Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கவாரிஜ்கள் பண்புகள்.

கவாரிஜ்கள் பண்புகள்.

638. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஜிஇர்ரானா’வில் வைத்து போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் அவர்களிடம், ‘நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(இறைத் தூதராகிய) நானே நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் (என்னைப் பின்பற்ற வேண்டிய) நீ வழிதவறிப் போய் விடுவாய்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3138 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

639. அலீ (ரலி) (யமனிலிருந்து) நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன் (ரலி) அல்முஜாஷியீ (ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ (ரலி), பனு நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ (ரலி) மற்றும் பனு கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும் கோபமடைந்து, ‘நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மை விட்டுவிடுகிறாரே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அப்போது வேறொரு மனிதர் இப்படி (குறை சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் இப்னு வலீத் (ரலி) தாம் என்று நினைக்கிறேன் அவரை நபி (ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து .. அல்லது இவரின் பின்னே – ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகையவர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவணக்கம் புரிபவர்களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3344 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

640. அலீ (ரலி) கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: உயைனா இப்னு பத்ர் (ரலி), அக்ரஉ இப்னு ஹாபிஸ் (ரலி), ஸைத் அல் கைல் (ரலி) நான்காவது நபர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் இப்னு துஃபைல் (ரலி) அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்” என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்த வண்ணமுள்ளன” என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப் பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடு தான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?’ என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் இப்னு வலீத் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவரின் தலையைக் கொய்து விடட்டுமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்” என்று கூறினார்கள். அதற்கு காலித் (ரலி), ‘எத்தனையோ தொழுகையாளிகள் தம் இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்” என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை” என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். மேலும், கூறினார்கள்; ‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நிறைய ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆது’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்து விடுவேன்.

புஹாரி : 4351 அபூஜயீத் அல்குத்ரி (ரலி).

641. உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு களைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டு சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள்.(அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன் முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 5058 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி)

642. நாங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது ‘பனூ தமீம்’ குலத்தைச் சேர்ந்த ‘துல் குவைஸிரா’ என்னும் மனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்” என்று பதிலளித்தார்கள். உடனே, உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவரை விட்டு விடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்… அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்… அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்” என்று கூறினார்கள். நான் இந்த நபிமொழியை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி) (நபி – ஸல் – அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி (ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.

புஹாரி :3610 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *