Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்

உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்

இஸ்லாம் கொள்கையில் உறுதியை வலியுறுத்துகின்றது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கொள்கையில் மலை போன்ற உறுதியுடன் இருக்க வேண்டும். அதில் தளர்வோ தள்ளாட்டமோ இருக்கக் கூடாது. இதே வேளை, இஸ்லாம் பிற சமய, சமூக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை மதித்து நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது.

இஸ்லாம் சிலை வணக்கத்தையும், பல தெய்வ வழிபாட்டையும் கடுமையாக எதிர்க்கின்றது. அதனை முட்டாள்தனமாகவும் பார்க்கின்றது. இன்னும் அதை நரகத்திற்கு இட்டுச் செல்லும் இணை வைப்புச் செயலாகவும் பார்க்கின்றது.

ஆனால், சிலைகளைக் கடவுள்களாக பிற மக்கள் வழிபடும் போது அவர்களின் அந்தச் செயலை நாம் மறுத்தாலும் அவர்களின் உணர்வுகளை ஊனப்படுத்துவதையோ, அதன் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டி குழப்பத்தை ஏற்படுத்துவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

“அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் அறியாமையினால் வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் செயல்களை நாம் அலங்கரித்துக் காட்டியுள்ளோம். பின்னர் அவர்களது இரட்சகனிடமே அவர்களது மீளுதல் உள்ளது. அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.” (6:108)

இந்த வசனத்தில் பிற மக்கள் வழிபடும் போலி தெய்வங்ளைத் திட்ட வேண்டாம், குறை கூற வேண்டாம் என்று தடை விதிக்கப்படுகின்றது. தடைக்கு ஒரு காரணமும் கூறப்படுகின்றது. எதிர் விளைவு குறித்து சிந்திக்க வேண்டும். நாம் அவர்கள் வழிபடும் போலி தெய்வங்களைக் குறை கூறினால் அவர்கள் அல்லாஹ்வைக் குறை கூறுவார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறை கூற நாமே காரண கர்த்தாவாகிவிடுவோம்.

அடுத்து அவர்கள் சிலைகளை வழிபடுகின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் செய்யக் கூடிய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அவர்களது செயற்பாடுகள் அவர்களுக்கு அழகாகக் காட்டப்பட்டுள்ளன. எனவே, நாம் அவற்றை அசிங்கமாகச் சித்தரித்தாலோ, குறை கூறி விமர்சித்தாலோ அவர்கள் ஆத்திரமுறுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, பிற சமூக மக்களின் செயற்பாடுகளை நாம் விமர்சிப்பதும் குறை கூறுவதும் அவர்களது உள்ளத்தைப் பாதிக்கும்’ அவர்களது உணர்வுகளை சீண்டுவதாக அமையும் எனவே, அவற்றை நாம் தவிர்ப்பதே நல்லதாகும்.

இவ்வாறே ஒவ்வொரு சமூகமும் சில இடங்களையும், பொருட்களையும் புனிதமாகப் பார்க்கலாம். பிற சமூக மக்களுடன் கலந்து வாழும் போது இது பற்றிய தெளிவுடன் நாம் நடந்து கொள்வது அவசியமாகும்.

அண்மையில் இலங்கை மாவனல்லை புத்தர் சிலை உடைப்பின் பின்னர் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய தப்பான எண்ணங்கள் விதைக்கப்படும் வண்ணம் காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதற்கு நம்மவர்களும் காரணமாக உள்ளனர்.

ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் ‘கிரலகல’ தூபி மீது ஏறி நின்று புகைப்படம் பிடித்து ஒரு வருடத்திற்கு முன்னர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தனர். இந்த விடயம் பூதாகரமாக்கப்பட்டு அவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அந்தத் தூபி கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதும் அதில் பௌத்த மக்களே செருப்புகளுடனும் அரை குறை ஆடைகளுடனும் ஏறி நின்று புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ள நிலையில் முஸ்லிம் மாணவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நாட்டில் எதிர்கால ஜனாதிபதியாக வர வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்களால் விரும்பப்பட்ட சஜித் பிரேமதாஸ அவர்களே இது குறித்து கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சுமார் பத்து வருடங்களாக முஸ்லிம்களின் பள்ளிகள், தர்காக்கள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் வாய் திறக்காத சஜித் பிரேமதாஸ முஸ்லிம் மாணவர்கள் விடயத்தில் பேசியமை யையிட்டு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் என்ற வகையில் யாரும் மன்னிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நாம் விரும்பவில்லை. ஆனால், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக தண்டிக்கப்படும் நிலை இருக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

மத, இன உணர்வுகளைப் புண்படுத்துபவர்கள் எம்மதத்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலையானது’ கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், முஸ்லிம்கள் மீது பாயும் சட்டம் மற்றவர்கள் விடயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டு கால்களை முடக்கி படுத்துக் கொண்டிருப்பது அநியாயத்தின் வெளிப்பாடாகும். இந்த சூழ்நிலையை கவனத்திற் கொண்டு புரிந்து செயற்படுவது முஸ்லிம் சமூகத்தின் காலத்தின் கட்டாயமாகும். இந்த சூழலில் மீண்டும் இரண்டு மத்ரஸா மாணவர்கள் அதே தவறைச் செய்துள்ளனர்.

இந்த செயற்பாடு பதிவாகி காலப் போக்கில் முஸ்லிம்கள்தான் பௌத்த மதத்தை அவமதித்து நடந்தார்கள். அதனால்தான் இந்த நாட்டில் கலவரங்கள் உண்டாயின என்பது போன்ற வரலாறு உருவாக்கப்பட்டு விடும்.

1915 கலவரத்திற்கு முஸ்லிம்கள் “ஊ” காட்டியதுதான் காரணம் என்று இன்று நாங்களே முஸ்லிம்களைக் குறை கூறுவது போல், அவர்கள் நூற்றுக் கணக்கான தாக்குதல்களை நடாத்தியிருந்தாலும் முஸ்லிம்களில் ஓரிருவர் செய்த ஓரிரு குற்றங்கள் பதியப்பட்டு, கண்டிக்கப்பட்டு கலவரங்களுக்குக் காரணமாகக் காட்டும் போது எதிர்கால சந்ததிகள் எம்மை ஏசும் நிலை உருவாகும். எனவே, முஸ்லிம் சமூகம் இவற்றுக்கு இடம ;கொடுக்காத வண்ணம் வளர்க்கப்பட வேண்டியுள்ளது.

எமது மக்கள் பிற சமூக, சமய நிலையங்களைப் பார்வையிடச் செல்லும் போது அங்கிருந்து கொண்டே அவர்களின் செயற்பாடுகள் குறித்து தமக்குள் பேசிக் கொள்வது, கேலியாக சிரிப்பது, விமர்சிப்பது, அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக நடப்பது போன்ற தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

கோணேஸ்வர மலை பார்க்கச் சென்றால் அங்கு குழந்தைப் பாக்கியம் இல்லாத சிலர் ஒரு மரத்தில் தொட்டில் கட்டியிருப்பர். அங்கிருந்து கொண்டே “மரத்தில் தொட்டில் கட்டினால் பிள்ளை கிடைக்குமா? பாருங்களேன் இவர்களின் மடமையை” என்று தமக்குள் பேசிக் கொள்வர். அது அவர்களின் நம்பிக்கை. இதைப் பார்த்து நாம் பேசியவை அவர்கள் காதில் விழுந்தால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவது தவிர்க்க முடியாதல்லவா? இவ்வாறே இளைஞர்கள் இவ்வாறான இடங்களுக்குச் சென்றால் தேவையற்ற சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். இவை முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் இவ்வாறான இடங்களுக்குச் சுற்றுலாவுக்காகச் சென்றால் சில சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்ப காலத்தில் இப்படி ஏதாவது நடந்தால் சாதாரணமாக இளமைக் கோளாறாகப் பார்த்த மக்கள் இப்போது மதத் தீவிரவாதமாகவும், பயங்கரவாதமாகவும், ஐ.எஸ். வாதமாகவும் பார்க்கின்றனர். எனவே, இவ்வாறான இடங்களுக்கான சுற்றுலாக்களை முஸ்லிம்கள் தவிர்ப்பதுதான் நல்லதாகும். மாற்றமாக, மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் அவசியம் அவர்கள் அங்கு செல்ல முன்னரே பொறுப்பானவர்களால் கண்டிப்பான கட்டளையும் சிறந்த அறிவு+ட்டலும் வழங்கப்பட வேண்டும்.

இதே வேளை, இந்த இடங்களைப் பார்வையிடும் விடயத்தில் எமது மக்கள் தேவையற்ற அளவுக்கு அக்கறை எடுக்கின்றனர். சில பௌத்த மத பீடங்களுக்குச் செல்வதாக இருந்தால் முஸ்லிம் பெண்கள் தலை திறந்து செல்ல வேண்டும் என்று வரும் போது உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக தலையைத் திறந்து கொண்டு செல்கின்றனர். புத்த சமய பீடத்தை தரிசிப்பதற்காக ஒரு பெண் ஹராத்தை செய்ய வேண்டுமா? பாடசாலை மற்றும் பல்கலைக்கழக சுற்றுலாக்களில் முஸ்லிம் பெண்கள் இவ்வாறு செயற்படுவது ஹராமும் கண்டிக்கத்தக்கதுமாகும். பிற மதத்தளத்தை தரிசிப்பதற்காக இஸ்லாமியக் கடமையொன்றை மீறுவதை எப்படி சரி காண முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இவ்வாறே சில இந்துக் கோவில்களுக்குச் செல்வதாக இருந்தால் மேலாடையைக் கழற்றிவிட்டே செல்ல வேண்டும். அப்படி கழற்றி விட்டுச் சென்று, எதைப் பார்த்து பெரிதாக என்ன செய்துவிடப் போகின்றோம்! எனவே, இவ்வாறான நிபந்தனைகள் உள்ள இடங்களுக்குச் செல்வதை நாம் முற்றாகத் தவிர்ப்பதே சிறந்ததாகும்.

இந்த இடங்களைத் தேடிச் சென்று பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளாமல், பிற மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு முஸ்லிம்கள் பற்றிய தப்பான பதிவை பிற மக்கள் மனங்களில் உருவாக்கிவிடாமல் இருப்பது காலத்தின் கட்டாயமாகும். முஸ்லிம் இளைஞர்கள் இது விடயத்தில் தெளிவுடன் இருக்க வேண்டும். நாம் விடும் சின்னச் சின்ன தவறுகள் கூட பதிவாகி வரலாற்றில் வரலாற்றுத் தவறுகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது என்பதை நன்கு உணர்ந்து பிற மக்களின் உணர்வுகளையும் புரிந்து இந்நாட்டில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

எனவே, எந்நிலையிலும் எந்நேரத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் நிதானமாகவும், தூரநோக்குடனும், அறிவுக் கூர்மையுடன் சிந்தித்து செயலாற்ற முன்வருவோமாக!.

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி நிம்மதியையும் சந்தோஷத்தையும் நம் அனைவருக்கும் வழங்குவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *