Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)

101) சூரதுல் காரிஆ – திடுக்கிடும் செய்தி
அத்தியாயம் 101
வசனங்கள் 11

மறுமையின் அவலங்கள் தொடர்பாக இந்த அத்தியாயம் பேசுகின்றது. பொதுவாக மக்காவில் இறங்கிய அத்தியாயங்கள் மறுமையை நினைவூட்டுவதை அவதானிக்கலாம். காரணம் மக்காவாசிகள் மறுமையை பொய்பித்துக் கொண்டிருந்தனர்.

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

அவன் தங்குமிடம் ‘ஹாவியா’ தான்.

இன்னும் (‘ஹாவியா’) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.(101:3-11)

102) சூரதுத் தகாஸுர் -அதிகம் தேடுதல்
அத்தியாயம் 102
வசனங்கள் 8

நீங்கள் மண்ணறைகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களை பராக்காக்கிவிட்டது என்று அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மனிதனின் பேராசை தொடர்பாக சுட்டிக்காட்டுகின்றான். ஆனால் இதன் விளைவை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நரகத்தை பார்க்கும் போது உறுதியான அறிவாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இந்த உலகில் உங்களுக்கு வழங்கப்பட்ட அருட் கொடைகள் தொடர்பாக கேட்கப்படுவீர்கள் என்று இந்த அத்தியாயத்தை முடிக்கின்றான்.

நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.

பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (102:6-8)

103) சூரதுல் அஸ்ர் – காலம்
அத்தியாயம் 103
வசனங்கள் 3

காலத்தின் மீது சத்தியம் செய்து மனித குலமே நஷ்டத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். இந்த மிகப் பெரும் நஷ்டத்தில் இருந்து எம்மை காத்துக் கொள்வதற்கான வழிகளையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

காலத்தின் மீது சத்தியமாக.

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு

ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து,

சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து,

மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ

அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)

104) சூரதுல் ஹுமஸா – புறம்பேசுதல்
அத்தியாயம் 104
வசனங்கள் 9

உலக வாழ்க்கை தான் நிறந்தரமானது என நினைத்துக் கொண்டு, செல்வத்தை சேகரிப்பதிலும் சக மனிதனின் குறைகளை தேடுவதிலும் காலத்தை கலித்துக் கொண்டு இருக்கும் மக்களை பற்றி இந்த அத்தியாயம் பேசுகின்றது. நாளை மறுமையில் அப்படிப்பட்டவர்களுக்கு உள்ள கடுமையான வேதனையையும் இறைவன் எமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (104:1-9)

105) சூரதுல் பீல் – யானை
அத்தியாயம் 105
வசனங்கள் 5

புனித கஃபாவை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஸன்ஆவில் இருந்து பெரும் யானைப்படையுடன் வந்த ஆப்றஹா மன்னனையும் அவன் படையையும் எவ்வாறு அழித்து உலக மக்களுக்கே ஒரு பெரும் படிப்பினையாக்கினான் என்ற வரலாறு இவ்வத்தியாத்தில் கூறப்படுகின்றது.

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:1-5)

106) சூரதுல் குறைஷ் – குறைஷிகள்
அத்தியாயம் 106
வசனங்கள் 4

மக்கத்துக் குறைஷிகளுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை ஞாபகப்படுத்தி நீங்கள் இந்த கஃபாவின் இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்ற கட்டளையை பிரப்பிக்கின்றான்.

குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,

மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக,

இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.

அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். (106:1-4)

107) சூரதுல் மாஊன் – அற்ப பொருள்
அத்தியாயம் 107
வசனங்கள் 7

நாளை மறுமையை பொய்ப்பித்துக் கொண்டிருக்கும் மக்களின் சில பண்புகளை அல்லாஹ் இவ்வத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். மக்கத்துக் குறைஷிகளும் மறுமையை பொய்ப்பித்தமையினால் அவர்களிடமும் இப்பண்புகள் காணப்பட்டன.

அவன் தான் அநாதைகளை விரட்டுகிறான்.

மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக (வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். (107:2-7)

108) சூரதுல் கவ்ஸர் -நீர்த்தடாகம்
அத்தியாயம் 108
வசனங்கள் 3

நபி (ஸல்) அவர்களுக்கு நாளை மறுமையில் வழங்கப்பட இருக்கும் கவ்ஸ்ர் நீர்த்தடாகத்தை பற்றி பேசும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வை மாத்திரம் தொழுது குர்பானி எனும் வணக்கத்தையும் அவனுக்காக மட்டுமே செய்வீராக என்று கட்டளை இடுக்கின்றான்.

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். (108:1-3)

109) சூரதுல் காபிரூன் – நிராகரிப்பாளர்கள்
அத்தியாயம் 109
வசனங்கள் 6

ஏகத்துவத்திற்கும் இணைவைப்பிற்கும் இடையில் உள்ள மிகப் பெரிய வேறுபாட்டை உரத்துச் சொல்லும் இவ்வத்தியாயம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களோடு பல வருடங்களாக பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்து வைத்தமை உலகறிந்த விடயமாகும். இருதியில் உங்களுடன் எந்த விதமான பரஸ்பர உடண்படிக்கைக்கும் நான் தயாரில்லை. உங்களுக்கு உங்களது மார்க்கம், எனக்கு எனது மார்க்கம் என்று மிகத் தெளிவாக அவர்களிடம் கூறிவிடும் படி எல்லாம் வல்ல அல்லாஹ் கட்டைளியிடுகின்றான்.

(நபியே!) நீர் சொல்வீராக: ‘காஃபிர்களே!

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’ (109:1-6)

110) சூரதுன் நஸ்ர் – உதவி
அத்தியாயம் 110
வசனங்கள் 3

ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு மக்கமா நகரை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின் சாரை சாரையாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த அந்த மாபெரும் நிகழ்வை படம் பிடித்துக் காட்டும் இந்த அத்தியாயத்தின் இருதியில் வெற்றி கிடைக்கும் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் விளக்குகின்றான்.

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக. மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் ‘தவ்பாவை’ (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (110:1-3)

111) சூரதுல் மஸத் – ஈச்சம் கயிறு
அத்தியாயம் 111
வசனங்கள் 5

தப்பத் -நாசமடைந்து விட்டான், அல் லஹப் – தீச்சுவாலை என்று இவ்வத்தியாயம் பல பெயர்களில் அழைக்கப்படும். நபியவர்களின் தந்தையின் சகோதர்களில் ஒருவனான அபூலஹப் இஸ்லாத்திற்கும், நபியவர்களுக்கும் பல்வேறு வகையில் கொடுமைகளை செய்து கொண்டிருந்தான். நபியவர்கள் ஸபா மலையில் ஏறி ஏகத்துவத்தை பகிரங்கப்படுத்திய போது தனது இரு கைகளால் மண்ணை வாரி இறைத்து நபியவர்களுக்கு சாபமிட்டான். அவன் நாசமாகட்டும் அவன் மணைவியும் நாசமாகட்டும் என்று அல்லாஹ் அவனது குடும்பத்திற்கே கெடுதி உண்டாகும் என்று இவ்வத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). (111:1-5)

112) சூரதுல் இஹ்லாஸ் – உளத்தூய்மை
அத்தியாயம் 112
வசனங்கள் 4

கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளை பட்டியலிடும் இந்த அத்தியாயம் குறைஷிகள் நபியவர்களிடம் உனது இறைவனை எமக்கு விளங்கப்படுத்து என்று கேட்ட சந்தர்ப்பத்தில் இறக்கப்பட்டது. இந்த பண்புகளை உடையவரே உண்மையான இறைவனாக இருக்க முடியும். உலகில் உள்ள எந்தப் போளிக் கடவுள்களும் இதில் தோல்வி அடைந்துவிடுவர் என்பது உறுதியானதாகும்.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)

113) சூரதுல் பலக் – அதிகாலை
அத்தியாயம் 113
வசனங்கள் 5

அதிகாலைப் பொழுது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுலகில் உள்ள படைப்பினங்களின் தீங்கை விட்டும் நாம் எல்லா வல்ல இறைவனிடம் பாதுகாவல் தேட வேண்டியதன் அவசியத்தை இவ்வத்தியாயம் உணர்த்துகின்றது. இரவில் ஏற்படும் தீமைகள், சூனியக்கரர்களால், பொறாமைக்காரனினால் ஏற்படும் தீமைகளில் இருந்து பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்கு வழிகாட்டுகின்றான்.

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

இன்னும்இ முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). (113:1-5)

114) சூரதுன் நாஸ் – மனிதர்கள்
அத்தியாயம் 114
வசனங்கள் 6

மனித சமுதாயத்தவர்களின் கெடுதியை விட்டும் பாதுகாப்பு தேடுமாறு முன்னைய அத்தியாயத்தில் பணித்த அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் மனித குலத்தின் எதிரியாகிய ஷெய்த்தானின் மிக மோசமான தீங்காகிய பதுங்கியிருந்து நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காண்பிக்கக் கூடிய மிக கொடூரமான சதிவலையில் விழுந்துவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுமாறு ஏவுகின்றான். மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை ஏற்படுத்துவதன் மூலம் மேற்படி காரியத்தை இப்லீஸும் அவனின் சகாக்களும் செய்வதாக சொல்லும் இறைவன் இப்படிப்பட்ட பயங்கரமானர்கள் மனித, ஜின் ஆகிய இரு இனத்திலும் இருப்பதாக குறிப்பிடுகின்றான். மனித சமுதாயத்தின் உண்மையான எதிரியை எப்போது இனம் கண்டு கொள்கின்றோமோ அப்போது எமக்கு ஈருலகிலும் வெற்றி நிச்சயம்.

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

(அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன்.

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.(114:1-6)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *