Featured Posts
Home » சட்டங்கள் » உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம் » உழ்ஹிய்யாவுக்கான நேரங்கள்

உழ்ஹிய்யாவுக்கான நேரங்கள்

உழ்ஹிய்யா, குர்பான் அறுத்துப் பலியிடுதல் என்பது துல்ஹஜ் பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்தோடு ஆரம்பமாகி அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முடியும் வரையான கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுகின்ற ஒருவணக்க வழிமுறையாகும்.

எண்ணப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நீங்கள் நினைவுகூருங்கள்- (அல்பகரா-203 ) என்ற வசனம் துல்ஹிஜ்ஜா பத்தின் பின்வரும் நாட்களையே குறிக்கும்.

எண்ணிக்கையான நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்பது அய்யாமுஷ் தஷ்ரீக் நாட்கள் என குர்ஆன் மேதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் விளக்கம் தரப்படுகின்றது.

٥٢- [عن سعيد بن جبير:] عنِ ابنِ عبّاسٍ رضيَ اللَّهُ عنْه، أنَّهُ قال: ” الأيّامُ المعلوماتُ أيّامُ العَشرِ ، والمعدوداتُ أيّامُ التَّشريقِ .((ابن الملقن (ت ٧٥٠)، البدر المنير ٦‏/٤٣٠ • إسناده صحيح)) .

“அறியப்பட்ட நாட்கள்” என்பது துல்ஹிஜ்ஜா பத்து தினங்களையும், “எண்ணிக்கையான தினங்கள்” என்பது தஷ்ரீக் உடைய நாட்கள் என்றும் மாமாதே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுவதாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹி) அவர்கள் அறிவித்துள்ளதை ஸஹீஹான சனத் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ( இப்னுல் முலக்கின்- அல்பத்ருல் முனீர்).

அய்யாமுஷ் தஷ்ரீக் என்ற துல்ஹஜ் பிறை 11,12.13 ஆகிய நாட்கள் உண்டு, பருகி அல்லாஹ்வை கூரும் தினங்களாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் )

?அய்யாமுத்தஷ்ரீக் பெயர் வரக் காரணம் என்ன??

ஆடு, மாடு, ஒட்டகைகள் ஆகிய கால்நடைகளை இந்த நாட்களில் மக்கள் அறுத்து அவற்றை உரித்து, மாமிசங்களை பதப்படுத்தி பாவிப்பதனால் இந்த பெயர் கொண்டும் அந்த நாட்கள் முதன்மையாக அழைக்கப்படுகின்றன என்பது இதன் பிரதான பொருள் களில் ஒன்றாகும்.

?உழ்ஹிய்யா கொடுக்க வேண்டிய நேரங்கள்/ தினங்கள்?

துல்ஹஜ் பிறை பத்தில் அதிகாலை ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை முடிந்ததும் உழ்ஹிய்யா கொடுக்கின்ற நேரமும் ஆரம்பமாகும்.

பெருநாள் தொழுகைக்கு முன்னர் கொடுக்கப்படும் உழ்ஹிய்யா மாமிசம் உண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்ட, சாதாரண, ஸதகாவில்தான் பதியப்படும் என்பது ஹதீஸ்களில் இருந்து அறிய முடியுமான கருத்தாகும்.

ஹஜ் பெருநாள் தொழுகையோடு ஆரம்பமாகும் இந்த வணக்கம் அய்யாமுத் தஷ்ரீக் முடியும் வரை தொடரும் என்பதை ஹதீஸ்கள் மற்றும் நபித்தோழர்களின் நடைமுறைகளில் இருந்து நம்மால் புரிய முடியுமாக இருக்கின்றது.

பிறை பத்தில்தான் கொடுத்தார்கள், எனவே பிறை பத்தில் பெருநாள் தினமே குர்பானி தினம் என வாதிடுவது ஹதீஸ் பற்றிய விளக்கமின்மையும் வரலாறு பற்றிய அறியாமையனயுமாகும்.

?பிறை பத்தில் மாத்திரம் தான் உழ்ஹிய்யா கொடுக்க வேண்டுமா?

?”ஹஜ்” என்பது அரஃபாதான்,
?அல்ஃபாத்திஹா அத்தியாயம் இன்றி தொழுகை இல்லை,
போன்ற சொற்பிரயோக வரையறை சொற்றொடர் பிரயோக முறை மூலம் “யவ்முன் நஹ்ர்” தான் அறுத்து பலியிடும் நாள் என்ற வரையறை மூலம் உணர்த்தி இருப்பின் அந்த வாதம் சரி எனக் கூற முடியும்.

அதற்கு மாற்றமாக அந்த நாளைத் தொடர்ந்து கொடுப்பதை தடை இல்லாமல் இருப்பதாலும் அதனை அனுமதித்தும் பல அறிவிப்புக்கள் வந்துள்ளதாலும் வழமையாக நாம் நிறை வேற்றுவது போன்று உழ்ஹிய்யாவை தாராளமாக நிறைவேற்ற முடியும்.

இது பற்றி குழப்பிக் கொள்ளவோ, குழம்பவோ வேண்டியதில்லை.

“كل منى منحر ، وكل أيام التشريق ذبح ” انتهى . صححه الشيخ الألباني في السلسلة الصحيحة بمجموع طرقه.

“மினாவின் ஒவ்வொரு இடமும் அறுத்து பலியிடுவதற்கான இடமாகும். அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முழுவதும் அறுப்புக்கான நாட்களாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஸ்ஸஹீஹா- அல்பானி) என்ற ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் நாம் மேலே சுட்டிக் காட்டிய முறையில் தனது உழ்ஹிய்யாவை மேற்படி நாட்களில் தாரளமாக நிறைவேற்றலாம்.

பிறை பத்து முடிந்தால் உழ்ஹிய்யா நேரமும் முடிந்து விட்டதா?

உழ்ஹிய்யாவின் தினத்தை வரையறை செய்வதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

இருந்தும் பெருநாள் தினம் முதல் பிறை 13 வது அஸர் வரையான தினங்களையே பெரும் , பெரும் அறிஞர் பெருமக்கள் சரியான கருத்தாக தேர்வு செய்தனர் என்பதை தீர்வாக அறிய முடிகின்றது.

அந்த தேர்வு என்பது கண்மூடித்தனமான தேர்வு கிடையாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களைத் தேடிப் பார்க்கின்ற போது தற்போது பின்பற்றப்படும் வழமை மார்க்கம் அனுமதிக்காத ஒரு வழிமுறை என்றோ அல்லது உழ்ஹிய்யா நிறைவேறாத நாட்கள் என்றோ பல காரணங்களின் அடிப்படையில் கூறமுடியாதுள்ளது.

புதிய புரிதல்

துல்ஹஜ் பத்தாம் நாள் அன்று “யவ்முன் நஹ்ர்” அறுத்து பலியிடும் நாள் என்ற கருத்தை முன்வைத்தும் இறைத் தூதர் அவர்கள் அந்த நாளில்தான் அறுத்து அதனை உட்கொண்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டும் அதற்குப் பின்வரும் நாட்களில் அறுப்பது உழ்ஹிய்யாவில் சேராது என பீ.ஜே.வும் மற்றும் சிலரும் வாதித்தாலும் அந்த வாதம் பலவீனமானதாகும்.

பெருநாள் தொழுகைக்கு முன்னால் அறுப்பது கூடாது, தொழுகை முடிந்த கையோடுதான் அறுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள விதத்தில் உழ்ஹிய்யாவை பின்வரும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அறுப்பது கூடாது என்ற எந்த தடையும் வரவில்லை.

அத்துடன், மினாவுடைய நாட்கள் உண்டு பருகும் நாட்கள் என ஆதாரபூர்வான செய்திகள் வந்திருப்பதையும், தஷ்ரீக் உடைய நாட்கள் அறுத்து பலியிடும் நாட்கள் என இரு வேறு அறிவிப்பாளர் வழியாக வந்ததன் அடிப்படையில் ஸஹீஹான தரத்தில் கொள்ளப்படும் என அல்பானி (ரஹி) போன்ற அறிஞர்கள் ஸஹீஹ் என கூறுவதையும் அவதானித்தால் “யவ்முன் நஹ்ர்” அறுத்து பலியிடும் நாள் என்பது அறுப்பதற்கான ஆரம்பத்தைக் குறிப்பதையும் “அய்யாமுத் தஷ்ரீக்” நாட்கள் இறுதியான நாட்கள் என்பதையும் உணரலாம்.

அத்துடன், மார்க்க சட்டங்கள் பொதுவாக நெகிழும் தன்மையைக் கொண்டுள்ளதை இங்கும் கவனிக்க வேண்டும்.

இப்னு தைமிய்யா, இப்னுல் கையிம் போன்ற முற்கால அறிஞர்களும், மற்றும் இப்னு பாஸ், ஷேக் உஸைமீன் போன்ற பிற்கால அறிஞர்கள் பலரும் இந்த கருத்தையே உறுதி செய்கின்றனர்.

அந்த வகையில்
“யவ்முன் நஹ்ர்” என்ற துல்ஹஜ் பத்தாம் நாளை அறுத்து பலியிடுவது சிறப்பான நாளாகவும், பிற்பட்ட நாட்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.

உண்டு பருகுதல் என்பது அறுத்து உண்டு பருகுவதைக் குறிக்குமே தவிர, அறுக்காமல் உண்டு, பருகுவதை குறிப்பதற்காக அந்த சொற்பிரயோகம் இடம் பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பின் வரும் நபி மொழி மூலம் இந்த உண்மையினை உணர்ந்து கொள்ள முடியும். ?

[عن عبدالله بن عمر:] أنَّ رَسولَ اللهِ ﷺ نَهى أَنْ تُؤْكَلَ لُحُومُ الأضاحِيِّ بَعْدَ ثَلاثٍ. قالَ سالِمٌ: فَكانَ ابنُ عُمَرَ، لا يَأْكُلُ لُحُومَ الأضاحِيِّ فَوْقَ ثَلاثٍ، وَقالَ ابنُ أَبِي عُمَرَ: بَعْدَ ثَلاثٍ. [صحيح مسلم ] .

இறைத் தூதர் அவர்கள் மூன்று நாட்களின் பின்னால் உழ்ஹிய்யா மாமிசங்களை உண்ணுவதைத் தடை செய்தார்கள். (முஸ்லிம் ) மற்றொரு அறிவிப்பில் உழ்ஹிய்யா மாமிசங்களை மூன்று நாட்களின் பின்னரும் ஒருவர் சேமித்து வைப்பதைத் தடை செய்தார்கள். ( முஸ்லிம்).

இந்த தடை பற்றி யோசித்தாலும் உழ்ஹிய்யா என்பது பெருநாள் தினத்தின் பின் வரும் மூன்று தினங்களில் கொடுக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

மக்கள் பசி, பட்டினியால் வாடிய போதே இந்த தடை தற்காலிக நடைமுறையில் இருந்தது . பின்வந்த நாட்களில் அது நீக்கப்பட்டது என்பதை முஸ்லிம் கிரந்தத்தின் பின் வரும் மற்றொரு அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

قال رسولُ اللهِ ﷺ كُنْتُ نهَيْتُكم عن لحومِ الأضاحيِّ بعدَ ثلاثٍ فكُلوا ما شِئْتُم (مسلم)

மூன்று நாட்களையும் தாண்டி உங்கள் உழ்ஹிய்யா மாமிசங்களை நீங்கள் சேமித்து வைப்பதை நான் தடை செய்திருந்தேன். நீங்கள் (இதன் பிறகு) தாராளமாக உண்ணுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

இந்த ஹதீஸில் உழ்ஹிய்யா இறைச்சிகளை ஒருவர் சேமித்து வைப்பது தடையாக வந்ததது போன்று ஹஜ் பெருநாள் தினத்தின் பின் தொடர்ந்து வரும் நாட்களில் உழ்ஹிய்யா நிறைவேற்றுவது தடையாக வந்திருப்பின் அந்த தடையை நாம் மீறக் கூடாது. அப்படி எந்த தடையும் இடம் பெறவில்லை.

அத்துடன், இந்த நடைமுறை உணவுப் பழக்கம் தொடர்பான நடைமுறையாகும்.
இதில் :-
?பலிப்பிராணியின் மாமிசத்தை அறுப்பவருக்கு கூலியாகக் கொடுப்பது கூடாது,
?கொம்பு உடைந்தது, மெலிந்தது, நோய்ப்பட்டது ,
?ஆறுமாத ஆட்டுக் குட்டி கூடாது போன்ற
சில தடைகள் இதிலும் வந்திருப்பின் நாம் அதைக் கட்டாயம் எடுத்து நடக்க வேண்டும்.

அவ்வாறு எவ்வித சொற்பிரயோகங்களும் நபிவழியில் இல்லாத போது நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.

எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி
28/06/2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *