Featured Posts
Home » இஸ்லாம் » மறுமை » மறுமையில் முதல் தீர்ப்பு [உலக அழிவும், மறுமை விசாரணையும்-5]

மறுமையில் முதல் தீர்ப்பு [உலக அழிவும், மறுமை விசாரணையும்-5]

உலகம் அழியும் போதும், மறுமை நாளில் ஏற்ப்படும் பல நிகழ்வுகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன்.

நாம் உலகத்தில் செய்த அனைத்து விடயங்களையும் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்பட இருக்கிறோம். அவற்றில் முதலாவதாக விசாரிகப்படும் செயலை நபியவர்கள் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (புகாரி 6864)

மோசடிகாரர்களுக்கு கொடி…
இந்த உலகத்தில் வாழும் போது யாருக்காவது எந்த வழியிலாவது மோசடி செய்திருந்தால் குறிப்பாக பிறருடைய ஏதாவது பொருளை அநியாயமாக அபகரித்திருந்தால், இவன் மோசடிகாரன் என்பதற்கு அடையாள சின்னமாக ஒரு கொடி வழங்கப் படும் என்பதை பின் வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துகிறது.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது ‘இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)’ என்று கூறப்படும். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 6178)

மேலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும். மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்; கால்குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது. (பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தனது வாயைத் திறந்தநிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது “நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக்கொள். அது எனக்கு வேண்டாம்” என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் அறியும் போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1806)

மூன்று பேருக்கு எதிராக வழக்கு ?…
மறுமை நாளில் பலவிதமான காட்சிகளுக்கு மத்தியில் அல்லாஹ் சில மக்களுடன் வழக்காடுவான். அவர்களில் மூவர்களை பின் வருமாறு நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 2227)

மூன்று பேரை அல்லாஹ் பார்க்க மாட்டான்…
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.

  1. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
  2. இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன்.
  3. மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, ‘எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.

இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்…’ என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 2358)

ஸகாத்து பொருள் பாம்பாக மாறும்…
இந்த உலகில் ஸகாத் கொடுக்க தகுதியிருந்தும் அதற்கான ஸகாத்தை கணக்குப் பார்த்து கொடுக்கவில்லையானால்,அவைகள் மறுமை நாளில் பாம்பாக மாற்றப் பட்டு, அவரின் கழுத்தை சுற்றி வேதனைப்படுத்தும் என்பதை நபியவர்கள் பின் வருமாறு எச்சரிக்கிறார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்’ ‘நானே உன்னுடைய புதையல்’ என்று கூறும்.’
இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.’ என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 1403)

துருவி, துருவி விசாரிக்கப்பட்டவன் அழிந்தான்…
பொதுவாக மறுமை நாளில் அனைவரும் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள். அதே நேரம் யார் துருவி, துருவி விசாரிக்கப்படுகிறாரோ அவரின் நிலை மோசமாக அமைந்து விடும் என்பதை பின் வரும் ஹதீஸ் எச்சரிக்கிறது.

“ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ‘எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக்கரத்தில் வழங்கப்படுமோ, அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:8 வது வசனத்தில்) கூறுகிறான்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்ற் மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான்’ என்று கூறினார்கள். (புகாரி 4939)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *