட பெரிய அறிஞர்களும் சலபுக்களின் வழிநடக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்கள்.

இப்னு தைமியா (ரஹ்) கூறுகிறார்கள்: சலபுக்களின் வழியை வெளிப்படுத்தி அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் மீது குறையில்லை…. நிச்சயமாக சலபுக்களின் வழி சத்தியமானதாக தவிர வேறு விதமாக இருக்காது.(நூல்: மஜ்மூஉல் பதாவா – பா:4 பக்: 149)

இப்னு ஹஜர் (ரஹ்) கூறுவது: முழுமையான நன்மை எனபது சலபுஸ் சாலிஹை பின்பற்றுவதிலும் நபியின் ஹதீஸ் பற்றிய அறிவை அதிகரித்துக் கொள்வதிலும் உள்ளது…. (பத்ஹுல் பாரி- பா: 6 பக்: 505)

இதுபோல் மிகப் பெரிய இமாம்கள் பலரும் கூறியுள்ளார்கள். இவர்களெல்லாம் வழிகெட்டவர்கள் அல்ல.

ஆக மேற்கண்ட் விளக்கங்களின் படி நேர்வழியில் நடக்கும் ஒருவர், தாம் “சலபுஸ் ஸாலிஹ்” உடைய வழிமுறையில் நடைபோடுவதாக சொல்லிக் கொள்வது சரியான நடைமுறைதான்.

சட்டங்களில்
இங்கு முக்கியமான ஒரு விசயத்தைக் குறித்து பேசியாக வேண்டும். அது, வணக்கவழிபாடுகளிலும் வாழ்க்கை நடைமுறை சட்டங்களிலும் சலபுக்களின் சொல், செயலை அப்படியே பின்பற்றி நடக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் “சலபுக்களின் வழிமுறை” என்ற வாசகம் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த அர்த்தத்தில் இந்த வாசகம் பயன்படுத்தப்படுவதாக சித்தரிப்பது பெரிய தவறாகும். நாம் மேலே விளக்கியுள்ள கருத்திலேயே நன்மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

அப்படியானால் சலபுக்கள் என்ற நல்ல முன்னோர் மார்க்க சட்டங்கள் தொடர்பாக கூறியுள்ள, நடைமுறைப்படுத்தியுள்ள விசயங்களை எவ்வாறு அணுகுவது?

முதலில் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும்! குர்ஆனிலும் ஹதீசிலும் தெளிவாக கிடைக்கும் சட்டங்களில் சலபுக்களோ மற்றவர்களோ என்ன சொல்லியிருக்கிறார்கள், என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியதில்லை.

குர்ஆனிலும் ஹதீஸிலும் ஒரு சட்டம் வெளிப்படையாக கிடைக்காவிட்டாலும் அல்லது கிடைத்தாலும் அதை செயல்படுத்துவது எவ்வாறு என்பதில் தெளிவு கிடைக்காவிட்டாலும் குர்ஆனையும் ஹதீஸையும் நன்கு அறிந்தவர்கள் வாயிலாக அதனை தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் இன்று வரை பொதுவாக முஸ்லிம்களின் நிலை. மார்க்கம் கற்றவர்களும் கூட சில விசயங்களுக்கான தீர்வுகளை தம்மை விட நன்கரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். முந்தைய அறிஞர்கள் எழுதியதை படித்து தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த அடிப்படையில்தான் இது போன்ற நிலைகளில் முஸ்லிம்கள் சஹாபாக்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அடுத்து தாபியீன்கள், தபவுத்தாபிஈன்கள் ஆகியோரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஹதீஸ் நூல்களில்:
மேற்கண்ட காரணத்தினால்தான் மூல ஹதீஸ் நூல்கள் ஒவ்வொன்றிலும் சஹாபாக்களின் கூற்றுக்களும் செயல்களும் நூற்றுக்கனக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறை அறிஞர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தவறான நடைமுறையாகவும் வழிகேடாகவும் இருந்தால் எல்லா ஹதீஸ் நூற்களின் ஆசிரியர்களும் இப்படி செய்திருக்க மாட்டார்கள். சஹாபாக்களின் கூற்றுக்களும் செயல்பாடுகளும் ஹதீஸ் நூற்களில் கணிசமான அளவு இடம் பெறுவதால் இவை “ஹதீஸ் மவ்கூப்” என்று ஹதீஸில் ஒரு வகையாக ஆக்கப்பட்டுள்ளது. அசர் என்றும் குறிப்பிடப்படும்.

இவ்வாறு ஹதீஸ் நூல்களில் இடம்பெறும் சஹாபாக்களின் சொல், செயல்களுக்கு ஆதாரமாக புஹாரியிலிருந்து மட்டும் மிகச் சில உதாரணங்களை குறிப்பிடுகிறேன்.

இமாம் புகாரி அவர்கள் பெருநாள் குறித்த ஹதீஸ்களை பதிவு செய்யும்போது இவ்வாறு எழுதுகிறார்கள்: “பாடம்: பெருநாள் தொழுகை தவறிவிட்டால் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும்…. (பெருநாள் தொழுகை தவறிவிட்ட போது) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமை இப்னு அபீ உத்பாவுக்கு ஆணையிட்டு (பஸ்ராவிலிருந்து ஆறு மைல் தொலைவிலிருந்த) ஸாவியா எனும் இடத்தில் தம் மனைவி மக்களைத் திரட்டி நகரவாசிகள் தொழுவது போன்று (இரண்டு ரகஅத்துகள் ) தொழு(வித்)தார்கள்”

இங்கு பெருநாள் தொழுகை தவறினால் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்ற தலைப்புக்கு ஆதாரமாக அனஸ் (ரலி) அவர்களின் செயலை இமாம் அவர்கள் ஆதாரமாக எழுதுகிறார்கள். இதற்குக் கீழே, “பெருநாள் தொழுகை தவறிவிட்டால் (தனியாக) இரண்டு ரகஅத்துகள் தொழ வேண்டும்” என்ற அத்தாஉ (ரஹ்) அவர்களின் கூற்றையும் குறிப்பிடுகிறார்கள். (அத்தாஉ அவர்கள் பிரபலமான தாபஈ)

(பார்க்க: புகாரி 986 வது ஹதீசுக்குப்பின்)

மற்றொரு இடத்தில், “உயிரிணத்திற்கு பதிலாக உயிரினத்தையும் அடிமைக்கு பதிலாக அடிமையும் கடனாக (பிறகு தருவதாக) விற்பது” என்று தலைப்பிட்டுள்ள இமாம் புகாரி அவர்கள் கீழ்வரும் நபித்தோழரின் செயல்பாட்டை பதிவு செய்கிறார்கள்: “ஒட்டகத்தின் சொந்தக்காரர் தமது சொந்தப் பொறுப்பில் ரபதா எனுமிடத்தில் அதை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இப்னு உமர் (ரலி) அவர்கள் நான்கு ஒட்டகங்களை கொடுத்து பயணம் செய்வதற்கேற்ற ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள்”

இதனை தொடர்ந்து வேறு இரு சஹாபாக்களின் சொல்லையும் செயலையும் பதிவு செய்துள்ளார்கள். (பார்க்க: புகாரி 2227 ஹதீசுக்கு பின்)

மேலும், வக்ப் சொத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டவர் அதிலிருந்து தனது நண்பருக்கும் விருப்பமானவருக்கும் வழங்கலாம் என்பதற்கு ஆதாரமாக ஒரு தாபிஈயின் கூற்றையும் ஒரு சஹாபியின் செயலையும் இமாம் புகாரி பதிவு செய்துள்ளார்கள். பார்க்க: புகாரி 2313

இவ்வாறு புகாரியில் மிக அதிகமான இடங்களில் சஹாபாக்கள் உள்ளிட்ட சிறந்த தலைமுறையை சேர்ந்தவர்களின் கூற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புகாரி மட்டுமின்றி சிஹாஹ் சித்தா உள்ளிட்ட மூல ஆதாரங்களாக திகழும் ஹதீஸ் நூல்களிலெல்லாம் இவ்வாறான பதிவுகள் உள்ளன. இந்த ஹதீஸ் நூல்களோடு சிறிதளவு தொடர்பு உள்ளவருக்கும் இது தெரிந்த விசயம்தான்.

சிஹாஹ் சித்தாவுக்கு முன்னர் தொகுக்கப்பட்ட முசன்னப் இப்னி அபீ ஷைபா, முசன்னப் அப்திர் ரஸ்ஸாக் உள்ளிட்ட ஹதீஸ் நூல்களில் பெருமளவில் சஹாபாக்களின் கூற்றுக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

தபவு தாபிஈன்களிடம் மார்க்கம் பயின்றவரும் ஹதீஸ் அறிவிப்பாளர்களில் முக்கியமானவருமான இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுவது: இறை வேதமும் சுன்னாவும் ஆதாரமாக உள்ள விசயத்தை செவியுற்றவர் அதனை பின்பற்றாமல் இருக்க காரணம் சொல்வது துண்டிக்கப்பட்டதாகும். அதை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை. அவ்வாறு (ஆதாரம்) இல்லையானால் நாம் நபித் தோழர்களின் கூற்றுக்களை நோக்கி அல்லது அவர்களில் ஒருவரின் கூற்றை நோக்கி செல்வோம்…… நபித் தோழர்களில் இமாம்களாக இருப்போரிடமிருந்து (அபூ பக்ர், உமர், உஸ்மான், அலி (ரலி) ஆகியோரிடமிருந்து) கூற்று எதுவும் கிடைக்கப்பெறாவிட்டால் பிற நபித்தோழர்களும் மார்க்கத்தில் நம்பிக்கைக்குரிய இடத்தில் உள்ளனர். அவர்களின் கூற்றை நாம் எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு பின்னர் வந்தவர்களை பின்பற்றுவதை விட அவர்களை பின்பற்றுவதே நமக்கு ஏற்றமானதாகும். (நூல்: இமாம் பைஹகீயின் “மஅரிபதுஸ் சுனன் வல் ஆசார்” பா: 1 பக்: 183 – அல்மக்தபா அஷ்ஷாமிலா – பதிப்பு: 3.61)

இப்படி கூறும் இமாம் ஷாபிஈ அவர்களும், சஹாபாக்களின் கூற்றுக்களையும் செயல்பாடுகளையும் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்துள்ள ஹதீஸ் அறிஞர்களும் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றிய நல்ல மக்கள்தான். இவர்களின் இந்த நிலைப்பாடு குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதற்கு முரண்பட்டதல்ல.

இதன் பிறகும் இது வழிகேடு என்று தொண்டியாணி போன்றோர் சொல்வார்களானால் மார்க்கத்தை உம்மத்திற்கு எத்தி வைத்த மேற்கண்ட இமாம்களெல்லாம் வழிகேடர்களாவார்கள். ஏனென்றால் தொண்டியாணி போன்றோரின் வாதப்படி, இந்த இமாம்களெல்லாம் மார்க்கத்தில் மூன்றாவது ஆதாரத்தை உருவாக்கி ஓரிறை கொள்கையிலிருந்து தடம் புரண்டவர்கள். கப்ரு வணங்கிகளுக்கும் இவர்களுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை. (தொண்டியாணி தனது ஆன்லைன்பீஜே இணைய தளத்தில் வெளியிட்டுள்ள வழிகெட்ட சலபிக் கொள்கை என்ற கட்டுரையில் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.)

இந்த அளவுக்கு வழிகெட்டவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்கக்கூடாது. இதன்படி இவர்களின் நூல்களில் உள்ள ஹதீஸ்களையும் ஏற்கக்கூடாது என்று கூறும் நிலை ஏற்படும். அந்த நிலையை நோக்கித்தான் விரைந்து சென்று கொண்டிருக்கிறாகள் தொண்டியாணி போன்றோர்.

நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள், ஒரு விசயத்தில் குர்ஆன், ஹதீஸில் நேரடியான ஆதாரத்தை காண முடியாவிட்டால் பிற்காலத்தவரின் கூற்றுக்களை விட சஹாபாக்களின் கூற்றுக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள். அதற்குப்பின் அவர்களுக்கு அடுத்து வந்த தாபியீன்கள், தபவு தாபியீன்களின் கருத்துக்களை பார்கிறாகள்.

இதற்குக் காரணம் நபி ஸல் அவர்கள் இந்த மூன்று தலைமுறையினரையும் சிறந்த தலைமுறையினர் என்று பாராட்டி இருக்கிறார்கள். இந்த ஹதீஸை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் வந்த எல்லா தலைமுறையினரையும் விட அவர்கள் சிறப்பு அடைந்ததற்கு இறை நம்பிக்கையில் உறுதி தியாகம் ஆகியவற்றுடன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மிக நன்றாக கட்டுப்பட்டும் நடந்தார்கள். நம்மை விட சிறப்பான முறையில் நடந்தவர்களின் செயல்பாடுகளை தேவைப்படும் போது கவனித்துப் பார்ப்பது சரியான முறைதான்.

இதன் பிறகும் இதனை குறை கூறும் தொண்டியாணி போன்றோருக்கு நாம் கூறிக்கொள்வது: நீங்கள் மார்க்கம் குறித்து எதை எழுதினாலும் தலைப்பை எழுதி அதற்குக் கீழே ஆயத்துகளையும் ஹதீஸ்களையும் மட்டுமே எழுதுங்கள். உங்கள் விளக்கம் எதையும் எழுதாதீர்கள். இதை நீங்கள் செய்து விட்டு பிறகு வந்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டை குறை சொல்லுங்கள்.

அதே நேரத்தில் நபித்தொழர்களிடதிலும் மனிதர்கள் என்ற ரீதியில் தவறுகள் நிகழும் என்பதை நாம் மறுக்கவில்லை. மறதி, ஆதாரத்தை அறியாமல் இருத்தல், ஆய்வில் தவறுதல் போன்ற காரணங்களால் அவர்களிடம் தவறு நிகழ்ந்துள்ளது. அந்த தவறுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றுதான் கூறுகிறோம்.

புதிய வாதமா
சலபுஸ் சாலிஹீன்களின் வழிமுறையை எடுத்து நடக்க வேண்டும் என்று கூறுவது தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகளிடம் புதிதாக நுழைந்த தவறான வாதம் என்று சிலர் சித்தரிக்கிறார்கள். இது தவறாகும். ஏறத்தாள இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தொண்டியாணி தவ்ஹீத்வாதிகளுடன் இணைந்திருந்த போது சஹாபாக்களின் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்று பேசியிருக்கிறார். அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் உள்ள ஜமாஅத் எனபது சஹாபாக்களை குறிப்பிடுகிறது. அவர்களின் வழியில் நாங்கள் தான் நடக்கிறோம். ஆகவே நாங்கள்தான் உண்மையான சுன்னத் ஜமாஅத் என்று ஷிர்க், பித்அதில் ஈடுபடுவோருக்கு மறுப்பளித்து பேசி இருக்கிறார். இதுவெல்லாம் ஆடியோ பதிவுகளில் உள்ளது.

தவ்ஹீத்வாதிகள் இந்த சலப் எனும் வார்த்தையை புதிதாக கொண்டு வருவதாக பிதற்றுவோறுக்கு மறுப்பாக தெளிவான ஆதாரத்தை கீழே தருகிறேன். தெளிவடையுங்கள்!

தமிழகத்து தவ்ஹீத்வாதிகளின் மூத்த வழிகாட்டி ஷெய்க் கமாலுத்தீன் மதனி அவர்கள்

1979 ம் வருடம் மொழிபெயர்த்து எழுதி வெளியிட்ட “இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் வாழ்க்கை வரலாறு” என்ற நூலில் எழுதுவது:

சஹாபாக்களும்,தாபஈன்களும், அவர்களை பின் தொடர்ந்தவர்களும்,நான்கு இமாம்களும்,சலபுஸ்சாலிஹீன்களும் என்ன கொள்கையில் இருந்தார்களோ அவற்றையே நாங்களும் நம்புகிறோம்….

முதல் பதிப்பு

இது இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் கடிதத்தில் வரக்கூடியது. இது போல் வேறு சில இடங்களிலும் வருகிறது.

இதனை கமாலுத்தீன் மதனி அவர்கள் மொழிபெயர்ப்பாக எழுதியிருந்தாலும் இக்கருத்தை ஆமோதித்தும் சரிகண்டுமே எழுதியுள்ளார்கள். இமாம் இப்னு அப்துல் வஹ்ஹபின் கருத்துகளையும் வழிமுறையையும் மக்களிடம் எத்தி வைப்பதற்காகவும் இந்நூலை வெளியிட்டுள்ளார்கள்.

ஆக தமிழகத்து தவ்ஹீத்வாதிகள் சலபுக்களின் வழிமுறையை ஆரம்பம் முதற்கொண்டே கைக்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக “வழிகெட்ட கலபுக்கள்” (வழிகெட்ட பின்னோர்கள்) அழிச்சாட்டியத்தை அதிகமாக்கியிருப்பதால் நல்ல முன்னோர் வழிமுறை குறித்து அதிகம் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேறொன்றுமில்லை.

சலபு ஸாலிஹ் வழிமுறையில் நடப்பதாக கூறிக்கொள்ளும் சிலரும் அது குறித்து சில தவறான புரிதலை கொண்டிருக்கின்றனர். அது குறித்து மற்றொரு கட்டுரையில் பேசுவோம் இன்ஷா அல்லாஹ்.

வல்ல அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும் நான் அல்லாஹ்வின்பால் (உங்களை) அழைக்கின்றேன் நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்.அல்லாஹ் மிகத் தூய்மையானவன் ஆகவே அவனுக்கு இணைவைப்போரில் நான் ஒருவனல்ல. (அல்குர்ஆன் 12: 108)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *