Featured Posts
Home » வரலாறு » இந்தியாவில் இஸ்லாம் » இந்தியாவில் இஸ்லாம்-13

இந்தியாவில் இஸ்லாம்-13

தொடர்-13: தோப்பில் முஹம்மது மீரான்

ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்களுடைய ‘துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்’ (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்று கூறுகின்றனர்.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் “பள்ளி பாண பெருமாள்” என்ற சேரநாட்டு பெருமாள் ஒருவர் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பெருமாளுடைய காலம் “இருண்ட காலத்தின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவருக்கும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பரான சேரமான் “சேரமான் பெருமாள்” என்ற பெயரில் புகழ்பெற்ற சேரநாட்டு கடைசி பெருமாள் அரேபிய பயணம் மேற்கொண்டார். இவருடைய காலம் வரலாற்றில் ஒளி படர்ந்த காலமாகும். அதனால் இவருடைய அரேபியப் பயணமும், இவர் அரேபியப் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மாலிக் இப்னு தீனார் என்பவருடைய தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக் குழு இங்கு வருகை தந்ததும் மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியது.

இதுதான் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்திற்காக முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த முதல் குழு. இவ்விரு நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் பிரபலமானதால் தலைமுறையினரிடையே காதுவழி செய்தியாகப் பரவியது. இப்படி கேட்டறிந்த செய்தியைத்தான் ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருப்பது; பள்ளி பாண பெருமாள் நபிகள் நாயகத்தின் காலத்தின் மக்கா சென்றதற்கும், அரேபியா சென்று இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொண்டதற்கும் ஆதாரங்கள் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பிறகு ஆராய்வோம்.

“ஏக இறை நம்பிக்கை, உணர்ச்சிமீதெழுந்த இறை பக்தி, ஆத்ம தியாகம் ஆத்மீக குருக்களிடம் பக்தி காட்டுவதின் தேவை ஆகியவற்றில் உறுதியாக நிற்பதும், ஜாதி வேற்றுமையில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுதான் இப்படிப்பட்ட ஹிந்துமத எழுச்சியின் சில அறிகுறிகள் ஒருவகையில் அல்லது வேறு வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கு எனக் கருதப்படுகிறது.” (தென் இந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பக்.484) என்று திரு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். மேலும் அவர் சொல்வதை கவனிக்கவும்.

“இஸ்லாத்தோடு தென் இந்தியாவுக்குள்ள ஈடுபாடு வடஇந்தியாவை விட பழமையானது”

திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ஹிந்துமத எழுச்சி என்று குறிப்பிடுவது:

கேரளாவிலுள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருடைய காலத்தையாகும். அவரது காலம் கி.பி.788-820. கி.பி.825 க்குப் பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்றால் கி.பி.820 ல் மறைந்த சங்கராச்சாரியாரை இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு கவர்ந்திருக்க முடியும். இதிலிருந்து கி.பி.820 க்கு முன்னரே இஸ்லாம், கேரளப் பகுதிகளில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி என்பது தெளிவாகிறது மட்டுமல்ல, மிக மந்த நிலையில் துவக்க காலத்தில் இங்கு பரவியது என்று குறிப்பிட்டோம்.

எழுத்தறிவோ, செய்தி பரப்பும் சாதனங்களோ எதுவும் இல்லாத காலத்தில், தோன்றிய உடனே எங்கும் பரவியிருக்க முடியாது. மெதுவாக பரவி, அதன் கொள்கைகளால் மக்கள் கவரப்பட்டு வளர்ந்து வரும் வேறு மதங்களின் வளர்ச்சிக்கு இது ஒது ‘தடை’ எனப்படுவதற்கு குறைந்தது ஓர் நூற்றாண்டு காலமாவது தேவை. பிற மத தலைவர்கள் வளர்ந்து வரும் ஒரு மதத்தின் கொள்கைகளை சரிவர ஆராய்ந்து, அக்கொள்கைகள் நல்லதெனப்பட்டு அதை தம் மத கோட்பாடுகளாக மாற்றி தம் மக்களிடம் எட்ட செய்ய ஒரு நெடிய காலமே தேவைப்படும். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் இங்கு தோன்றிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு. வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71வரையான பக்கங்களின் தமிழாக்கம்.

தொடரும்..

நவம்பர் 25 – டிசம்பர் 1, 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *