Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » லைத்துல் கத்ர் சிறப்பு

லைத்துல் கத்ர் சிறப்பு

723. நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர் (இரவு) காட்டப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள்.

புஹாரி: 2015 இப்னு உமர் (ரலி).

724. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்னீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.

புஹாரி :2016 அபூஸலாமா (ரலி).

725. நபி (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், ‘நான் இந்தப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் அந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!’ எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் எண் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி (ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன்.

புஹாரி : 2018 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

726. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; ‘ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!” எனக் கூறுவார்கள்.

புஹாரி :2020 ஆயிஷா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *