Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » முடியை விட மலிவாகக் கருதப்படும் பாவங்கள்

முடியை விட மலிவாகக் கருதப்படும் பாவங்கள்

பொதுவாகவே மனிதர்களிடம் எந்த மதிப்பும் இல்லாத ஒரு பொருள் முடி! எடையிலும், கணத்திலும் மதிப்பில்லாத பொருள் முடி. ஐம்பது கிலோ அரிசி வைக்கப் பயன்படுத்தப்படும் பையில் ஒரு கிலோ முடியைத்தான் புகுத்த முடியும்.

மங்கையருக்கு அழகு சேர்த்து அதைக்கொண்டு அவர்களை பெருமையடிக்க வைப்பதும் இந்த ”முடி”தான். அதுவும் அவர்களின் தலையில் இருக்கும்வரைதான். தலையிலிருந்து உதிர்ந்துவிட்டால் அந்த முடி மதிப்பற்ற பொருளாகி குப்பையைத்தான் அடைகின்றது. மனைவி சமைத்துத்தரும் உணவில் ஒரு சிறு முடியைக் கண்டுவிட்டால் மிகப்பெரிய கலவரமே நடந்துவிடும் அந்த இல்லத்தில். காரணம் முடி மதிப்பில்லாத அருவருக்கத்தக்க ஒரு பொருள் என்பதால். ஒருவன் இன்னொருவனை இழிவாகத் திட்டுவதாக இருந்தாலும் இந்த முடியை குறிப்பிட்டுத்தான் திட்டுகின்றான்.

முடி மக்களிடம் ஒரு மதிப்பற்ற பொருள் என்பதற்கு இவ்வாறான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். முடியப்போன்று பொருட்படுத்தாமல்தான் மக்கள் பாவங்களைச் செய்துவருகின்றனர். முடியைப்போன்று மிகவும் இலகுவாக எண்ணித்தான் மக்கள் பெரும் பெரும் தவறுகளைச் செய்கின்றனர். இதுவெல்லாம் சிறிய தவறுதானே, சிறிய பாவம்தான் என்று எண்ணும் எத்தனையோ காரியங்கள் அல்லாஹுவிடம் தண்டனைக்குரிய குற்றமாக ஆகின்றது.

ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல், சொல்லப்படுகின்றது, பேசப்படுகின்றது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பலர்வாயிலாக பரப்பப்படும்போது பொய்யும் மெய்யாகிப்போகின்றது. இதனால் பாதிக்கப்படும் சமூகம், அல்லது குடும்பம் இவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் அவப்பெயர்களை யாரும் சிந்திப்பதில்லை. இது போன்ற சர்வ சாதாரணமாக மனிதர்கள் செய்யும் தவறுகளைத்தான் அல்லது மக்கள் பொருட்படுத்தாத (பாவமான) காரியங்கள் குறித்துதான் அனஸ் (ரலி) அவர்களின் இந்த கூற்று உணர்த்துகின்றது.

நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘மூபிகாத்’ என்றே கருதிவந்தோம். (அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி:6492.) அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன். ‘மூபிகாத்’ என்றால் ‘பேரழிவை ஏற்படுத்துபவை’ என்று பொருள்.

عن أنس رضي الله عنه

قالَ: “إِنَّكُمْ لَتَعْملُونَ أَعْمَالًا هِيَ أَدقُّ في أَعْيُنِكُمْ مِنَ الشَّعَرِ، كُنَّا نَعْدُّهَا عَلَى عَهْدِ رسولِ اللَّهِ ﷺ مِنَ الْمُوِبقاتِ” رواه البخاري. وَقالَ

“الْمُوبِقَاتُ” الْمُهْلِكَاتُ.

ஒருவர் நன்மைகள் செய்கின்றார் அவர் அவற்றையே நம்பி இருந்துவிடுகின்றார். சிறு பாவங்கள் பற்றி அவர் சிந்திப்பதில்லை. இறுதியில் அவரை சிறுபாவங்கள் சூழ்ந்துகொண்ட நிலையில் அவர் தன் இறைவனை சந்திக்கின்றார். இன்னொருவர் தீமை புரிகின்றார், ஆனால் அதைப்பற்றிய அச்சத்திலேயே அவர் வாழ்கின்றார். இறுதியில் அச்சமற்ற நிலையில் அவர் தன் இறைவனைச் சந்திக்கின்றார் என அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் சொன்ன இந்த செய்தியும் அனஸ் (ரலி) அவர்கள் சொன்ன செய்தியோடு சேர்த்துப் படிப்பினை பெறவேண்டியதாகும்.

– S.A. Sulthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *