Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!

இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!

120- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன் (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்து கொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும் அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, பொறுத்துக் கொள்ளவோ, முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும் அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடி) பார்க்கமாட்டீர்களா? என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம் (உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர். ஆகவே மனிதர்களில் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்,உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்கு சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்கு சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசுங்கள் நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும்;(துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா? என்றுகேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்)கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (நான் நெருங்கக்கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாம் என்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.! என்று கூறிவிட்டு நீங்கள் வேறு எவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு பிறகும் அவன் இதைப் போல் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விஷேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராக பிரயோகித்து விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! என்று கூறிவிட்டு, நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள் என்பார்கள். (அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று) இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபங் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒரு போதும் கோபங்கொள்ளப் போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். ஆம் மூன்றையும் அறிவிப்பாளர் அபூஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.!என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.!(ஆகவே) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்)மூசாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் சென்று மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உறையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப் படுத்தியுள்ளான். (ஆகவே) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் இன்று என் இறைவன் (என் மீது கடுங்) கோபங்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபங்கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபங்கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரை கொலை செய்து விட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள். அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் சென்று ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்த போதே மனிதர்களிடம் பேசினீர்கள்.(ஆகவே) எங்களுக்காக உங்கள்இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள் என் இறைவன் இன்று (என் மீது கடுங்) கோபங்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபங்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒரு போதும் கோபங்கொள்ளப் போவதுமில்லை. (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.! என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது.! (ஆகவே) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

அப்போது மக்கள் என்னிடம் வந்து முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா? என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ்மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி இறைவா! என் சமுதாயம், இறைவா! என் சமுதாயம் என்பேன். அதற்கு முஹம்மதே! சொர்க்கத்தின் வாசல்களில் வலப்பக்க வாசல்வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள். அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம் என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் மக்காவிற்கும் (யமனிலுள்ள) ஹிம்யர் எனும் ஊருக்கும் இடையிலுள்ள அல்லது மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஷ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள தூரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி- 4712: அபூஹூரைரா(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *