Featured Posts
Home » நூல்கள் » RSS ஊழியன் » RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 3.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 3.

இப்படியாக வேலைக்குச் சென்றதனால் எனது படிப்பும் அத்தோடு முடிந்து போனது. இப்படி நான்கு வருடம் அப்பாவுடன் வேலை பார்த்து எனது மழலைப் பருவத்தைக் கழித்தேன். வேலை செய்து திரும்பும்போது அப்பா என்னையும் அழைத்துக்கொண்டு சாராயக் கடைக்குச் செல்வார். அப்பா இரண்டு லிட்டர் சாராயத்தை அருந்துவார். நான் கிழங்கும் மீனும் சாப்பிடுவேன். இப்படி சாராயக் கடைக்குச் சென்றுச் சென்று சில நாட்களில் அப்பா கையாலேயே எனக்கு சாராயம் குடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சந்தோஷமாக நான் பயன்படுத்தினேன். அன்று இரவு சாராய மந்தத்தால் நிம்மதியாக தூங்கினேன்.

இவ்வாறிருக்க அப்பாவுடன் வேலை செய்வதற்கு எனக்கு கண்ணியக்குறைவாக இருந்தது. சொந்தமாக வேலை பார்ப்பதற்காக நான் ஊரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டுவிடுவேன்.

அங்கிருந்து நான் ராமபுரம் என்ற இடத்தைச் சென்றடைந்தேன். அங்கு கொச்சுவர்கிச்சன் என்ற ஒருவரின் வீட்டில் வேலை பார்த்து வந்தேன். இரவு வேளையில் ஒரு சாக்கை விரித்து விட்டு வராண்டாவில் தான் தூங்குவேன். எனது முதலாளி கொச்சுவர்கிச்சன் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். அவர் அடிக்கடி என்னிடம் “வேலாயுதா நீ ஒரு கிறிஸ்தவனாகி விடு; நல்ல ஒரு கிறிஸ்தவப் பொண்ணை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன் என்றெல்லாம் சொல்வார்”. அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை.

காரணம் அந்த ஊரில் ஏற்கனவே என் இனத்தைச் சார்ந்த தலித் மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இருந்தார்கள். இந்தத் தலித் மக்களை கிறிஸ்தவர்கள் மிக மோசமாகத்தான் நடத்தி வந்தார்கள். தலித் கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர்களைப் பார்த்தார்கள்.

கிறிஸ்தவனாக மாறினால் எனக்கும் இந்த நிலைதான் என்ற அச்சத்தால் தான் நான் கிறிஸ்தவனாக மாறவில்லை.

மாட்டுச் சாணம் சுமப்பதுதான் எனக்கு அங்கு முக்கிய வேலையாக இருந்தது. சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு என் சொந்த ஊ ருக்குத் திரும்பிவிட்டேன். இப்போது நான் ஒரு இளைஞனாக மாறியிருந்தேன்.

இந்த வாலிப பருவத்தில் அம்மாவைப் போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. நான் மனிதனாகி விட்டதால் அப்பாவும் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நினைத்து வீட்டிற்குச் சென்றேன்.

அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது அம்மா வேறு திருமணம் செய்து விட்டாள் என்று. என் ஆசைகளும் கனவுகளும் அத்தோடு உடைந்துபோயின.

அம்மாவின் சொந்த இடத்தில் ஒரு குடிசையில் நானும் அம்மாவும் என் தங்கை அம்மிணியுமாக சந்தோஷமாக இனிவரும் நாட்கள் வாழலாம் என்று நினைத்தேன். எனது ஆசை மண்ணாகிப்போனது. ஒரு போதும் மறக்க முடியாத ஒரு கவலையாக எனது வாழ்வில் அது நின்று நிலைத்தது.

இறைவன் நாடினால் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *