Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » சூரிய கிரகணத் தொழுகை

சூரிய கிரகணத் தொழுகை

520. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள்.

புஹாரி: 1044 ஆயிஷா (ரலி)


521. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் -முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்- ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமித ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுக்களும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரகணம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் ‘இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ வாழ்விற்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும்போது விரைந்து தொழுங்கள்’ என்று கூறினார்கள்.

புஹாரி :1046 ஆயிஷா (ரலி)

522. ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் ‘சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களை விட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்! எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன். நான் முன்னே செல்வது போல் நீங்கள் என்னைக் கண்டபோது சொர்க்கத்தின் ஒரு திராட்சைப் பழக்கொத்தைப் பிடிக்க முயன்றேன். நான் பின்னே செல்வது போல் என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நரகத்தில் அம்ர் இப்னு லுஹை என்பவனையும் கண்டேன். அவன்தான் ஸாயிபத் எனும் (கால்நடைகளை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 1212 ஆயிஷா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *