Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நோன்பின் ஸஹர் நேரம் பற்றி….

நோன்பின் ஸஹர் நேரம் பற்றி….

660. ‘கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை’ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி: 1916 அதிபின் ஹாத்திம் (ரலி).

661. ”கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!” என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. ‘இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்” என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!”

புஹாரி; : 1917 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி)

662. ”பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.” இதை அறிவிக்கும் இப்னு உமர் (ரலி) ‘அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ் நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்’ என்று கூறினார்கள்.

புஹாரி: 617 இப்னு உமர் (ரலி).

663. பிலால் (ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!” என்று குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 1918 இப்னு உமர் (ரலி).

664. ”நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும்தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள்.

புஹாரி : 621 இப்னு மஸ்ஊத் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *