Featured Posts
Home » பொதுவானவை » கொஞ்சுவதும் – முத்தமிடுவதும்

கொஞ்சுவதும் – முத்தமிடுவதும்

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். அதுவும் பச்சை பிஞ்சுக் குழந்தை என்றால், கேட்கவே வேண்டாம். உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கிவிடுவோம். மிகப்பெரிய கோபக்காரரும் கண்ணசைவில் குழந்தையை சில நொடிகள் கொஞ்சிவிடுவார்.

யாரென்றே அறிமுகமில்லாதவர் குடும்பத்தோடு பேருந்தில் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது அவர்களின் பச்சிளம் குழந்தைகளை பின் இருக்கையில் இருப்பவர்கள் கொஞ்சுவதும், அமர்வதற்கு இருக்கை இல்லாமல் நின்றுகொண்டே பயணிக்கும் தாயின் கையிலுள்ள குழந்தையை இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் வாங்கி தன் மடியில் வைத்துக்கொள்வதும் மனிதனின் இரக்க குணங்களில் உள்ளதாகும்.

இரக்கம் காட்டுதல் என்ற ஒரு பண்பை மட்டும் இறைவன் மனிதனுக்கு வழங்கவில்லையெனில் மனிதர்களிலும் மிருகங்களிலும் அன்றாடம் லட்சக்கணக்கான உயிர்கள் அழிந்துகொண்டே இருக்கும்.

குழந்தைகளைக் கொஞ்சுவது, அவர்களை முத்தமிடுவது, அவர்கள்மீது இரக்கம் காட்டுவது போன்ற அனைத்தும் படைத்த இறைவன் மனிதனுக்கு வழங்கிய நற்குணங்களின் உள்ள முக்கியமான ஒரு அம்சமாகும்.

இந்த இரக்கக் குணத்தை மனிதர்களுக்கு மட்டுமில்லை மிருகங்கள், பறவைகளுக்கும்தான் இறைவன் வழங்கியிருக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றின் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டு கால் குளம்பைத் தூக்கிக்கொள்கிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்: 5310)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்: 5312)

கொடிய குணமும், கடின மனமும் கொண்டவர்களால் குழந்தைகளை அவ்வளவு எளிதில்  கொஞ்சமுடியாது. குழந்தைகளைக் கொஞ்சுவதற்கும், அவர்களை முத்தமிடுவதற்கும் இரக்கக் குணம் தேவை. இரக்கக் குணம் உள்ளவர்களால் மட்டும்தான் குழந்தைகளைக் கொஞ்சமுடியும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்” என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையை (இரக்கக் குணத்தை)ப் பறித்துவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்: 4636)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதை கண்ட அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “விஷயம் தெரியுமா? கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்” என்று சொன்னார்கள். அபூஹுரைரா (ரலி) (ஸஹீஹ் முஸ்லீம்: 4637)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள்மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லீம்: 4638)

மேலே குறிப்பிட்ட ஐந்து நபி மொழிகளும் குழந்தைகளை முத்தமிடுவது, அவர்கள் மீது கருணை காட்டுவது, இரக்கம் காட்டுவது போன்ற பண்புகளைத் தெளிவுபடுத்துகின்றது.

அன்பு, கருணை, பரிவு, இரக்கம், நேசம் இவை அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த பல்வேறு சொற்களாகும். ஒருவருக்கு அன்பும், கருணையும், இரக்கக் குணமும் இருக்கின்றதா என்பதை அவரது நாடியைப் பிடித்துப் பார்க்கமுடியாது! அவர் மற்றவர்களோடு எப்படி நடந்து கொள்கின்றார் எப்படிப் பழகுகின்றார் என்பதை வைத்துத்தான் அவருக்கு இருக்கும் அன்பையும், இரக்கக் குணத்தையும் கணிக்கமுடியும்.

ஒருவன் அன்பையும் இரக்கத்தையும் முதலாவதாக தன் இல்லத்திலிருந்து துவங்கவேண்டும். தன் குழந்தைகள்மீது இரக்கம் காட்டாதவன் எப்படி பிறர்மீது இரக்கம் காட்ட முடியும்? அன்பு செலுத்தி, பரிவு காட்டி, இரக்கம் கொண்டு முத்தமிட்டு வளர்க்கப்படும் குழந்தை, அது பிறர் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்கள் மீது கருணை காட்டவும் கற்றுக்கொள்கிறது.

மேலை நாடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளைக் கொஞ்சுவதும் அவர்களை முத்தமிடுவதும் மிக மிகக் குறைவு. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பதிலாக அவர்கள் நாயையும், பூனையையும் முத்தமிட்டுக் கொஞ்சுகின்றனர்.

நமது சமூகத்திலும் குழந்தைகளைக் கொஞ்சி – முத்தமிடும் இந்த நற்பண்பு சிறுகச்சிறுக குறைந்து கொண்டே வருகின்றது. குழந்தைகளைக் கொஞ்சுவதற்காக நாம் ஒதுக்கிய நேரங்களை எல்லாம் இப்போது ஆன்ராய்டு போனும், சமூக ஊடகங்களும் அபகரித்துக் கொண்டது.எனவே அன்பும் கருணையும் கொண்ட சமூகத்தை உருவாக்கச் சிறுவர்கள் மீது அன்பு செலுத்தி குழந்தைப் பருவம் முதல் அவர்களை முத்தமிட்டுக் கொஞ்சப்படவேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

S.A.Sulthan

Jeddah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *