Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » வெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரின் கப்ரு வேதனை [ஹதீஸ் ஆய்வு]

வெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரின் கப்ரு வேதனை [ஹதீஸ் ஆய்வு]

பொதுவாக எம்மத்தியில் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று மரணித்துவிட்டால் அவர் கொடுத்துவைத்தவர், பாக்கியசாலி……… போன்ற வார்த்தைகளால் அந்த ஜனாஸாவைப் பற்றி பெருமைப்படக் கூடியவர்களாக இருக்கின்றோம்.

அதற்குக் காரணமாக எம்மத்தியில் பரவியிருக்கும் ஹதீஸ் ஒன்றே காரணமாகும். அதாவது;
நபியவர்கள் கூறினார்கள் : “எந்த ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை நாளன்று அல்லது அதன் இரவன்று மரணிக்கின்றானோ அவரை கப்ரினுடைய சோதனையிலிருந்து அல்லாஹுத்தஆலா பாதுகாக்கின்றான்.

மற்றுமொரு அறிவிப்பில் எவர் ஒருவர்….. என்று பொதுப்படையாக வருகின்றது.

இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே அந்த ஜனாஸாவை புகழக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

இந்த ஹதீஸும் இதே கருத்துப்பட பல ஹதீஸ்களும் வருகின்றன. அவைகளைப் பொருத்தவரையில் அவை அனைத்தும் பலவீனமான ஹதீஸ்களாகும்.

ஏன் அவைகள் பலவீனமானவைகள் என்பதற்கான காரணங்களை பார்த்தால் அவைகள் ஒவ்வொன்றிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் வருவதுடன் அதன் அறிவிப்பாளர் தொடர்; தொடர்பற்ற நிலையிலும் காணப்படுகின்றது.

———————

இந்த ஹதீஸ் திர்மிதி, முஸ்னத் அஹ்மத், முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய கிரந்தங்களில் ரபீ்ஆ பின் ஸைப் என்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கின்றார்.

இந்த அறிவிப்பாளர் தொடரைப்பற்றி இமாம் திர்மிதி (றஹ்) அவர்கள் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.
‘’இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தொடர் தொடர்பற்ற நிலையில் உள்ளது.

அதாவது; ரபீஆ பின் ஸைப் என்பவர் அபூ அப்திர் ரஹ்மான் அல்ஹுப்லா வாயிலாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களைத் தொட்டும் அறிவிப்பவராக இருக்கின்றார். ( ஆனால், இந்த அறிவிப்பில் அவர் நேரடியாகவே அப்துல்லாஹ் இப்னு அம்ரின் மூலமாக செவிமடுத்ததாக அறிவிக்கின்றார்)

மேலும் அவர் (ரபீஆ பின் ஸைப்) அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக (நேரடியாக) செவிமடுத்தார் என்பதை நாம் அறியமாட்டோம்’’ என்கிறார்.
எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

———————–

அதேபோன்று முஸ்னத் அஹ்மத் கிரந்தத்தில் வரக்கூடிய மற்றுமொரு அறிவிப்பில் ;
ஸுரைஜ் என்பவர் பகிய்யா என்பவரின் வாயிலாக முஆவியா பின் ஸயீத் அவர்களின் மூலம் அறிவிக்கின்றார்.
இதிலே பகிய்யா என்கிற அறிவிப்பாளர் ஹதீஸ்களில் குழறுபடி செய்யக்கூடியவராக இருக்கின்றார்.
அதுமாத்திரமின்றி இவர் (பகிய்யா) இந்த அறிவிப்பில் தான் முஆவியா என்பவரிடமிருந்து செவிமடுத்ததாக தெளிவாக தெரிவிக்கவில்லை.
எனவே, இதுவும் பலவீனமாகும்.

————————

மற்றுமொரு அறிவிப்பு முஸ்னத் அபீ யஃலா எனும் கிரந்தத்தில் வாகித் இப்னு ஸலாமா என்பவர் யஸீத் அர்ரகாஷி வாயிலாக அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்.
இதிலே வாகித் பின் ஸலாமா என்பவர் ஹதீஸ்களில் பலவீனமானவர்.
மேலும், யஸீத் அர்ரகாஷி என்பவர் பலவீனமானவர், (உலக) தேவையற்றவர்.

எனவே, இதுவும் பலவீனமாகும்.

————–

மேலும் வெள்ளிக்கிழமை நாளைப் பொருத்தவரை அவை நாட்களில் சிறந்த நாள் என்று பல ஹதீஸ்கள் வருகின்றன.
என்றாலும், அந்த நாளின் சிறப்பை வைத்து ஒருவருடைய நிலைப்பாட்டை கூற முடியாது.

அத்துடன் ஒவ்வொருவருவரின் மரணமும் அல்லாஹ்வின் நிர்ணயத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட திங்கட்கிழமையிலேயே மரணித்தார்கள்.

எனவே ஒருவர் மரணிக்கும் நாளுக்கும், அவரின் மரணத்தின் பின் இருக்கக்கூடிய நிலைப்பாட்டுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்தரமே.

(11/03/2017)
தொகுப்பு : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *