Home » வரலாறு » ஷிஆக்கள் » கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் – கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-03

கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் – கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-03

கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள்

எல்லா நபித் தோழர்களை விடவும் அபூபக்ர்(ரலி) கலிபாவுக்கு உரித்துடையவர் என்பதற்கு நபிகளார் சுட்டிக் காட்டிய தகுதிகளும் தகைமைகளும் காரணங்களாக இருந்தன என்பதனை இந்த உம்மத் நன்கு விளங்கிக் கொண்டதற்கு மேலே கூறிய சான்றுகளும் பின்வரும் நபிமொழிகளும் ஆதாரங்களாக அமைந்தன.

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதையோ கேட்டார்.இப்போது போய் திரும்பவும் தம்மிடம் வரும்படி அப்பெண்ணுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ”நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லை யென்றால் என்ன செய்வது..?” என்று அப் பெண் கேட்டார். -அறிவிப்பாளர் கூறுகிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பதுபோல் அப்பெண் கேட்டார்- ”என்னைக் காண முடியாவிட்டால் அபூபக்ரிடம் செல்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பதில் சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) | நூல்: முஸ்லிம் 4756

இந்த ஹதீஸைப் பற்றி இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் விளக்கும் போது தனக்குப் பின் கிலாபத்திற்கு பொறுப்பானவராக அபூபக்ர்(ரலி) இருப்பார் என்பதை இவ்வதீஸ் தெரிவிக்கின்ற அதேவேளை நபிக்குப் பின் அலியும் அப்பாஸூம் கிலாபத்திற்கு தகுதியானவர் என்ற ஷீஆக்களின் வாதத்திற்கு மறுப்பும் உள்ளது என குறிப்பிடுகிறார்கள்.(நூல்: பத்ஹூல் பாரி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப்பட்டிருந்த போது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்து (உரையாற்றுகையில் , அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு அலங்காரமான இவ்வுலக வாழ்வு, அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு)வாழ்வு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடமிருப்பதையே தேர்ந்தெடுத்து விட்டார்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் மீண்டும் மீண்டும் அழுதார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி) ”தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார். அபூபக்ர் (ரலி) அவர்கள்தான் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”தமது செல்வத்தாலும் தோழமையாலும் எனக்குப் பேருபகாரம் செய்தவர் அபூபக்ர் அவர்கள்தான். நான் (என் சமுதாயத்தாரில் ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாக இருந்தால்,அபூபக்ரையே உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டி ருப்பேன்; எனினும், இஸ்லாமிய சகோதரத்துவமே போதுமானதாகும். (எனது) இந்தப் பள்ளி வாசலில் உள்ள வாசல்களில் அபூபக்ர் வாசலைத் தவிர மற்றவை விட்டுவைக்கப்பட வேண் டாம்”(அவை அடைக்கப்பட வேண்டும்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) | நூல்: புகாரி முஸ்லிம் 4748

இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறும் போது,
மார்க்கவிவகாரங்கள் மற்றும் குர்ஆனின் சில செய்திகளை கொண்டு அலியை குறிப்பாக்கி(முதன்பை;படுத்தி ) நபி(ஸல்) கூறினார்கள் என்ற ஷீஆவின் வாதத்தின் பொய்க்கு இதில் மறுப்புள்ளது என்றார்கள்.

இமாம் கத்தாபி மற்றும் இப்னு பதால் (ரஹ்) போன்றவர்கள் குறிப்பிடும் போது இந்த ஹதீஸில் கிலாபத் அபூபக்கர்(ரலி) அவர்களுக்குரிய என வெளிப்படையாக குறித்து சொல்லப்பட்டுள்ளது. அவர் கிலாபத்திற்கு உரித்துடையவர்; என்ற பலமான சுட்டிக் காட்டுதலும் இதில் உள்ளது.
குறிப்பாக நபி(ஸல்) அவர்கள் வாழ்வின் இறுதிப் பகுதியில் இருந்த வேளையில்; அபூபக்ரை தவிர வேறு எவரும் மக்களுக்கு இமாமத் செய்யக்கூடாது என் மக்களுக்கு கட்டளையிட்ட தன் மூலம் இதனை உறுதிப்படுத்தினார்கள்.

எனவே சிலர் ‘‘அபூபக்கரின் வாசல்” என்பது அவரது கிலாபத்தை குறிப்பதாகும் என வாதிடுகிறார்கள். அபூபக்கரை தவிர எவரும் கிலாபத்தை கோரக் கூடாது அபூபக்கர் அப்பொறுப்பை கோருவதில் எத்தவறுமில்லை என நபியவர்கள் கூறியது போன்று இச்செய்தி உள்ளது என்கிறார்கள்.
நூல்: பத்ஹூல் பாரி

செயல் ரீதியான இஸ்லாமிய கடமைகளில் மிகப் பெரிய கடமைத்தான் தொழுகை. அத் தொழுகையை முன்நின்று நடாத்துபவர் சமூகத்தின் தலைவராகஇருப்பார். நபி(ஸல்) அவர்களுக்குப்பின் அத்தலைமைத்துவ பொறுப்புக்கு அபூபக்ர்(ரலி) அவர்களை முற்படுத்தி; அவருக்குப்பின்னால் சஹாபாக்கள் அனைவரும் அணிவகுத்து நின்றார்கள்.

இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது, தொழுகைக்கு அபூபக்ர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் முற்படுத்தியது அவர்தான் சஹாபாக்களில் நங்கு அறிந்தவரும் நங்கு குர்ஆனை ஓதத் தெரிந்தவருமாவார். இந்த பண்புகள் உள்ளவரை முற்படுத்த வேண்டும் என்பதை நபிகளார் அறிவித்த உறுதியான செய்தியும் உள்ளது. அதாவது குர்ஆனை நங்கு ஓதத் தெரிந்தவர் சமூகத்திற்கு இமாமத் செய்யட்டும் அதில் எல்லோரும் சமமானவர்களாக இருந்தால் சுன்னாவை நன்கறிந்தவர் இமாமத் செய்யட்டும். அதிலும் சமமானவர்களாக இருந்தால் வயதில் மூத்தவர் இமாமத் செய்யட்டும். அதிலும் சமமானவர்களாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கௌ;வதில் முந்தியவர் இமாமத் செய்யட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள. இந்த தகுதிக்குரியவராக அபூபக்ர்(ரலி) திகழ்ந்தார்கள். (2) .
நூல்: அல்பிதாய வந்நிஹாயா 5: 256

ஆயிஷா (ரலி) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக (கலீபாவாக) ஒருவரை ஆக்குவதாயிருந்தால் யாரை ஆக்கியிருப்பார்கள்? என்று கேட்கப் பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ”அபூபக்ர் (ரலி) அவர்களை (ஆக்கியிருப்பார்கள்)” என்று பதிலளித்தார்கள். அபூபக்ருக்குப் பிறகு யாரை? என்று கேட்கப்பட்டது. அதற்கு உமர் (ரலி) அவர்களை” என்று பதிலளித்தார்கள். ”உமருக்குப் பிறகு யாரை?” என்று கேட்கப் பட்டபோது, ”ஆபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை” என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீமுளைக்கா (ரஹ்) | நூல்: முஸ்லிம்

இவ்வதீஸிற்கு இமாம் நவவி(ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம்கூறுகிறார்கள்: கிலாபத்திற்கு அபூபக்கர்(ரலி) அவர்களையும் அவருக்குப்பின் உமர்(ரலி) அவர்களையும் முற்படுத்த வேண்டும் என்பது சஹாபாக்களின் ஏகோபித்த முடிவாகும் என்பதற்கு அஹ்லுஸ் சுன்னா மக்களிடம் இதுவே சான்றாகும்;. மேலும் அபூபக்ர்(ரலி) அவர்கள் கிலாபத்திற்குரிய வர் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் வெளிப்படையாக குறிப்பிட்டு சொல்ல வில்லை என்பதற்கும் அஹ்லுஸ் சுன்னா மக்களுக்கு இதில் சான்று உள்ளது. எனவே அபூபக்ர்(ரலி) அவர்களின் சிறப்புக்காக அவரை முற்படுத்தி அவருக்கு உடன்படிக்கை செய்துகொடுக்க வேண்டும் என சஹாபாக்கள் ஏகோபித்து முடிவுசெய்தனர். அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறொருவருக்கு எதிராகவோ வெளிப்படையாக குறிப்பிட்டு சொல்லக்கூடிய சான்று வந்திருந்திருந்தால் அன்சாரின்களுக்குள் அல்லது ஏனையவர்களுக்குள் (கிலாபத் விட யத்தில்) ஆரம்பத்தில் பிரச்சனை எழுந்திருக்காது. மேலும் கிலாபத் குறித்து கூறிய செய்தியை மனனமிட்டு வைத்திருந்தவர் (எவரும் இருந்து) தன்னிடமுள்ள அச் செய்தியை கூறியிருந்தால் மக்கள் எல்லோரும் அச் செய்தியின் பால்போய் இருப்பார்கள். எனவே ஆரம்பத்தில் (சஹாபாக்களிடையே) முரண்பாடு இருந்ததற்கு காரணம் அங்கு குறிப்பட்டு சொல்லும் படியான சான்று இல்லாததேயாகும். பிறகு மக்கள் அபூபக்ர்(ரலி) அவர்களை கலீபாவாக நியமிக்க உடன்பட்டார்கள். ஆட்சியும் அப்படியே நிலைப் பெற்றது.
நபிக்குப் பின் அலிக்கு இந்த ஆட்சி குறித்து சொல்லப்பட்டது அவருக்கு வஸியத்தும் செய்யப் பட்டது என்ற ஷீஆவின் வாதத்தை பொறுத்தவரை அது பொய்யானதாகும். முஸ்லிம் களின் ஏகோபித்த முடிவின் படி அதற்கு எந்த அடிப்படையும் இல்லாததுமாகும். அலியுடைய காலத்தில் இருந்தவர்களின் (ஷீஆவின்) வாதமும் பொய்யானதாகும் என்பதும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் முடிவாகும்.

எங்களிடம் இந்த ஏட்டில் இருப்பதை தவிர வேறொன்றுமில்லை என்று அலி(ரலி) அவர்கள் கூறி அந்த ஏட்டில் உள்ளதை மக்களிடம் வாசித்து காட்டி (ஆட்சி அதிகாரம் சம்பந்தமாக எதுவும் இல்லை என்று) கூறிய வார்த்தையிலிருந்து ஆட்சி அலிக்குரியது என்ற வாதத்தை கூறியவர்களை (ஷீஆக்களை) முதலில் பொய்யாக்கியவரும் அலி(ரலி) அவர் களாவர். ஆட்சி அதிகாரத்திற்கான ஆதாரம் அலி(ரலி) அவர்களிடம் இருந்திருந்தால் அதனை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பார்கள். எக்காலத்திலும் இது குறித்து அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட வுமில்லை ஒருவரும் அவரிடம் இதுசம்பந்தமாக பேசியதுமில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
நூல்:ஷரஹ் அந்நவவி, சஹீஹ் முஸ்லிம்

நபி(ஸல்) அவர்களுக்குப் பின் இந்த சமூகத்திற்கு யார் கலீபாவாக வரவேண்டும் என்ற கணிப்பு எப்படி இருந்தது என்பதை ஆயிஷா(ரலி) அவர்கள் இச் செய்தியின் மூலம் தெளிவுப்படுத்துகிறார்கள். இக்கணிப்புக்கு ஏற்றாற் போலவே சஹாபாக சமூகத்தின் நடவடிக்கையும் இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது, ”உன் தந்தை (அபூபக்ர்) அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்துவா. நான் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன். ஏனென்றால், (தாமே கலீஃபாவாக ஆக வேண்டுமென) எவரும் ஆசைப்படவோ, ”நானே (அதற்குத்) தகுதியானவன் எனறு எவரும் சொல்லிவிடவோகூடும் என நான் அஞ்சுகிறேன். (ஆனாலும், அவ்வாறு வேறொருவர் முன்னிறுத்தப்பட்டாலும்) அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர் என்று சொன்னார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) | நூல்:முஸ்லிம்

இமாம் நவவி (ரஹ்) குறிப்பபிடும் போது இந்த ஹதீஸில் அபூபக்ர்(ரலி) அவர்களுக்குரிய சிறப்பு வெளிப்படையாக கூறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.மேலும் நபியின் வபாத்திற்குப் பின் நடக்கபோகும் செய்திப் பற்றியும் நிச்சயமாக முஸ்லிம்கள் அபூபக்ரின் கிலாபத்தை தவிர ஏனையவர்களின் தலைமை மறுப்பார்கள் என்ற செய்தியும் உள்ளது.(நூல்: ஷரஹ் சஹீஹ் முஸ்லிம்)
இந்த முன்னறிவிப்புக்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அபூபக்ர்(ரலி) அவர்கள் கலீபாவாக தகுதியானவர் என்று தெரிவிக்கின்றன. பௌர்னமி இரவு போல் தெளிவாக தெரியும் இந்த உண்மைகளை ஷீஆக்கள் மனமுரண்டாக மறுக்கின்றனர்.
அபூபக்ர்(ரலி) அவர்கள் கலீபாவாக தெரிவான பின் மக்களை பார்த்து பேசும் போது ஒரு பொழுதேனும் இந்த அதிகாரத்திற்கு நான் ஆசைப்பட்டது கிடையாது. இரகசியமாகவோ பகிரங்கமாகவோ இதை கேட்டதும் கிடையாது என்றாலும் குழப்பம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சி இதனை ஏற்றுக்கொண்டேன். இந்த அதிகாரத்தில் எனக்கு எந்த நிம்மதியும் இல்லை. எனக்கு எந்தவொரு சக்தியும்; உதவியும்; இல்லாத பெரும் ஒரு பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுளளேன். அல்லாஹ் என்னை பலப்படுதினாலே தவிர வேறொன்றுமில்லை என கூறிய போது; அது உண்மைத்தான் என முஹாஜிர்கள ஏற்றுக் கொண்டார்கள்.

அப்போது அலி(ரலி) அவர்களும் சுபைர்(ரலி) அவர்களும் ‘‘ இந்த தலைமைத் தெரிவின் போது நடந்த ஆலோசனையில் நாம் பிற்படுத்தப் பட்டோம் என்ற கோபம் நமக்கு இருந்ததே தவிர வேறதுவும் நமக்கில்லை நிச்சயமாக அபூபக்ர்(ரலி) அவர்கள் மக்களில் அதிகாரத்திற்கு மிகத் தகுதியானவர் என்று நாம் கருதுகின்றோம். நிச்சயமாக அவர் நபிகளாருடன் குகையில் இருந்த தோழராவார். நிச்சயமாக அவருக்கு கண்ணியமும் சிறப்பும் உள்ளது. நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தொழுகை நடாத்தும் படி அபூபக்கர்(ரலி) அவர்களுக்குத் தான் கட்டளை யிட்டார்கள் என கூறினார்கள்.(3) (நூல்: முஸ்தத்ரக் ஹாகிம், பிதாயா வன்னிஆயா)
மேலும் அலி(ரலி) அவர்கள் கூறும் இன்னுமொரு அறிவிப்பில் ‘‘ நபி(ஸல்) அவர்கள் மரணத்தபின் எங்களது விவகாரங்களுக்கு யாரை பொறுப்பாளராக ஆக்குவது என அவதானித்த போது நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தும் படி அபூபக்ர்(ரலி) அவர் களை முற்படுத்தியதை அவதானித்தோம். எங்கள் மார்க்க விவகாரத்திற்கு அல்லாஹ் வின் துhதரினால் பொருந்திக் கொண்ட அபூபக்ர்(ரலி) அவர்களை எங்கள் உலக விவகாரங களுக்கும் பொருந்திக் கொண்டு அவரை முற்படுத்தினோம் என்றார்கள்.(4)
நூல்: தபகாத் இப்னு ஸஹ்த்,பாகம் 3 பக்கம் 183 தாரீகுல் குலபாஉ பக்கம்12

‘‘அபூபக்ர்(ரலி) கலீபாவாக நியமிக்கப்பட்ட பின் அலி(ரலி) அவர்கள் முதலாவது நாள் அல்லது இரண்டாவது நாள் (பைஅத்) உறுதிப்பெறுமானம் செய்தார்கள். இது தான் உண்மை. நிச்சயமாக அலி(ரலி) அவர்கள் ஒரு நேரமாவது அபூபக்ர்(ரலி) அவர்களைவிட்டும் பிரிந்திருக்க வில்லை அவர்கள் தொழுகை நடாத்தும் போது அவர்களுக்கு பின் தொழாமல் பின்நின்றது மில்லை (5)
நூல்: பிதாயா வன்னிஆயா, அல்கவ்கபுத் துர்ரிய் பீ ஸீரதி அபீ ஸிப்தைனி அலி(ரலி) பக்கம்86

அபூபக்ர்(ரலி) அவர்கள் கலீபாகவாக தெரிவுசெய்யப்பட்ட பின் மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருந் தார்கள். அவர்களுக்குள் பிளவுகளோ முறுகல்;களோ விரோதங்களோ அல்லது குழுரீதியான போராட்டங்களோ இருக் கவில்லை.
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் செய்தியை பாருங்கள்.

நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன் வாசிகளில் ‘தூ கலாஉ’ மற்றும் ‘தூ அம்ர்’ ஆகிய இருவரை சந்தித்தேன். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது தூஅம்ர் என்னிடம், நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்து போய் மூன்று நாட்கள் கடந்துவிட்டன என்பதை உங்க ளுக்குத் தெரிவிக்கிறேன் என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்து கொண்டிருக்கும்போது மதீனாவின் திசை யிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்து கொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூபக்ர் கலீஃபாவாக (ஆட்சியா ளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனைவரும் நல்லவர்களாக உள்ளனர் என்று பதிலளித்தனர்.
உடனே, தூகலாஉ மற்றும் தூஅம்ர் இருவரும்,நாங்கள் இருவரும் வந்திருந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம் என்று உங்கள் தோழரிடம் (அபூ பக்கரிடம்) சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.

நான் அபூபக்ர் அவர்களிடம் யமன் வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூ பக்கர் அவர்கள், அவர்களை (என்னிடம்) நீங்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், ‘ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். எனவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வரை நன்மையில் இருப்பீர்கள். (ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவ தாயிருந்தால், ஆட்சித் தலைவர்களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடை வதைப் போன்றே திருப்தி யடைவார்கள் என்று கூறினார்கள். (நுர்ல்:புகாரி)

அப்துல்லாஹ் இப்னு ஸபா வரும் வரை (சுமார் 35 வருடங்கள் வரை) மக்களிடத்தில் கிலாபத் விடயத்தில் எந்த விதமான முரண்பாடுகளும் இருக்க வில்லை. அன்று களத்தில் வாழ்நத் அனைவரும் நேரடியாக கலந்து பேசி முடிவு செய்து நியாயமான தீர்வுக் கண்டு முடித்த விவகாரத்தில் எவ்வித சம்பந்த முமில்லாத இப்னு ஸபாவின் கூட்டம் தலையிடுவது மழை பெய்யும் போது நாய் குரைத்த கதையாக இருக்கிறது. ஷீஆக்களின் விஷமத் தனம் சமூகத்தையேசீரழித்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *