Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்

இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்

எம்மைப் படடைத்த படைப்பாளன் எல்லாம் வல்ல இறைவன் காலத்துக்குக் காலம் பல. வகையான சோதனைகளை எமக்கு ஏற்படுத்துகிறான். இந்த உலகில் கடுமையான சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டோர் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நபிமார்களாகும். சோதனைகளின் போது பொறுமையுடன் இருப்போரே வெற்றியாளர்கள் ஆவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏

நம்பிக்கை கொண்டோரே பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:153)

அல்லாஹ் கூறுகிறான்:

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

(அல்குர்ஆன் : 49:13)

وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏

இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.

(அல்குர்ஆன் : 5:2)

மேற்கூறப்பட்ட இரு வசனங்களிளும் நாம் ஒரே தாய், தந்தையின் பிள்ளைகள். ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் நடக்க வேண்டும். நன்மையான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி எமக்கு உபதேசிக்கின்றது.

சோதனைகளின் போது ஒருவருக்கொருவர் துணை நிற்றல் :

عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை (உண்மையான) இறை நம்பிக்கை கொண்டவராக ஆக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (13)

حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا مُعْتَمِرٌ عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
انْصُرْ أَخَاكَ ظَالِمًا ، أَوْ مَظْلُومًا قَالُوا : يَا رَسُولَ اللهِ هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا قَالَ تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
(புஹாரீ: 2444)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனைப் (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 2442.
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்.

நாம் எப்படியான நலவுகளை எல்லாம் எமக்கு நாடுவோமோ அது போன்றதை எம் சகோதரர்களுக்கும் நாட வேண்டும். அப்படி நாடாதவரை நாம் ஈமான்தாரிகளாக ஆக முடியாது. ஒரு இடரில் பாதிக்கப்பட்டவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அவனுக்கும் நாம் உதவ வேண்டும் என்கிற அளவுக்கு இஸ்லாம் சுயநலம் இல்லாது பிறர் நலம் நாடுவதை வலியுறுத்திப் பேசுகின்றது.

எதிலிருந்து எப்படியானவற்றை தர்மம் செய்ய வேண்டும்.?

நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவனாகவே இருக்கிறான்.” (3:92)

“தாம் எதைச் செலவிட வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக.” (அல்குர்ஆன் 2:215)

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ளமாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!”
(அல்குர்ஆன் 2:267)

சமூக சேவை செய்வோர் மற்றும் அதற்கு உதவுவோர் அனைவரும் ஹலாலானதைப் பிறருக்காக செலவு செய்வதுடன் நாம் எப்பொருளை எமக்காகப் பெற விரும்ப மாட்டோமோ அத்தகைய மட்டமான பொருளைப் பிறருக்கு வழங்கக் கூடாது. நாம் விரும்புகின்றவற்றில் இருந்து செய்யும் தர்மமே அல்லாஹ் விடம் மேலானது.

இந்த அடிப்படைகளுடன் இன்று பிறர் நலம் நாடி சமூக சேவை செய்வோரிடத்தில் காணப்படும் பாராட்டப்பட வேண்டிய காரியங்களையும், தவிர்கப்பட வேண்டிய காரியங்களையும் ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

1) பாராட்டப்பட வேண்டியவை:

Covid19 ஆக இருக்கலாம் , இன்னும் நாட்டில் அடிக்கடி ஏற்பட்டும் சீரற்ற காலநிலையாக இருக்கலாம். இவைகளின் காரணமாக பலர் அனர்த்தங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம். என்ற ஒரே எண்ணத்தில் அவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கான அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில். அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தவர்களாக பாதிக்கப்பட்டவர்களை தம் உறவாக எண்ணி பல இயக்கங்களும் , நிறுவனங்களும் ,தனிநபர்களும் ,உடலாலும், பொருளாலும் பல உதவிகளைச் செய்து தமது பணிகளைச் சிறப்பாகத் திட்டமிட்டு செய்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் இத்தகையோரின் இஹ்லாஸுக்குக் கூலி வழங்க வேண்டும்.

2) சமூக சேவையின் போது தவிர்கப்பட வேண்டியவை:

புகைப்படம் பிடிப்பது: காரணங்கள்.

உங்களது இஹ்லாஸுக்குப் பாதிப்பு வரலாம்.

உதாரணம்: மற்றவர் என் சேவைகளைக் காணவேண்டும், புகழவேண்டும் என்பதற்காகப் போட்டோ பிடிப்பது, வேலை செய்யாமலே வேலை செய்வது போல் புகைப்படத்துக்காக நடிப்பது .

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோர் முன்னர் சுய கௌரவத்துடன் வசதியாக இருந்தவர்களாக இருக்கலாம். இப்படிப் பட்டோர் நீங்கள் வழங்கும் ஒரு உணவுப் பொதியை பெற தலை குனிந்தவராக இன்னும் சோகமடைந்த நிலையில் போஸ் கொடுக்க வேண்டிவரும் அதை நீங்கள் உலகெங்கும் பரப்புவீர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அணிய ஒழுங்கான ஆடைகள் கூட இல்லாமல் நிர்ப்பந்தமான நிலையில் இருக்கும் போது அவர்களைப் படம் பிடித்து மீடியாக்களில் பரப்புவது.

இப்படி இன்னும் பல.. போட்டோப் பிடிக்கவே கூடாது என்று நான் கூறவில்லை. பாதிக்கப்பட்டோரின் நிலைமைகளை உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் பிடிக்கும் புகைப் படங்கள் ஆதாரத்துக்கான ஒரு தொகுப்பாக இருப்பபதில் தவறு கிடையாது .

நீங்கள் மக்களிடம் வசூலித்த பணத்தைப் பாதிக்கப்பட்டோரிடம் கொண்டுபோய் சேர்த்தீர்கள் . என்பதை சான்றாகக் காண்பிக்கப் போட்டோ பிடிப்பதாக இருந்தால் பெண்களைத் தவிர்த்து ஆண்கள் மற்றும் சிறுவர்களைப் படம்பிடித்து அதை வெளியிடும் போது அவர்களின் முகத்தை மறைத்து வெளியிடுங்கள். இந்த அனுகு முறைகளைக் கையால்வது சிறந்தது.

அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும். நாளை இதே நிலை நமக்கு வந்தால் நான் கூறுகின்றவை உங்களுக்கும் புரியும்.

3) பொது சேவையின் போது நானா? நீயா? போட்டி (தற்பெருமை)

நன்மையான காரியங்களில் அல்லாஹ்விடம் மாத்திரம் கூலியை எதிர்பார்த்துப் போட்டி போடுவதை இஸ்லாம் வரவேற்கின்றது.

ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இங்கே நடக்கும் போட்டி அதுவில்லை.

எனது இயக்கத்தை / எனது நிறுவனத்தைப் போல் உதவி செய்வோர் உண்டா?

எனது தலைவரைப் போல் / எமது ஜமாஅத் தொண்டர்களைப் போல் அற்பணிப்புடன் செயற்படுவோர் உண்டா?

நான் இன்ன, இன்ன உதவிகளைச் செய்தேன் நீங்கள் செய்தவை என்ன?

இப்படி அடுக்கடுக்காகப் பெருமையான வார்த்தைகளைப் பேசிப் பெரு மூச்சு விடுவோர் படிப்பினை பெற நபிகளார் (ஸல்) அவர்கள் கூறிய முன்னைய சமுதாயத்தில் இருந்த ஒரு நபிக்கும் அந்த சமூகத்துக்கும் நிகழ்ந்த நிகழ்வை நினைவூட்டுகின்றேன்…
பொருமையடிப்போரை அல்லாஹ் அழித்தே தீருவான்.

ஹதீஸின் சுருக்கம்

ஸுஹைப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஹுனைன் யுத்தத்திற்குச் சென்ற போது பஜ்ர் தொழுத பின்னர் நபியவர்கள் எதையோ மெதுவாகக் கூறினார்கள். அப்போது ” மெதுவாக எதையோ கூறுகிறீர்களே” என்று கேட்டோம். அப்போது அவர்கள் “பெரும்படை, பட்டாளம் வழங்கப்பட்ட ஒரு நபி தனது சமூகத்தைப் பார்த்து ” இவர்களுக்கு நிகராக யார் இருப்பர்? ” என்று கூறினார்கள்.

அப்போது அவருக்கு “மூன்று விடயங்களில் ஒன்றை உமது மக்களுக்குத் தெரிவு செய்யுங்கள்.

  1. விரோதிகளைச் சாட்டி விடுவது.
  2. பசி
  3. மரணம்

என்று (அல்லாஹ்வினால்) கூறப்பட்டது.

தனது மக்களுடன் ஆலோசித்துவிட்டுத் தொழ ஆரம்பித்தார்.

நபிமார்களுக்கு ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டால், தொழுகையின் பக்கம் விரைவார்கள்.

இறுதியாக மரணத்தைத் தெரிவு செய்கிறார். மூன்று நாட்களில் எழுபதாயிரம் பேர் மரணமடைந்தார்கள். என்று நபியவர்கள் கூறிவிட்டு (அதனால்தான்) மெதுவாக பின்வரும் துஆவை ஓதினேன். என்றார்கள்.

اللهم بك أحاول وبك اصاول ولا حول ولا قوة الا بك

இந்த செய்தியை ஸுஹைப் (ரழி) அவர்கள் வழியாக இமாம்களான இப்னு அபீஷைபா, மர்வஸீ, ஸர்ராஜ், அஹ்மத்,இஸ்மாயீலீ, ழியாஉ, நஸாயீ, இப்னு ஹிப்பான், பைஹகீ, ஆகியோர் ஒரு சம்பவத்துடன் பதிவு செய்துள்ளனர்.

ஒரு நபி இப்படிச் சொன்னதற்கே இந்தச் சோதனை என்றால் தம்முடைய கொஞ்ச அமல்களை நினைத்து, அறிவை வைத்துப் பெருமூச்சு விடுவோரின் நிலை என்னவாகும்…?

பெருமையடித்தல், மற்றவர்களை இழிவாகக் கருதுதல் போன்ற கெட்ட நடத்தை கொண்டோர் தங்களைத் திருத்திக் கொள்ள இது ஒரு சிறந்த சரித்திரமாகும்.

அல்லாஹ் என்னையும், உங்களையும் இவ்வாறன விடயங்களிலிருந்து பாதுகாப்பானாக..

عَن الحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ»

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். (நபித் தோழர்) மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் “நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்“ என்று சொல்ல கேட்டேன்“ எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 7150

ஒரு ஆட்சியாளர் தனது பொருப்பின் கீழுள்ள குடிமக்களின் நலனைக் காக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது. அதே போல் சமூக சேவைகளில் ஈடுபடுவோர் தாங்கள் யாரைப் பொருப்பேற்றுப் பணத்தை வசூலிப்பீர்களோ அத்தகைய தேவையுடையோர் விடயத்தில் மோசடிகள் நிகழ்ந்து விடாது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்று சிலர் ஏழைகளுக்கென வசூலிக்கப்படும் பணத்தில் கமிஷனடிப்பதைத் தொழிலாகச் செய்து வருகின்றார்கள். இத்தகையோர் சில ரூபாய்க்களுக்காகத் தாம் செய்யும் திருட்டால் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

✍ஆக்கம்:
அல் ஹாபிழ் இன்திகாப் (உமரீ)
இலங்கை.
2020/09/15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *