Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » கர்ப்பிணிகளே…! வானவர்கள் உங்களைக் கண்காணிக்கின்றார்கள்

கர்ப்பிணிகளே…! வானவர்கள் உங்களைக் கண்காணிக்கின்றார்கள்

உம்மு  உபாதா

ஒவ்வொரு பெற்றோரும் தாம் பெற்ற பிள்ளைகள் ஸாலிஹானவர்களாக வளர வேண்டும்., அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்., நாம் நினைப்பது போன்று சமூகத்தில் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று குழந்தை பிறந்ததிலிருந்தே அவர்களின் வளர்ப்பு பற்றி ஆராய்வதிலும், படிப்பதிலுமே பெற்றோர்களாகிய ஒவ்வொருவரினதும் காலம் கழிகின்றது. அதிலும் குறிப்பாகத் தாயானவள் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஆராய்ச்சி செய்தே அவர்கள் உளவியலாளர்களையும் மிகைத்து விட்டார்கள்.

இஸ்லாம் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் அதிக அக்கறை காட்டுகின்றது. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறும் கட்டளையிடுகின்றது.

இஸ்லாம் பிள்ளை வளர்ப்பு பற்றிக் கூறும் போதும் ஒரு பெண் கருவில் குழந்தையை சுமக்கத் தயாராகும் போதும் தான் எப்படியிருக்க வேண்டும் என்பதையும், அந்தப் பிள்ளை பிறந்து உலகத்தைக் கண் திறந்து பார்க்க முன்னர் அதனைச் சுமக்கும் தாய் எப்படி இருக்க வேண்டுமெனவும் அறிவுரை கூறுகின்றது.

குழந்தை கர்ப்பத்தில் உருவாகிய முப்பத்து ஒராவது நாளிலே குழந்தை உளவியல், குழந்தை வளர்ச்சி,, குழந்தை வளர்ப்பு என யூடியூப்பிலும், கூகுலிலும் தேடித்தேடியே பத்து மாதமும் கழிந்து விடுகின்றது.

பிள்ளை பெறுவதையும், வளர்ப்பதையும் பற்றி அல்குர்ஆனையும், ஹதீஸையும் விட எதிலுமே தெளிவாகக் கூறப்படவுமில்லை. அப்படி யாராலும் தெளிவாகக் கூறி அல்குர்ஆனையும், ٧ஹதீஸையும் வென்றுவிடவும் முடியாது.

முதலாவதாக.

கணவன் மனைவி ஒன்று கூடும் போது ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புப் பெற்ற குழந்தை தான் வேண்டுமென்று உறுதியாக அல்லாஹ்விடம் பொருப்புச்சாட்டி விட்டுத்தான் ஒன்று கூட வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்.

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னா வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா
பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.
ஆதாரம்: புகாரி

இரண்டாவது

தான் கற்பமானதை ஒரு பெண் அறிந்து விட்டால் அவள் தனக்கும், பிள்ளைக்கும் எந்தளவு உடல் ஆரோக்கியம் வேண்டும் என்பதை கற்றுக்கொள்கின்றாளோ அதே போன்று இரண்டு பேருடைய உள ஆரோக்கியமும் சிறப்பாக அமையவும் முயற்சி செய்ய வேண்டும் .

தாய்க்கும், சேய்க்கும் சிறந்த உள ஆரோக்கியம் வேண்டுமென்றால் அதிகமாக அல்லாஹ்வுடன் நெருக்கத்தைப் பேண வேண்டும். ஏனென்றால் பெண்ணுக்குக் குழந்தைப் பாக்கியம் என்பது அல்லாஹ்வால் வழங்கப்படுகின்ற மிகப்பெரும் அருட்கொடையாகும்.

ஒரு பெண் கர்ப்பமானால்

அவளுடைய முதல் நாற்பதாவது நாளில் அல்லாஹ்வின் சங்கையான வானவர் ஒருவர் வந்து கருவைப் பற்றி அல்லாஹ்விடம் எடுத்துக் கூறுவார். மீண்டும் இரண்டாவது நாற்பதிலும் வந்து அதன் நிலையைப் பற்றி அல்லாஹ்விடம் எடுத்துக் கூறுவார். மீண்டும் மூன்றாவது நாற்பதான நான்காவது மாதத்தில் அதாவது 120 நாட்களில் அந்த சங்கையான வானவர் வந்து கருவில் உள்ள பிள்ளைக்கு அல்லாஹ்வின் உதவியுடன் நான்கு விடயங்களைக் கொண்டு எழுத முற்படுவார். அதாவது
நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், (செயல்பாடு), அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா ஆணா பெண்ணா(ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்.

அதில் தான் அந்தப் பிள்ளையின் உலக வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்ப, துன்பங்கள் உற்பட அனைத்து நடவடிக்கையும் அடங்கியிருக்கும். அதுமட்டுமல்லாமல் மரணித்த பின் நாம் எதிர்பார்த்திருக்கும் மறுமையின் இறுதி முடிவான சுவனம், நரகம் என்பனவும் எழுதி முற்றுப் புள்ளியும் வைக்கப்பட்டும்.

நிச்சயமாகக் கற்பமான ஒவ்வொறு பெண்ணிடத்திலும் தான் சுமந்திருக்கும் குழந்தையின் இந்நிகழ்வுகளை எழுதுவதற்காக ஒரு வானவர் வந்தே தீருவார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் அந்த சத்தியமான, உண்மையான விடயத்தில் நாமெல்லோரும் மிகவும் பொடுபோக்கானவர்களாக இருந்து விடுகின்றோம் என்பதே கவலையான விடயமாகும்.

பொதுவாக உலக மக்கள் எல்லோரும் வானவர்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் கற்பமான பெண்ணிடம் வானவர்கள் வந்து கர்ப்பத்தின் நிலையைக் கண்காணிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு கட்டமாகும். குறிப்பாக அல்லாஹ்வால் அனுப்பப்படும் சங்கையான வானவரை வரவேற்கக் கர்ப்பமான பெண்கள் தயாராக இருக்கின்றார்களா??.

எங்களுடைய நண்பர்களோ, தெரிந்த ஒருவரோ எங்களுடைய வீடுகளுக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் நாம் நம்முடைய வீட்டை எவ்வளவு சுத்தமாகவைத்திருப்போம். அவர்களை வரவேற்க எவ்வாறான முன் ஆயத்தங்களைச் செய்வோம். வீட்டில் உள்ள எந்தக் குறையும் கண்ணில் படாமல் தேவையற்ற பொருட்களை எறிந்து விடுவோம். நாம் எந்தளவு அவர்களை வரவேற்கத் தயாராகி முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றோம்.

ஒரு சாதாரண மனிதரின் வருகைக்காகத் தயாராகும் நாங்கள் குறிப்பிடப்பட்ட அந்த நாட்களில் ஏதோ ஒரு நேரத்தில் சங்கையான வானவர் ஒருவர் தன்னிடம் வருவார் என்பதை உருதியாக அறிந்தும் அவரை வரவேற்கத் தயாராகமல் இருக்கிறோம். நாமெல்லோரும் வரக்கூடிய அந்த வானவர் எந்த ஒரு தங்கடமுமே இல்லாமல் எங்கள் வீடுகளுக்குள் நுளைந்து எந்த அசொளகரியங்களுமின்றி எங்களிடம் வந்து எம் வயிற்றினுள் இருக்கும் குழந்தையின் உணவு, அஜல் நல்லவரா? கெட்டவரா? ஆணா? பெண்ணா? போன்ற விடயங்களை எம்மிடம் ஊதும் வரை நாம் நல்ல முறையில் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

இந்த வானவர் நாம் விரும்பியோ, விரும்பாமலோ நாம் தயாராகாமல் இருந்தாலும் அவர் வந்துவிட்டுத்தான் போவார் என்பது உருதியானதே.
எனவே வர இருக்கும் வானவர் அதிருப்தியுடன் நம்மை வந்தடையாமல் திருப்தியோடும், ரஹ்மத்தோடும் எங்களை வந்தடைய நாம் தயாராக இருக்க வேண்டும்.

அந்த வானவர் வருகின்ற முக்கியமான அந்த 120ஆவது நாளில் நாம் எப்படித் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் எப்படியான இடங்களுக்கு வருவார்கள்? எவ்வாறான இடங்களை வெறுப்பார்கள் என்பதை நாம் கற்றிருக்கின்றோம்.

நாயும், உருவப்படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள். எனவே உருவப்படங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உருவப்படங்களாகக் குழந்தைகளிடம் இருக்கும் விளையாட்டுப் பொருட்களில் உள்ள உருவங்களை மறைத்து வைக்க வேண்டும்.

சுவர்களில் மாட்டியிருக்கும் உருவங்களை அகற்ற வேண்டும்.

அவர்கள் எந்தவிதமான தங்கடங்களும் இன்றி வீட்டினுள் நுளைய வீட்டை சுத்தப் படுத்தி வைக்க வேண்டும்.

குழந்தைகளின் சிறுநீர், மலம் போன்ற அசுத்தங்களை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும்.

எங்களின் வாய், மற்றும் உடலில் துர்வாடைகள் வராத வண்ணம் சுத்தமாக இருக்க வேண்டும்.

குளிப்புக் கடமையான நிலையில் இருந்தால் மலக்குமார்கள் வரமாட்டார்கள். எனவே அந்த நிலையிலிருந்து நீங்க வேண்டும்.

தஹஜ்ஜுத், ளுஹாத் தொழுகைகளைத் தொழுது அன்றைய நாளை வழமைக்கு மாற்றமாக அமைத்துக் கொள்வது சிறந்ததே.

அல்குர்ஆனை நாம் ஒதிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் எம்மிடம் வந்தடைய முயற்சி செய்ய வேண்டும்.

அவர்கள் வந்து எங்கள் குழந்தைக்கு எதை,எப்படி எழுத வேண்டுமென்று அல்லாஹ்விடம் கேட்டுக்கேட்டு எழுதுவார்கள். அன்றைய நாளில் தஹஜ்ஜத், ளுஹா தொழுகைகளைத் தொழுது ஸுஜுதில் இருந்து கொண்டு அல்லாஹ்விடம்.

யா அல்லாஹ்

இன்றைய நாளில் என் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் உணவைப் பற்றி நிர்ணயிக்கப் போகின்றாய் அது ஹலாலானதாக மட்டுமே இருக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வது சிறந்தது.

என் குழந்தையின் மரணம் எப்போது என்று குறிப்பிடப் போகின்றாய் ரஹ்மானே!! என் குழந்தை சுவனவாதியான நிலையில் சிறந்த முறையில் மரணிக்கும் பாக்கியத்தை எழுதிவிடப் பிரார்த்தனை செய்வது சிறந்தது.

என் குழந்தை நல்லவனா, கெட்டவனா என்று எழுதப் போகின்றாய் றஹ்மானே எனவே என் குழந்தை அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டு இறையச்சமுடைய குழந்தையாகவும்,உன் கருணையைப் பெற்ற குழந்தையாகவும் வாழ்ந்திடும் பாக்கியத்தை எழுதிவிடு எனப் பிரார்த்தனை செய்வது சிறந்தது.

நம் குழந்தை ஆணா? பெண்ணா? என்று எழுதப் போகின்றாய் எனவே சாலிஹான சந்ததிகளை உருவாக்கப் பொருத்தமான குழந்தையாக எனக்குத் தருவாயாக எனப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆரம்பத்தில் நாம் கேட்கும் பிரார்த்தனையின் மூலம் நம் கருவில் உருவாகும் குழந்தையானது பிறந்து வளரும் போதே ஸாலிஹான பிள்ளையாக வளர அல்லாஹ் உதவி செய்வான் இன்ஷா அல்லாஹ்.

இன்று பெற்றோர்கள் வட்டி எடுப்பதால், பிறந்த பச்சிளம் குழந்தை அது அறியாமலே ஹராமான உணவைச் சாப்பிடுகின்றது.

பெற்றோர்கள் புரிந்து கொள்ளாமல் பிடிக்கின்ற சண்டைகளில் அதிகமான பிள்ளைகள் விரக்தியுடன் சமூகமே வெறுக்கின்ற விதத்தில் வளர்கின்றனர்.

பெற்றோரின் முன் கோபங்களினால் சாபமிடப்படுகின்ற குழந்தைகள் எதிர்காலமே இல்லாமல் நிம்மதியிழந்து அழைகின்றனர்.

குழந்தை கருவில் இருக்கும் போதோ, அல்லது அது பிறந்த பின்னரோ நாம் ஏதும் பிழைகள் விட்டோம் என்பதை உணர்ந்தால் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டும். எங்களுடைய பொடு போக்கினால் எங்கள் பிள்ளைகள் வீணாகிவிடக் கூடாது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். எங்களுடைய பிரார்த்தனையால் மாற்ற முடியாதது எதுவுமே இல்லை. நிச்சயமாக பெற்றோர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரிக்கக் கூடியவனாகவே இருக்கின்றான்

குழந்தை பெற்றெடுக்க ஆசைப்படும் நாம் , நல்லொழுக்கமான பிள்ளைகளாக வளர்க்க வேண்டுமென ஆசைப்படும் நாம் முதலில் அல்லாஹ்வுடனான நெருக்கத்தைப் பேண வேண்டும். அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைப் பாக்கியம் என்பது அல்லாஹ் தான் நாடியோருக்கு மட்டும் கணக்கின்றியே கொடுக்கும் ஒரு அமானிதமான அருட்கொடையாகும்.

அல்லாஹ்வாலே கொடுக்க முடிந்த அருட்கொடையை சிறப்பான முறையில் வளர்த்தெடுக்க பெற்றெடுப்பவர்களுக்கு அல்லாஹ்வின் மீதான தொடர்பு அதிகமானதாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாகப் பிள்ளை விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாம் குழந்தை பெற்ற பின்னர் என்ன செய்ய வேண்டுமென்று படிக்கும் முன்னர் குழந்தையைப் பெற்றெடுக்க முன்னர் எப்படிச் செப்பனிட வேண்டுமென்று தான் படிக்க வேண்டும்.

ஐந்தில் வளைக்காதது ஐம்பதில் வளையுமா என்கின்றோம். கருவிலே வளைத்து விட்டால் ஐந்திலும் வளைக்கச் சிரமப்படத் தேவையில்லை என்றும் சிந்திக்கலாம்.

குழந்தைப் பாக்கியம் பெற்ற பெண்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள் தான். அவர்கள் அல்லாஹ்வின் முன்நிலையில் விசாரணைக்காக. நிறுத்தாட்டப்பட்டு குடும்பப் பொறுப்பு பற்றியும், தன்னிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் பற்றியும் விசாரிக்கும் போது அதில் வெற்றி பெற்றால்தான் மிகவும் பாக்கியம் பெற்றவளாகத் திகழ்வாள் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் நம் அனைவரையும் இறையச்சமுள்ள சந்ததிகளை உருவாக்கும் பெற்றோர்களாக மாற்ற அருள்புரிவானாக.

ஆக்கம்:
உம்மு உபாதா உஸைமீனிய்யா

(ஷிபானா நவாஸ்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *