Featured Posts
Home » வரலாறு » பிற வரலாறு » முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 3

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 3

எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.)

தனிமனித சீர்திருத்தம்:

அன்றைய அரேபியாவின் சூழலில் ஒட்டுமொத்த சமூகம் தீமையில் திளைத்திருந்தனால், இமாமவர்கள் தனிமனிதர்களை அணுகி, தனது பிரசாரத்தை முன்வைத்தார்கள். ஏற்றுக்கொண்டவர்களுக்கு இஸ்லாத்தை ஆழமாகக் கற்றுக்கொடுத்து, சமூக உருவாக்கத்திற்காகத் தயார்படுத்தினார்கள். இதனால், இமாமவர்களின் பிரசாரம் பயனளிக்க ஆரம்பித்தது. உயைய்னாவில் மேற்கொண்ட பிரசாரத்தால், அவரை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் இஸ்லாமிய உணர்வுடனும் உணிர்த்துடிப்புடனும் காணப்பட்டனர். பின்னர் ஹூரைமலாவிலும் அவரது பிரசாரத்தில் கவரப்பட்ட இளைஞர் கூட்டமொன்று உருவானது. அத்தோடு, மக்கா – மதீனாவிலும் இமாமுக்கு ஆதரவாக நின்று ஊக்குவிக்கும் பல அறிஞர்களும் ஆதரவாளர்களும் உருவானார்கள். இதனால், சுற்றியுள்ள பல கிராமங்களிலும் ஏகத்துவத்தின் எதிரொலி பளிச்சிட்டு ஆயிரமாயிரம் தனிமனித உள்ளங்களை ஊடறுத்து, ஒருகொள்கைச் சமூகமாக ஒன்றிணைத்தது. இவர்களின் குடும்பங்கள் இஸ்லாமிய நிழலில் கொண்டுவரப் பல்வேறு திட்டங்களை இமாமவர்கள் போதித்தார்கள். ஆகவே, முழு தேசத்தையும் ஏகத்துவத் தென்றல் தழுவிச் சென்றது. இன்று சில அறிவீனர்ளால் முன்வைக்கப்படுவது போன்ற எந்தத் தவறான கொள்கையோ தீவிரப் போக்கோ  அவரிடம் காணப்படவில்லை. சாத்வீக வழியிலேயே அவர் தனது பிரசாரத்தை முன்னெடுத்தார். பல சோதனைகளை சந்தித்தார். யாரையும் பலப்பிரயோகம் செய்து அவர் தனது கொள்கையைப் பரப்பவில்லை.

சமூகப் புணர்நிர்மாணம்:

இஸ்லாத்தை நம்பிக்கையாகவும் வாழ்க்கைத் திட்டமாகவும் சுமந்து நிற்கும் தனிமனிதர்கள் மூலம் சமூகமொன்றைக் கட்டியெழுப்பினார்கள், இமாம் முஹம்மது அவர்கள். குடும்பம் என்பது தனிமனிதர்கள் சிலரின் கூட்டாகும். தனிமனிதர்கள் சீர்படுத்தப்பட்டதால், அதனூடாக இஸ்லாமிய அகீதாவுக்கு மத்தியில் இஸ்லாமிய வீட்டை உருவாக்கி, சமூகப் புனர்நிர்மாணத்தை மேற்கொள்ளமுடியும்.

 சமூகம் என்பது பல குடும்பங்களின் கூட்டாகும். குடும்பம் ஒரு சிறிய சமூகம் எனில் சமூகமென்பது பெரியதொரு குடும்பமாகும். இத்தகைய நிலைக்கலனில் இமாமவர்கள் ஒரு சிறந்த இஸ்லாமிய ஆன்மிக சிந்தனையுள்ள சமூகத்தை கட்டியெழுப்பினார்கள். அந்த சமூகம் தீமை செய்தால், தனது தலையைக் கொடுக்கவும் தயங்காத சமூகம் என்பதற்கு பின்வரும் நிகழ்வு சான்றாக அமைகிறது.

ஒரு நாள் திருமணம் முடிந்த ஒரு பெண் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபிடம் வந்தாள். தான் விபச்சாரம் என்ற குற்றத்தில் ஈடுபட்டுவிட்டதாகவும், தனக்காக அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றி, தன்னைத் தூய்மைப்படுத்தி விடுமாறும் கேட்டாள். எனினும், இமாமவர்கள் உடனே தணடனையை நிறைவேற்றிவிடாது மாயிஸ் (ரழி) மற்றும் காமிதிய்யாக் கோத்திரப் பெண் விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் கையாண்ட வழிமுறை சார்ந்து நின்று தண்டனையை நிறைவேற்ற முனைந்தார்கள். எனினும், அப்பெண் தனக்கான தண்டனையைப் பெற்று, உலகில் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டாள். அல்லாஹ்தஆலா பாவங்களை மன்னித்து, அப்பெண்ணிற்கு அருள்பாலிக்கட்டும்! இமாம் அவர்களுக்கும் அருள்பாளிக்கட்டும்!!

வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் மிக அரிதாகவே நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், இமாம் அவர்களின் பிரசாரம் எந்தளவு புரட்சியை விளைவித்து, ஒரு சிறந்த ஆன்மீகம் நிறைந்த சமூகத்தை உருவாக்கியுள்ளது என்பதை இந்நிகழ்வு நன்கு எடுத்துக் காட்டி  நிற்கிறது. இஸ்லாம் இத்தகைய இலட்சிய வாழ்வுக்காக மனிதர்களை உயர்த்தும் சக்திமிக்க கொள்கை. அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்ற வாழ்க்கை நெறி. இஸ்லாத்தை உரிய முறையில் விளங்கிப் பின்பற்றினால், பிரசாரப்படுத்தினால் இத்தகைய உயரிய வாழ்வியலை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்பலாம். இஸ்லாத்தை உள்ளத்தளவில் புரிந்து தியாகம் செய்ய முன்வரும் அத்தகையவர்களால், அந்த மனித வளத்தைப் பெற்ற சமூகம் உன்னத சமூகமாக உலகத்திலே வாழும். இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் மனிதர்களை இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக் காலப்பிரிவுகளிலும் ஓரளவு நாம் சந்திக்க முடியும். இவ்வாறு இஸ்லாத்திற்கு மட்டுமுள்ள சிறப்பம்சத்தை வேறு கொள்கைகளில் நாம் காண்பது கடினம். எனவேதான், இமாம் அவர்கள் இத்தகைய ஒரு சமூகத்தை இஸ்லாத்தின் நிழலில் உருவாக்கி, ஓர் அரசியல் சக்தியாக அரேபியாவில் அதை பரிணமிக்கச் செய்தார்கள்.

அரசியல் எழுச்சி:

இஸ்லாமிய பிரசாரத்தை உணர்வுப்பூர்வமாக மிகவும் திட்டமிட்டு, மிக நுணுக்கமாக வழிநடத்திச் சென்று, ஓர் அரசியல் சக்தியாக மாற்றிக்காட்டிய பெருமை இமாம் முஹம்மது அவர்களையே சாரும்.

மன்னர்களான உஸ்மான் இப்து முஅம்மர் அவர்களுடனும், முஹம்மது பின் ஸவூதுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணி, அதனூடாக இஸ்லாமிய அரசியலை விளங்கப்படுத்தினார்கள். முஹம்மது பின் ஸவூதின் அரசியல் ஆவல்களும் வேட்கையும் இமாம் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டது. அதனால், மன்னர் தஃவாவிற்கு உதவுவதாகவும் வாக்குறுதியளித்தார்.

1792ம் பல சிற்றரசுகள்  இமாம் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட ஏகத்துவ ஆட்சிக்குள் வந்து சேர்ந்தன. வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசங்களுக்கு ‘காழிகள்’ நியமிக்கப்பட்டு, இஸ்லாமியப் போதனைகள் வழங்கப்பட்டன.

உயைய்னாவின் மன்னராக விளங்கிய உஸ்மானிடம், இமாமவர்கள் ‘நீங்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கைக்கு உதவினால், அல்லாஹ் உமக்கு வெற்றியைத் தந்து, நஜ்தின் மீதும் அதன் உள்ளே வாழும் நாடோடி அரபிகள் மீதும் ஆதிக்கத்தைத் தருவான் என நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன் என்று கூறினார்கள். இவரைப் போன்றே முகம்மது இப்னு ஸவூதும் இமாமவர்களுக்கு உறுதுணையாக நின்றார். பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் அரசியலில் அவர்கள் நாட்டம் கொள்ளாமல், தனது பிரசாரத்தை முடுக்கி விடுவதிலேயே இமாமவர்கள் முனைப்புடன் செயற்பட்டார்கள்.

திரஇய்யாவின் ஆட்சியாளரின் பெயரும் இமாம் அவர்களின் பெயரும் முஹம்மது என்பதனால், இவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள். தந்தையின் பெயரைக் கூறி ‘வஹ்ஹாப்’ என்றும் வஹ்ஹாபிசம் என்று அழைக்க ஆரம்பித்தனர். இத்தகைய குறு மதியாளர்களுக்கு ‘வஹ்ஹாப்’  என்பது அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று என்பது தெரியாமல் போனது.

முஹம்மது என்பது இறுதித் தூதரின் பெயர் என்பதால் அப்பெயருக்கு கலங்கம் விளைவித்தால் தமது சதி எடுபடாது எனக் கருதிய எதிரிகள், வஹ்ஹாப் என்பது இறைவனின் பெயர் என்ற அறியாமையினால் வஹ்ஹாபி என்றனர். இன்றும் இத்தகைய அறியாமைகள் தொடர்கின்றன. அன்று இமாம் அவர்கள் சந்தித்த ஜாஹில்கள் இந்த நூற்றாண்டிலும் வாழ்ந்து வருகின்றனர். எனினும், அன்னாரின் சிந்தனைத் தாக்கம் இதயங்களை ஊடுருவிச் சென்று பலவாயிரம் மனித மனங்களை ஆகரஷித்துச் செல்வதை எவராலும் தடுக்க முடியவில்லை. தொடர்ந்து பல எதிர்ப்புக்களை சந்தித்தும் தவ்ஹீத் கொள்கை உயிர் பெற்று எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

திரஇய்யாவின் மக்களுக்கு மத்தியில் ஷெய்க்கின் சிந்தனைகள் விரைவாக பரவின. மக்கள் திரள் திரளாக அலையென, இமாமை நோக்கி, அறிவுத்தாகம் தனிக்கப் படையெடுத்தனர். இஸ்லாத்தின் உண்மையான போதனைகளைப் படிக்கலாயினர். தூய்மையான தவ்ஹீதையும் சரியான இஸ்லாமியப் போதனைகளையும் மக்கள் விளங்கத் துவங்கினர். மாணவர்களாக பெருந்தொகையானோர் வந்தமர்ந்து, இஸ்லாத்தை ஆழ்ந்து கற்றனர். வீடுகளும் பள்ளிகளும் இஸ்லாத்தின் போதன பீடங்களாகின. இக்காலப் பிரிவில், திரஇய்யாவின் வீதி வழியாகச் செல்லும் ஒருவர், அல்குர்ஆன் ஓதும் சப்தங்களையும் இஸ்லாத்தைப் படிக்கும் ஓசைகளையுமே கேட்பார் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு பக்கத்தால் அரச அதிகாரத்துடன் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததோடு, மக்கள் பெற்ற அறிவுத் தெளிவாலும் இஸ்லாமிய வாழ்வு திரஇய்யாவில் நிலைபெறலாயிற்று. ஷிர்க்கும் பித்அத்தும் ஒழிந்தன. பாவச்செயல்கள் படிப்படியாகக் குறைந்தன. அங்கு அமைதி நிலவியது. மக்கள் அச்சமற்று வாழ ஆரம்பித்தனர். இவ்வாறு பல்வேறு தளங்களில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு, மகத்தான தாக்கத்தினை விளைவித்துச் சென்றார்கள். அன்னாரின் பணிகள் என்றும் மறவாத மறக்கமுடியாத பதிவுகளாக்க காட்சி தருகின்றன.

தமது ஆயுள் காலத்தினுள்ளேயே பாரிய வெற்றி கண்டார்கள். அன்று அரபகத்தின் முக்கிய மாகாணமாக நஜ்த் காணப்பட்டது. அதை தனது தஃவாவின் முக்கிய மையப் புள்ளியாக மாற்றினார்கள். அரபு தீபகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான நஜ்த் மாகாணத்தை தமது தஃவாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். அத்தோடு தமது தஃவாவை சுமந்து நிற்கும் ஆட்சியொன்றை நிறுவுவதிலும் வெற்றி கண்டார்கள். இது அவரது தஃவாவின் சிறப்பம்சமாகும்.

ஆட்சியொன்று தம் கைக்கு எட்டிய போதும், ஆட்சியாளன் தமக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட போதும் இமாம் ஆட்சிபீடமேறவில்லை ஆட்சி தரும் சுகபோகங்களை அனுபவிக்க முயலவில்லை. தமது தஃவாப் பணியிலேயே அவர் மூழ்கிப் போனார்கள். தமது தஃவாவை விரிவுபடுத்துவதற்கு எவ்வாறு ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றியே அவர் சிந்தித்தார்.

இஸ்லாமிய உலகின் பல பாகங்களுக்கும் தம் மாணவர்கள் ஊடாக கொள்கையைப் பரப்புவதற்கு முயன்றார். இந்த வகையில் ஷெய்கின் ஆயுட் காலத்திலேயே தஃவா இஸ்லாமிய உலகின் பல பாகங்களுக்கும் செல்லத் துவங்கியிருந்தது.

இஸ்லாமிய தஃவாவில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து 50 வருட காலங்களாக உழைத்த இமாமவர்கள் ஹி. 1206 (கி.பி 1792) ஷவ்வால் மாதம் இறையடி சேர்ந்தார்கள். அல்லாஹ் அவரை ஏற்று அங்கீகரிப்பானாக! அவருக்கு அருள் புரிவானாக!!

ஷெய்க் அவர்களின் மரணத்தோடு அவரது தஃவா நின்று விடவில்லை. ஒரு புறத்தால் அவரது மாணவர்கள் தஃவாவை ஏந்தி நின்றனர். இன்னொரு புறத்தால் அவரது தஃவாவை ஏற்றுக் கொண்ட ஆட்சி அதனைச் சுமந்து பரப்பியது.

இமாமுக்கு பல மாணவர்கள் இருந்தனர். பிரதானமாக அவரது பிள்ளைகளும், இன்று வரையிலான அவரது பரம்பரையினரும் அவர் வழி நின்று தஃவாவுக்குப் பணி புரிகின்றனர். இன்றுவரை அவர்கள் ஆலு ஷெய்க் என அழைக்கப்படுகின்றனர். இமாம் அவர்களது நான்கு பிள்ளைகள் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். (ஹுஸைன், அப்துல்லாஹ், அலி, இப்றாஹீம்) இவர்கள் இமாமின் காலத்திலும் அதற்குப் பின்னாலும் இஸ்லாமியப் பணி புரிந்தவர்கள். அறிவுப்பணி மட்டுமன்றி, தஃவாப் போரட்டக் களத்திலும் நின்று உழைப்பவர்களாக அவர்கள் காணப்பட்டனர். (முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *