Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு

விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங்கொள்வது. மார்க்கக் கடமைகளைப் பேணுவது. மக்களை அதன் பால் அழைப்பது

10- இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் : அப்துல் கைஸூடைய தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்த போது, வந்திருக்கும் இம்மக்கள் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ரபீஆ வம்சத்தினர் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் வருக! வெட்கப்படாமல், கவலை கொள்ளாமல் வருகை தாருங்கள்! என்று வரவேற்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யுத்தம் தடை செய்யப்பட்ட புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) தங்களை சந்திக்க முடியாது. காரணம் எங்களுக்கும் தங்களுக்குமிடையில் இறை நிராகரிப்பாளர்களான முளர் வம்சத்தினர் வாழ்கிறார்கள். எனவே திட்டவட்டமாக சில கட்டளை எங்களுக்கு கூறுங்கள். அவற்றை நாங்கள் இங்கே வராதவர்களுக்கும் அறிவிப்போம். அதன் மூலம் நாங்களும் சுவர்க்கம் செல்வோம் என்றனர். மேலும் நபி (ஸல்) அவர்களிடம் சிலவகை பானங்களைப் பற்றியும் கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் நான்கு காரியங்களை அவர்களிடம் ஏவினார்கள். நான்கு காரியங்களை தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்புவதென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள் என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக சாட்சி கூறுவது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஜகாத்தை வழங்குவது, ரமலான் மாதம் நோன்பு நோற்பது, போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஜந்தில் ஒரு பங்கை நீங்கள் வழங்கி விடுவது என்றார்கள். மேலும் (மது வைத்திருந்த) மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்ச மரத்தின் அடிமரத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகிய நான்கையும் தடை செய்தார்கள். (பின்னர் இத்தடை அகற்றப்பட்டது) இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு (இங்கே வராதவர்களுக்கு) அறிவித்து விடுங்கள் என்றும் கூறினார்கள்.

(நூல்கள் : புகாரி- 53, முஸ்லிம் 24)

11- நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்த போது அவரிடம், நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் சொல்கிறீர். எனவே அவர்களை முதன் முதலில் அல்லாஹ்வை வணங்குவதன்பால் அழைப்பீராக! அவர்கள் -வணக்கத்திற்குரியவன்- அல்லாஹ்தான் என்பதை அறிந்து கொண்டால், இரவு பகல் இணைந்த ஒரு நாளில் ஜந்து வேளை தொழுவதை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால் அவர்களுடைய செல்வங்களிலிருந்து வசூலித்து அவர்களிடையே உள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய ஜகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஜகாத் பெறுவீராக! மக்களின் பொருட்களில் உயர்தரமானவற்றை வசூலிக்காதீர்! என்று அனுப்பினார்கள்.

(அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி), நூல்கள் : புகாரி-1458, முஸ்லிம் 28)

12- நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி)அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுனராக) அனுப்பி வைத்தபோது, அநீதியிழைக்கப்பட்டவரின் (உமக்கு எதிராக) பிரார்த்திப்பதை அஞ்சிக் கொள்வீராக! ஏனெனில் அப்பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி-2448, முஸ்லிம் 27)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *