Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஏற்றுக் கொள்ளும் வரை..

ஏற்றுக் கொள்ளும் வரை..

லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதை ஏற்றுக் கொள்ளும் வரை மக்களுடன் போரிடுதல்.

13- நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அபூபக்ர் (ரலி) ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஜகாத்தை கடமையை மறுத்ததன் மூலம்) இறை நிராகரிப்பாளர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர்(ரலி) தயாரானார்கள்) அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும்வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே அதனைக் கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார். அவர்களில் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர (அவருக்கு அதற்குரிய தண்டனை நிறைவேற்றப்படும்). அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஜகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்று பதிலளித்தார்கள். இதனைச் செவியுற்ற உமர் (ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்! அவர் கூறியதே சரியானது! என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி-1400, முஸ்லிம் 29)

14- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார். அவர்களில் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர (அவருக்கு அதற்குரிய தண்டனை நிறைவேற்றப்படும்) அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது.

(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல்கள் : புகாரி-2946, முஸ்லிம் 30)

15- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக சாட்சி கூறி, தொழுகையையும் நிலை நாட்டி, ஜகாத்தையும் வழங்கும் வரை மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே அவர்கள் இதனைச் செய்துவிடுவார்களானால், அவர்களுடைய உயிர்களையும் உடமைகளையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டனர். அவர்களில் இஸ்லாத்தில் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவர்களைத் தவிர (அவர்களுக்கு அதற்குரிய தண்டனை நிறைவேற்றப்படும்) அவர்களுடைய விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது.

(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரீ 25, முஸ்லிம் 25)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *