Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » எடை போடப்படும் நன்மையும் – தீமையும்!

எடை போடப்படும் நன்மையும் – தீமையும்!

الوزن அல்வஸ்ன் – எடை,

ميزان மீஸான் – தராசு,

توازن தவாஸுன் – எடைக் கருவி,

மனிதன் தனது வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒன்று அளவை கணக்கிட பயன்படுத்தும் கருவி “தராசு”.

இந்த நவீன உலகில் மனிதன் பிறந்தவுடன் முதலில் அவனது உடல் தராசில் வைத்து எடை போடப்படுகிறது. அக்குழந்தையின் எடை மூன்று கிலோவுக்கும் அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியமான குழந்தை என்றும் மூன்று கிலோவுக்கும் குறைவாக இருந்தால் அது இன்னும் ஆரோக்கியம் தேவைப்படும் குழந்தை என்றும் இன்றைய மருத்துவ உலகம் கூறுகின்றது.

மனிதன் தனக்குத்தேவையான உணவுப் பொருட்களிலிருந்து கட்டுமானப் பொருட்கள்வரை அத்தனையும் அளந்து எடை போட்டுத்தான் பெறுகின்றான். விலை உயர்ந்த அல்லது விலை மலிவான ஆடைகள் முதல், தனது பாதங்களுக்கு அணியும் பாதணிகள் வரை அளவுகோல் வைத்து அளந்துதான் வாங்கமுடியும்.

கண்களால் பார்க்க முடியாத காற்றையும் அளந்து எடைபோட்டுத்தான் வாகனத்தின் டயர்களுக்கு நிரப்பப்பவேண்டும். அந்த வாகனத்தில் ஏற்றப்படும் சுமைகளையும் அளந்துதான் ஏற்றவேண்டும். அளவுக்கு அதிகமாக நிரப்பப்படும் காற்றும், சுமையும் வாகனத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அதிகப் பணம் கொடுத்து, அளவில் குறைவாக வாங்கப்படும் தங்கம் முதல் பணம் குறைவாகக் கொடுத்து அளவில் அதிகமாக வாங்கப்படும் உப்புவரை அத்தனைப் பொருட்களையும் நிறுத்து எடை போட்டுத்தான் மனிதன் பெற்றுக்கொள்கின்றான்.

மனிதன் வாழ்வதற்கான வீட்டுமனை முதல் அவன் மரித்த பின்பு அவனை புதைப்பதற்கான புதைக்குழிவரை அளவுகோலைக் கொண்டு அளக்கப்படாமல் இல்லை! ஆக தராசு, அளவுகோல், எடைக் கருவி என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாகும்.

அதே போன்று வியாபாரத்தில் அளவையிலும், நிறுப்பதிலும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள், அளவையில் மோசடி செய்பவன் பாவத்தை சுமக்கின்றான், எடையில் மோசடி செய்பவனுக்குக் கேடுதான், அளப்பதிலும் நிறுப்பதிலும் நீதமாக நடந்துகொள்ளுங்கள், அளந்தால் நீதியாக சரியான தராசைக்கொண்டு நிறுத்து அளந்துகொடுங்கள் என்று அளவுகோல் மற்றும் தராசைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்படுகின்றது. (பார்க்க அல்குர்ஆன்:06:152, 07:85, 11:84, 11:85, 17:35, 26:181)

இப்படியாக தனது வாழ்நாள் முழுவதும் எடைக் கருவியை தவிர்க்க முடியாமல் வாழ்ந்த மனிதனின் செயல்களும் மறுமை நாளில் தராசில் வைத்து எடை போடப்படுகிறது.

அல்லாஹ், மறுமை நாளில் மனிதர்களின் நன்மை தீமைகளை நீதமான தராசைக் கொண்டு நிறுத்து அதிக நன்மையையோடு வருபவர்களை சொர்க்கத்திலும், அதிகம் தீமையோடு வந்தவர்களை நரகத்திலும் புகுத்துவான் என்பது அல்குர்ஆன் போதிக்கும் அடிப்படைகளில் உள்ளதாகும்.

وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــٴًـــا‌ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌ وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ‏

மறுமை நாளுக்காக நியாயமான தராசுகளை நாம் நிறுவுவோம். எனவே, எந்த உயிருக்கும் சிறிதளவுகூட (அப்போது) அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகின் வித்தளவு (ஒரு செயல்) இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வந்து விடுவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன்:21:47)

ஏமாற்றக் கூடிய, கள்ளத்தனம் செய்யக்கூடிய தராசும் அளவுகோலும் இந்த பூமியில்தான். உதாரணமாக ரேஷன் கடையில் மூன்று கிலோ சர்க்கரை வாங்கினால் 2,700 கிராம்தான் இருக்கும், மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் அதில் முன்னூறு மில்லி குறையும்.

அதேபோன்று நிலத்தகராறில் கைகலப்பு வரை போவதெல்லாம் நிலத்தை அளந்த அளவுகோல் மூலம் செய்த மோசடியால், இதுபோன்ற கள்ளத்தனங்கள் செய்யும் தராசும் அளவுகோலும் இந்த பூமியில்தான். மறுமையில் அல்லாஹ்விடம் உள்ள தராசு மிகவும் நீதமானது நேர்மையானது. அதில் ஒரு சிறிய வித்தளவு எடையையும் மிகத்துல்லியமாக காட்டிவிடும்.

يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ ‌ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‏

என் அருமை மகனே! நிச்சயமாக கடுகின் வித்தளவு எடை உள்ளதையும், அது பாறையில் அல்லது வானங்களில், அல்லது பூமியில் (மறைந்து) கிடந்தாலும் அதையும் அல்லாஹ் வெளியே கொண்டுவந்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான். (என்று லுக்மான் கூறினார். (அல்குர்ஆன்: 31:16)

அதாவது மனிதன் செய்யக்கூடிய நன்மையோ – தீமையோ எதுவாயினும் அது அணுவளவு இருந்தாலும் சரி, அது கற்பாறைக்குள் மூடி மறைக்கப் பட்டிருந்தாலும் அதையும் அல்லாஹ் வெளியில் கொண்டுவந்து அவன் துரோகமிழைக்கப்படாமல் அதை நிறுத்து எடை போடப்பட்டு அதற்கான பிரதிபலன் வழங்கப்படுவான். இதனால்தான் லுக்மான் தன் மகனிடம் இதையெல்லாம் செய்யக்கூடிய அல்லாஹ் மிகவும் நுட்பாமானவனாவான், நன்கு அறியக்கூடியவன் என்று கூறினார்.

وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ‌ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ‏

அந்நாளில் (நன்மை-தீமையை) எடை போடுதல் நியாயமாக இருக்கும். யாருடைய (நன்மையின்) எடை கனமாக இருக்குமோ அவர்கள்தான் வெற்றியாளர்கள். யாருடைய நன்மையின் எடை கணம் குறைவாக இருக்குமோ அவர்கள் தமக்குத்தாமே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஆவர். நமது வசனங்களின் மீது அநீதி இழைத்துகொண்டிந்ததே இதற்கு காரணமாகும். (அல்குர்ஆன்: 07:8-9)

فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏
فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ‏
وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ‏
فَاُمُّهٗ هَاوِيَةٌ ‏

அந்நாளில் (மறுமை) நாளில் எவருடைய நன்மையின் எடை கனத்ததோ அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் (சுவனத்தில்) இருப்பார். ஆனால் எவருடைய நன்மையில் எடை இலேசாக இருந்ததோ அவர் தாங்கும் இடம் “ஹாவிய”தான் ஹாவிய என்பது சுட்டெரிக்கும் நரகமாகும். (அல்குர்ஆன்: 101: 6-9)

மறுமை நாளில் மனிதர்களின் நன்மை – தீமையை எவ்வாறு எடை போடப்படும் என்பதில் மூன்று விதமாக கருத்துக்கள் உள்ளன:

1- நன்மை – தீமைகளுக்கு உருவத்தை அல்லாஹ் வழங்கி அதை தராசில் வைத்து எடை போடப்படும்.

2- நன்மை – தீமைகள் பதியப்பட்ட ஏட்டை (பதிவுப் புத்தகத்தை) தராசில் வைத்து எடை போடப்படும்.

3- நன்மை – தீமைகளைச் செய்த அந்த மனிதனை தராசில் வைத்து எடை போடப்படும்.

இந்த மூன்று கருத்துக்களுக்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. ஆனால் அந்த தராசு எப்படி இருக்கும் என்பதை அல்லாஹ் ஒருவனே நன்கு அறிவான்!

ஆகவே நற்செயல்கள் குறைந்துவிட்ட இக்காலத்தில், ஒரு வித்தளவு நன்மை தரக்கூடிய அல்லது ஒரு அணுவளவு நன்மை தரக்கூடிய காரியமாக இருந்தாலும் அதைச்செய்யும் வாய்ப்பு யாருக்கெல்லாம் கிடைகின்றதோ அவர்கள் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நன்மையின் எடை கனத்த நிலையில் மறுமையில் தன் ரப்பை (இரட்சகனை) சந்தித்து சுவனத்தை அடையவேண்டும் அவர்தான் வெற்றி பெற்றவராவார்.

oOo
✍️
Muthupettai Sulthan
29/02/1442h.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *