Featured Posts
Home » இஸ்லாம் » அமல்கள் » சுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…

சுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்.

பர்ளான நோன்புகள், நேர்ச்சையான நோன்புகள்,  சுன்னத்தான நோன்புகள், மற்றும் நபிலான நோன்புகள் இப்படி பலவிதமான நோன்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப நபியவர்கள் நமக்கு வழிக் காட்டியுள்ளார்கள்.

சுன்னத்தான நோன்புகளில் ஒவ்வொரு திங்கள். மற்றும் வியாழக் கிழமை நாட்களில் நோற்கும் நோன்பின் முக்கியத்துவங்கள், சிறப்புகளைப் பற்றி நாம் தொடர்ந்து கவனிப்போம்.

“நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். – ஆயிஷா(ரலி)  அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா

மேலும் “ஒவ்வொரு வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – அபுஹூரைரா(ரலி) அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா

நாம் செய்கின்ற எல்லா அமல்களும் ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழன் நாட்களில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படும் அந்த நேரத்தில் நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன் என்று நபியவர்கள் ஆசைப்பட்டார்கள் என்றால், அவர்களை முன் மாதிரியாக அடிக்கடி நினைவு கூறும் நாம், இந்த குறிப்பிட்ட நாட்களில் நோன்பு பிடிப்பதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமை நாட்கள் வந்து விட்டால் இன்று எனது அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படுகிறது என்ற சிந்தனை நம்மில் ஒவ்வொருவருக்கும் தானாக வர வேண்டும். வருவது மட்டுமல்ல நான் இந்த இடைப்பட்ட நாட்களில் எந்த அளவிற்கு அமல்கள் செய்துள்ளேன் என்பதை மீட்டிப் பார்த்து நம்மை அமல்கள் பக்கம் ஆர்வமாக்கி கொள்ள வேண்டும். மேலும்  குறிப்பிட்ட இந்த நாட்களில் எனது அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா என்ற கவலையோடு அந்த நாட்களை நாம் கழிக்க வேண்டும்.

அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப்படும் நாட்கள்…
“ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமைகளில் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதை பின் வரும் ஹதீஸில் காணலாம். ”ஒவ்வொரு திங்கட் கிழமையும், ஒவ்வொரு வியாழக் கிமையும், சுவர்கத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு அடியார்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. பகைமைக் கொண்டவர்களைத் தவிர. அவர்கள் ஒன்று சேரும் வரை விட்டு வைய்யுங்கள் என்று கூறப்படும். (முஸ்லிம் 5013)

இந்த ஹதீஸின் படி ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமைகளில் சுவன வாசல்கள் திறக்கப் படுகின்றன, அந்த நேரத்தில் நாம் செய்த அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப் படுகின்றன, இணை வைக்காத நிலையில் அமல் செய்தவரகளுக்கு நன்மைகள் வழங்கப் பட்டு். பாவங்கள் அழிக்கப் படுகின்றன. அதே நேரம் பிரச்சனைப் பட்டு பேசாமல்இருந்தவர்களைத் தவிர என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

தஃவா களத்தில் உள்ளவர்களின் சிந்தனைக்கு…
தஃவா களத்தில் ஈடுபடக் கூடிய அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாளிக்க வேண்டும். நாம் மக்களிடத்தில் எதை எடுத்து நடக்கும் படி அடிக்கடி சொல்லி வருகின்றோமோ அவைகளில் நம் மீது கடமையானவைகளை சரியாக தொடராக செய்யக் கூடிய நிலையை நாம் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பேச்சாளர்களாக மட்டும் இருக்க கூடாது.

குறிப்பாக இந்த நோன்புகளை களத்தில் உள்ள தாயிகள் வழமையாக பிடிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

ஏனைய பொது மக்களும் ஒவ்வொரு கிழமையும் இந்த இரண்டு நோன்புகளையும் பிடிக்க கூடிய சூழலை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நான் வேலைக்குப் போகிறேன், நான் ஆபிஸூக்கு போகிறேன், நான் இங்கு போகிறேன், நான் அங்கு போகிறேன் என்று பல பொருத்தமற்ற காரணங்களை கூறி அதிகமான மக்கள் குறிப்பாக ஆண்கள் இந்த நாட்களில் நோன்புகள் பிடிப்பதை அலட்சியப் படுத்தி வருகிறார்கள்.

ரமழானில் ஒரு மாத காலம் இதே தொழில்களோடு தான் அனைத்து நோன்புகளையும் பிடித்தோம். அப்படியானால் ரமழானில் கற்ற பாடங்கள் என்றடிப்படையில் ரமலான் அல்லாத காலத்தில் வாரத்தில் இரண்டு சுன்னத்தான நோன்புகளை எனக்கு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்துடனும் தொடராக நோன்பை பிடிக்க பழகி கொள்ள வேண்டும். பல வேலைகளுக்கு மத்தியில் ரமலானில் ஒரு மாதம் தொடராக நோன்பு பிடிக்க முடியும் என்றால், ஏன் வாரத்தில் இந்த இரண்டு நாட்கள் நபியவர்கள் தொடராக பிடித்து வந்த நோன்புகளை என்னால் பிடிக்க முடியாது? என்ற கேள்வியை எழுப்பி, எனக்கு முடியும் என்ற நம்பிக்கையை உள்ளத்தில் பதித்து, இந்த சுன்னத்தையும் நமது வாழ்க்கையில் நடைமுறை படுத்தி இறையன்பை பெற்றுக் கொள்வோம்.  அல்லாஹ் போதுமானவன்.

One comment

  1. Assalamu alaikum…. Pengal entha nombu eppadi vaipathu siranthathu… Eppadi nombu niyyattthu seivathu…. Veettil varumai neenga enna enna seiya vendum…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *