Featured Posts
Home » இஸ்லாம் » படிப்பினைகள் » அந்த மூன்று வார்த்தைகள்

அந்த மூன்று வார்த்தைகள்

தலைவலி, காய்ச்சல் போன்ற தாங்கமுடிந்த சில வேதனைகளை நோயாகக் கருதி நான் மருத்துவரிடம் சென்றதாக ஞாபகமில்லை. ஆனால், அவ்வப்போது தலைகாட்டிப்போகும் சில நோய் அடையாளங்கள்

“முதுமையை நோக்கி நகர்கிறேன்”

என்பதை அப்பட்டமாகக் கூறிப்போக வந்தாற்போல போல இருக்கும்.

சரி, முதுமை வரும்போது வரவேற்பது நாகரீகம் என்பதற்காக வைத்தியரை நாடாதிருக்க முடியுமா? பிறகு வைத்தியர்களெதற்கு? என்றெண்ணியவளாய், குளத்தினுள்ளிருந்து தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ஆமைகளைப் போன்று, எனக்குள் எட்டிப்பார்த்திருந்த சில பெயரறியா வருத்தங்களை பட்டியலிட்டுக்கொண்டு வைத்தியரைச் சந்திக்கும் ஒரு நாளுக்காகக் காத்திருந்தேன்.

அந்நேரம் பார்த்து, எனது அதே பிரச்சினைகளுக்காய் சிகிச்சை பெற்றுக் கொண்ட சில சமவயதுடைய நண்பிகளின் சிபாரிசின்மூலம் ஒரு சிரேஸ்ட வைத்தியரை அணுகக் கிடைத்தது.

அவரிடம் சென்று முறைப்பாடுகளை முன்வைத்துக் கொண்டிருந்த எனக்கு, அவர் மாத்திரை எதுவும் எழுதவில்லை. மாறாக, எனது பெயர் மற்றும் வயதைக் கேட்டு நிறையையும் கணக்கிட்டுத் துண்டொன்றில் குறித்துக்கொண்டவர், எனக்கு கொடுத்த மாத்திரை, மூன்றே மூன்று வார்த்தைகள்தான்.

“உங்கள் நிறையை குறைத்துவிடுங்கள்… ”

அதுகேட்டு, ஒரு முஸ்லிம் பெண்ணாக அந்த இடத்தில் கைசேதப்பட்டதைத் தவிர வேறெதனையும் என்னால் உணரமுடியவில்லை. ஏனெனில், விருந்துக்கும், விருந்தோம்பலுக்கும் பெயர்போன இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த நான் பட்டினி கிடப்பதா? உடலை வருத்தி எடை குறைப்பதா?

ஆச்சரியப்பட்டுப் போனேன். அந்த வைத்தியரை ஏற்கெனவே எனக்கு அறிமுகப்படுத்திய நண்பிகளும் இந்த மூன்று வார்த்தைகளைத்தான் தங்களுக்கும் சிபாரிசு செய்ததாக சொல்லியிருந்தார்கள்.

இறுதியில், நான் வைத்தியரிடம் முறையிட்ட நோய் வேறு, சிகிச்சை பெற்ற நோய் வேறு என்றாகிப் போனாலும், ஏற்கெனவே எட்டிப்பார்த்திருந்த பெயரறியா நோய்கள் அனைத்தும் மாத்திரையின்றியே மீண்டும் ஆமைகள் போன்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது மட்டும் நல்ல செய்திதான்

அனேகமாக 35 வயதிற்கு மேற்பட்டுவிட்ட பெண்களுக்கு உடற்பருமன் ஒரு நோயாக மாறி, அது மேலும் சில நோய்களை அறிமுகப்படுத்திவிடுவது தற்கால புதினமாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை எந்தவொரு பெண்ணும் இவ்வாறான நிலைமையைச் சந்திக்கவே கூடாது. ஒரு பெண்ணாக இருந்து அவளது உடற்பருமன் பேசுபொருளாகிப் போவது துரதிஸ்டமே. 90 சதவீதமான பெண்களுக்கு அதுவே பெரும் சவாலாகிவிட்டது.

பொருளாதாரத்தில் மட்டுமே வரவு செலவு வாய்ப்பாடு பார்க்கும் நாம் உடம்பிற்கும் வரவு செலவு உண்டு என்பதை மறந்து விட்டு, தேவையற்றதைச் சேமித்து விடுகின்றோம்.

யாரேனும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் மறுக்காமல் கலந்துகொள்ளுங்கள். என்று கூறும் இஸ்லாம் மார்க்கம் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும், மற்றொரு பகுதி தண்ணீருக்காகவும், பிரிதொரு பகுதி மூச்சு விடுவதற்காகவும் இருக்கட்டும் எனச் சொல்கிறது.

உயர்ரக மாமிச உணவுகளையெல்லாம் ஆகுமாக்கி விரும்பியோர் உண்ணலாம் என அனுமதித்த அதே இஸ்லாம்தான் மறுபுறம் நோன்பையும் வலியுறுத்தி நிற்கின்றது.

பசிக்காகவன்றி, உணவு ருசிக்காக உண்ணப்படுவதே உடற்பருமனுக்குக் காரணமாகின்றது. பணத்தைச் சேமிப்பதைப்போல உடம்பில் கலோரிகளைச் சேமிக்க நினைக்கின்றோமா?

உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O) அறிக்கையின் படி உலகம் முழுவதும் 40 கோடிபேர் தங்கள் உடலுக்குத் தேவையான எடையைவிட அளவுக்கதிகமான எடையுடையவர்களாகவும், 30கோடி பேர் இதற்காக மருந்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களாகவும் இருக்கின்றார்கள். (நன்றி இணையம்)

இவ்வாறான நிலைமையானது, இறைவணக்கங்களில் சோம்பல் தன்மையை ஏற்படுத்துவதோடு, வணக்கத்தின் சுவையை நாம் உணர்வதிலிருந்தும் தடுத்துவிடுகிறது. இதனால், இறைவனுக்கும் எமக்குமிடையிலான நெருக்கத்தினைக் குறைத்து ஆத்மீகத்திலிருந்து எம்மை தூரப்படுத்திவிடும் அபாயம்கூட இருக்கிறது.

அது மட்டுமன்றி, புதிய நோய்களை வரவழைத்த குற்றம், காலநேரத்தை விரயம் செய்த குற்றம் மற்றும் பணவிரயத்திற்கு வழிவகுத்தமை போன்றவற்றால் ஆக்கபூர்வமான சிந்தனைகளிலிருந்து எம்மையும் சந்ததிகளையும் தடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஓர் உடல் வலிமை மிக்க இறைநம்பிக்கையாளன் பலவீனமான இறை நம்பிக்கையாளனை விட அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானவராயிருப்பார். எனவே, உடல் ஆரோக்கியம் என்பது இறைவனது அருளாக இருக்கும் அதேவேளை, எமது கைகளிலேயே அது தங்கியிருக்கிறது என்பது வெளிப்படை.

உங்கள் கரங்களால் உங்களை நீங்களே அழிவுக்குள்ளாக்காதீர்கள். (அல் குர்ஆன் : 2:195)

என்ற இறைமொழிக்கமைய இறைவனிடம் எமது ஆரோக்கியத்திற்காக எப்பொழுதும் பிரார்த்திக்க வேண்டும்.
சுன்னத்தான நோன்புகளில் இயலுமானதை கணவரின் அனுமதியுடன் நோற்பதிலும், கடமையான தொழுகைக்கு முன்பின்னுள்ள சுன்னத்துகளை நடைமுறைப்படுத்துவதிலும் மற்றும், எமது மூட்டுக்களுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் ளுஹா தொழுகையை இடையிடையே பேணுவதிலும் நாம் எத்தனையோ உடல், உள பயன்களை அடையப்பெறலாம்

கண்ணாடியில் நம்மை நோக்கும் போது…
اللهما اخسنث خلقى فا حسن خلقى
அல்லாஹும்ம அஹ்ஸன்(த்)த கல்(க்)கி ஃபஅஹ்ஸின் குலு(க்)கி.
நூல்: அஹ்மத்

பொருள்: இறைவா! நீ என் உருவத்தை அழகாக்கி வைத்ததைப் போல் என் குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!

என்ற பிரார்த்தனையை உணர்ந்து வேண்டிக் கொண்டால் எமது உடம்பை எமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சக்தியை இறைவன் அளிப்பதை அனுபவ ரீதியாக உணரலாம்.

வைத்தியரின் ஆலோசனைக்கமைய வியர்வையை வெளியேற்றுவதற்கான எளிய உடற்பயிற்சிகளை கேட்டறிந்து குறித்த சில பொழுதுகளை அதற்கென அர்ப்பணிப்பதன்மூலம் நற்பலன்களைப் பெறமுடியும்.

நாம் உணவை குடிக்க வேண்டும். உணவை எவ்வாறு குடிப்பது? வாய்க்குள் வைக்கப்பட்ட உணவை உமிழ்நீர் சேர்த்து பற்களால் நன்கு மென்று அரைத்த கலவையாகவே வயிற்றினுள் அனுப்ப வேண்டும்.

வேறுபராக்குகளில் இருந்துகொண்டு உணவருந்தினால் உணவைப்பற்றிய கவனம் சிதறி மூன்று தவறுகளை விடுகிறோம்.

1.பசித்துத்தான் சாப்பிடுகின்றோமா?

2.அடுத்த கவளம் தேவைக்கதிகமாக எடுக்கின்றோமா?

3.இந்த உணவு உட்சென்று எமக்குத் தேவையான சக்தியை தரவல்லதா?

எனவே, இவைகளில் கவனம் இருந்தால்தான் உங்களதும் எனதும் ஆரோக்கியத்தினை மரணம்வரை கட்டிக் காப்பதற்கான நம்பிக்கையும் இறையுதவியையும் பெறமுடியும் என்பது திண்ணம்

– பர்சானா றியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *