Featured Posts
Home » நூல்கள் » இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (2)

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (2)

இனி, ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பதற்குக் கொள்ளப்படும் மற்றிரு பொருள்கள் பற்றிக் கூற விரும்புகிறேன். இப்பொருள்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என நான் கருதுகிறேன். முதலாவதாக ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பது பின்வரும் பொருள்களைக் குறிக்கலாம்: இன்றைய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அழைப்பினை எவ்வாறு ஏற்றுள்ளனர்? எந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் இஸ்லாத்தின் முத்திரை பதிந்துள்ளது? அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாம் என்பது அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும் கண்ணியமானதாக்கவும் ஆற்றல் பெற்ற ஒரு சக்தியாகத் திகழ்கின்றதா? அவர்கள் இஸ்லாத்தின் உண்மையான கருத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றனரா? அவர்களின் வாழ்க்கை இஸ்லாமிய சன் மார்க்க உணர்வைப் பிரதிபலிக்கின்றதா?

இரண்டாவதாக, ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பதன் பொருள் பின்வருமாறு அமையலாம்: இன்றைய யுகத்தில் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கதா? அதன் கருத்துக்கள், கோட்பாடுகள் நவீன யுகத்தில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தத்துவ ரீதியான, விஞ்ஞான ரீதியான கருத்துக்களுக்கு முற்றாக பொருந்துகின்றனவா? இஸ்லாம் செயல் படுத்தக் கூடிய ஒரு சமய நெறியை தற்கால மனிதனுக்கு அளிக்கின்றதா? சுருங்கச் சொன்னால் இந்த விஞ்ஞான, தொழில்நுட்ப யுகத்தில் இஸ்லாம் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை மனிதனுக்கு அளிப்பதாக உறுதிப்படுத்த முடியுமா?

சுருக்கமான எனது இவ்வுரையில் இவ்வினாக்களுக்கு விடையளிக்க முயல்வேன்.

இஸ்லாத்தைப் பற்றிய இன்றைய முஸ்லிம்களின் மனோபாவத்தை விளங்கிக் கொள்வதற்கு, சென்ற கால முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்குமிடையே நிலவிய தொடர்பினைப் பற்றி ஓரளவேனும் அறிந்து கொள்வது அவசியம். நாம் எமது மூதாதையர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள பாரம்பரியங்கள் எம்மீது பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன. அதே போன்று எதிர்கால முஸ்லிம்களின் மனப்போக்கு எவ்வாறு அமையும் என்பதை நாம் அவர்களுக்கு விட்டுச் செல்லும் பாரம்பரியங்களே தீர்மானிக்கும். முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்குமிடையே பல்வேறு வகையான தொடர்புகள் நிலவக் காரணம் என்ன என்பதை கடந்த கால வரலாற்றின் துணை கொண்டே நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்குகையில் இஸ்லாம் நன்கு வரையறுக்கப் பட்ட மூன்று கட்டங்களைக் கடந்திருக்கிறது எனத் தெரிகிறது. அது இப்பொழுது நாலாவது கட்டத்தை அடைந்திருக்கிறது. இக்கட்டங்களை மதிப்பீடு செய்வது, மிகப் பெரிய அளவில் கைத்தொழில் மயமாக்கப்பட்ட எதிர்கால சமுதாயத்தில் – இஸ்லாம் தொடர்ந்து ஓர் ஒழுக்கச் சக்தியாக மிளிருமா என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய பயனுள்ள ஆராய்ச்சிக்கு அவசியமான பின்னணியாக அமையும்.

வளரும் – இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *