Featured Posts
Home » பொதுவானவை » பள்ளி இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்

பள்ளி இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்

எம்.ஐ அன்வர் (ஸலபி)

பள்ளிவாசல்களில் இமாமத் பணியில் ஈடுபடும் இமாம்களின் தொழில் மற்றும் வாழ்வாதார நிலை பற்றி இன்று அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுவது கிடையாது. சமூகத்தளத்தில் பள்ளிவாயல் இமாம்களின் பிரச்சினை குறித்து பெரும்பாலும் யாரும் அழுத்தம் கொடுத்து பார்ப்பதுமில்லை. முஸ்லிம் சமூக மரபில் ஓரங்கட்டப்பட்ட ஒரு தரப்பினராக சிலவேளை அவர்கள் நோக்கப்படும் துரதிஷ்ட நிலையும் இல்லாமலில்லை. பள்ளிவாயல் நிருவாகிகளின் அதிகாரப் பிரயோகத்திற்குள்ளும் அளவுகடந்த நெருக்குவாதங்களுக்கு மத்தியிலும் தனிமனிதனாக நின்று குடும்ப வாழ்க்கை தொழில் எதிர்காலம் என்ற இரு துருவங்களுக்குள் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு போக இமாம்கள் நடத்தும் ஜீவனோபாயப் போராட்டம் சொல்லும்தரமன்று. இத்துறையில் பள்ளிவாசல் முஅத்தின்மார்களின் பிரச்சினைகளும் சம அளவிலான கவனயீர்ப்பை பெறவேண்டியுள்ளது.

பள்ளிவாசல் நிருவாகத்தால் தமக்கு மாதாந்தம் கிடைக்கப்பெரும் சம்பளத்தை நம்பிய நிலையலேயே பெரும்பாலான இமாம்களின் குடும்ப வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. அதிகரித்த வரவு செலவுகளுக்கு மத்தியில் இன்றைய கால நிலையில் ஒரு நடுத்தர குடும்பத் தலைவன் கூட தனது குடும்பத்தாரின் அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பல திண்டாட்டங்களை சந்திக்கும் போது மாதாந்தம் 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் மாதச் சம்பளம் கிடைக்கப்பெறும் ஒரு பள்ளி ஹஸ்ரத்தால் எப்படி தனது குடும்பத்தாரின் தினசரி தேவைகள் உற்பட ஏனைய கல்வி மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியுமாக இருக்கும் என பிரக்ஞைபூர்வமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

பெரும்பாலும் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்கான ஊதியம் குறித்த மஹல்லாவில் வாழும் ஊர் வாசிகளிடமிருந்து மாதாந்தம் வசூலிக்கப்படும் குடும்ப வரி அல்லது நன்கொடை நிதிகளிலிருந்தே வழங்கப்படுகிறது. சிலவேளை நன்கொடைப் பணத் தொகைகளை சேகரிப்பதில் கால தாமதம் ஏற்படும் போது குறித்த ஒரு மாத சம்பளத்தொகையை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வது சிரம சாத்தியமான விடயமாக உள்ளது. கிராமப் புறங்களில் இந்நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. ஒரு சில நகரப்புறங்களில் பள்ளிவாயல்களின் பெயரில் இயங்கும் கடைத்தொகுதிகள் மற்றும் தோட்டங்கள் போன்ற அசையாச் சொத்துக்களின் வருவாய்களிலிருந்து மெளலவிமார்களுக்கான சம்பளம் வழங்கப்படும் ஏற்பாடுகள் காணப்படுவதால்
இந்த நிலை ஓரளவு திருப்திகரமானதாக உள்ளது என மன நிறைவு அடைந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் பள்ளிவாசல் மெளலவிமார்களுக்கு தனது மேலதிக வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக அவர்களுக்கு தனிப்பட்ட தொழில்களில் ஈடுபட பள்ளிவாயல் நிருவாகத்தால் அனுமதி அளிக்கப்படுவதில்லை அல்லது அவகாசம் கிடைக்கப் பெறுவதில்லை. சில இடங்களில் இமாம்களின் தனிப்பட்ட விவகாரங்களில் நிருவாகிகளின் தலையீடு அதிகமாக இருப்பது இந்த நிலையை மேலும் சிக்களாக்குவதாக அமைந்துவிடுகிறது. இன்று அல்குர்ஆன் மதரஸாக்கள் பள்ளிவாயல்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால் குறித்த குர்ஆன் வகுப்புகளிலிருந்து மாணவர்களிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் கட்டணத் தொகை ஹஸ்ரத்மார்களின் பொருளாதாரத்தின் மேலதிக வருவாயாக கொள்ளப்படுகிறது.

பள்ளிவாசல் இமாமத் பணியில் ஈடுபடும் ஹஸ்ரத்மார்களின் தொழில் குறித்த உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையில் தனது பணியை மேற்கொண்டு செல்லும் ஓர் இமாம் தனது சம்பள உயர்வு குறித்து ட்ரஸ்டி போட்டிடம் பேச முனையும் போது மெளலவிமார்கள் மலிந்த சூழலில் சில கராரான நிருவாகிகள் இமாமை நோக்கி விரும்பினால் இருங்கள் இல்லையென்றால் சென்றுவிடுங்கள் என்று கூறிவிடுகின்றனர். மெளலவிமார்களுக்கு பஞ்சம் நிலவும் இடங்களில் இந்நிலை சற்று குறைவாக இருந்தாலும் ஹஸ்ரத்மார்களின் குடும்ப வறுமை மற்றும் இயலாமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதைவிட்டால் இவருக்கு நாதி இல்லை என்று நினைத்து சம்பள உயர்வு பற்றி சிந்தக்காத ஒர் அசமந்த போக்கான நிலையே பள்ளிவாயல் நிருவாகிகளிடம் காணப்படுகிறது. இதனால் விரக்தியின் விளிம்பு நிலைக்கு செல்லும் சில இமாம்கள் பள்ளிவாயல் நிருவாகத்தோடு முரண்பட்டு பணியை தொடர்வதும் சில வேளை தாமாக விலகிச் செல்லும் நிலையும் ஆங்காங்கே நடைபெறுவதும் உண்டு.

பள்ளிவாசல் நிருவாகிகள் மெளலவிமார்களை மலக்குகளாக நோக்கும் ஒரு மனோபாவமும் உள்ளது. மனிதன் என்றடிப்படையில் அவர் விடும் சில தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்புபட்ட தவறுகளை ஊதிப் பெருப்பித்து இந்த உலகத்தில் வாழ தகுதியில்லாதவர் போல காட்சிப்படுத்த முயல்கின்றனர். நிருவாகத்தோடு அதிருப்தியுற்று மஸ்ஜித் கடமையிலிருந்து விலகிச் செல்லும் இமாம்களின் சுய ஆளுமைகளை கேள்விக்குற்படுத்தும் வகையில் அவர் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதனை சந்தைப்படுத்த முயலும் சில மனிதர்களும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

அது தவிர பள்ளிவாசல் இமாம்களாக கடமையாற்றும் மெளலவிமார்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினையும் இங்குண்டு. அதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை நாட்களின் அளவாகும். தனது சொந்த ஊரில் கடமைபுரியும் இமாம்களை பொருத்தமட்டில் அவசியப்படுமிடத்து தவிர நீண்ட விடுமுறை தேவையற்றவர்கள். அதே நேரம் வெளியூர்களில் கடமையாற்றும் இமாம்கள் விடுமுறை பெற்றுக் கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்த வகையில் தனி ஓர் இமாமை மாத்திரம் கொண்ட பள்ளிவாயல் இமாம்கள் படும் பாடு பெரும்பாடாகும். அவர்களுக்கு அவசியப்படுமிடத்து மேலதிக விடுமுறையை பெற்றுக்கொள்வது ஒரு புறமிருக்க தமக்கென்று ஒதுக்கப்பட்ட விடுமுறை நாட்களைக் கூட பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுவதில்லை. தனது மனைவி பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இப்படியான நெருக்குவாதங்களுக்குள் சிக்கிக்கொண்ட ஹஸ்ரத்மார்கள் பல இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் பள்ளிவாயல் மெளலவிமார்களின் வாழ்க்கை தண்ணீருக்குள் அழும் மீன்களின் நிலை போல பிறருக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பது வேதனைக்குறியது. இந்த வகையில் வெளியூர்களில கடமைபுரியும் மெளலவிமார்களுக்கு குடும்பத்தோடு வசிப்பதற்கான ஒழுங்குகள் சில இடங்களில் செய்து கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே!

உண்மையிலேயே இமாமத் மற்றும் கொத்பா பணிகள் என்பவை பணம் சம்பாதிப்பதற்கான தொழில்களன்று மாறாக அவை இறை திருப்தியை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்படும் சேவைகளே என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. இருந்தபோதிலும் குறித்த பள்ளி ஹஸ்ரத்மார்களின் வாழ்வாதாரம் குடும்ப வாழ்க்கையின் செலவீனங்களை ஈடுசெய்ய பொருளாதாரம் இன்றியமையாததாக இருப்பதால் அந்தப் பணியை ஊதியம் பெற்றுத்தான் நடத்த வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

பள்ளிவாயல்களில் இமாமத் பணியில் பணியாற்றும் மெளலவிமார்கள் பொதுவாக அரபுக் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறுபவர்களே ஆவர். எனவேதான் ஆலிம்களின் ஆளுமை விருத்தி, கல்வித் தரம், மற்றும் நிர்வாகத் திறமை போன்றவை குறித்தும் இங்கு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

அரபு மதரஸாக்களில் ஏழு வருட கால ஷரீஆத் துறை பட்டப்படிப்பை நிறைவு செய்து கையில் ஷஹாதாவுடனும் தலையில் தலைப்பாகயுடனும் மெளலவி என்ற சூரத்தோடு மதரஸாவிலிருந்து வெளியேறும் உலமாக்களின் உள்ளங்களில் எழும் கேள்வி அல்ஹம்துலில்லாஹ் எப்படியோ மெளலவிப் பட்டம் பெற்று வெளியேறியாச்சு அடுத்தகட்ட நகர்வு என்ன? என்பதுவே அதுவாகும்.

இத்தகைய சூழ்நிலையில் வெறுமனே ஷரீஆ புலமைத்துவ அறிவோடு மாத்திரம் வெளியேறும் உலமாக்களை பொருத்தமட்டில் விரும்பியோ விரும்பாமலோ தனது எதிர்கால வாழ்க்கையைக் கவனத்திற் கொண்டு ஒரு பள்ளிவாயலில் இமாமாக போய் இணைந்தால் போதும் என்று நினைக்கும் மனோபாவமே அதிகமானவரிடத்தில் இருக்கிறது. எனவேதான் சமூகம் எதிர்பார்க்கும் கல்வித்துறை சார்ந்த அடைவுமட்டத்தை பூர்த்திய செய்யாத மெளலவிமார்களை சமூகம் தங்களது சன்மார்க்க தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாத்திரம் கறிவேப்பிலையாக உபயோகித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு தலைப்படுகிறது. இந்த இழி நிலைக்குறிய காரணங்கள் கண்டறியப்பட்டு களையப்படல் வேண்டும்.

மார்க்கம் படித்தவர்கள் பற்றி சமூகத்தில் நல்ல பார்வையும் மறியாதையும் இருக்கிறது. எனவே அந்தக் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் பாதுகாத்துக்கொள்ள மெளலவிமார்கள் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தின் தேவைகளை ஈடு செய்யும் வகையில் மெளலவிமார்களை உற்பத்தி செய்யும் அரபுக் கல்லூரிகள் தமது கல்வி நிலையங்களின் பாடத்திட்டங்கள் குறித்து மீள்வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மெளலவிமார்களும் தமது கற்றல் நடவடிக்கைகளை திறமையாக அமைத்துக் கொண்டு சிறந்த ஆளுமைகளாக தங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பள்ளிவாசல் மற்றும் முஅத்தின்மார்களின் ஊதியம் மற்றும் காப்புறுதி குறித்த சட்டபூர்வமான ஏற்பாடுகள் வரையப்படல் வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட ஆவண செய்யப்படல் வேண்டும். முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் போன்று தமது கோரிக்கைகளை(Demands) முன்வைத்து பள்ளிவாயல் இமாம்களும் முஅத்தின்களுமாக இணைந்து நாடு தழுவிய அளவில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என்றால் நிலமை என்னவாகும்(?)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *