Featured Posts

19] யூதர்களுடன் ஓப்பந்தம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 19

மதினா என்கிற யத்ரிப் நகரில் அரேபியர்களும், அவர்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிக அளவு யூதர்களும் வசித்துவந்தார்கள். இதில், அரேபியர்கள் என்பவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள். அதிகம் படித்தவர்களோ, பணக்காரர்களோ அல்லர். மெக்கா நகரின் குறைஷிகளைப் போலல்லாமல், முகம்மதுவை ஓர் இறைத்தூதராக ஏற்பதில் அவர்களுக்குப் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் இல்லை. காரணம், முகம்மதுவை அவர்கள் தங்களில் ஒருவராகப் பார்க்க முடிந்ததுதான். அவர்களைப் போலவே முகம்மதுவும் படிப்பறிவில்லாதவர். அவர்களைப் போலவே எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொள்பவர். அவர்களைப் போலவே கனிவும் பரிவும் கொண்டவர். அவர்களைப் போலவே பாசாங்கற்றவர். ஆனால் அவர் உதிர்க்கிற ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்பட்ட அழுத்தமும் தீர்மானமும் தீர்க்கதரிசனமும் மதினாவாசிகளுக்குப் பரவசமூட்டுபவையாக இருந்தன. பாமரர்தான்; ஆனால் இம்முறை இறைவன் அத்தகைய ஒருவரைத்தான் தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் விதத்தில் இருந்தன, அவருடைய பேச்சும் செயல்பாடுகளும்.நூறு நூறு ஆண்டுகளாக வழிகாட்ட ஒரு ஜீவனில்லாமல், காட்டுச் செடிகள் போல் பிறந்து, வாழ்ந்து மடிந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் சேர்ப்பதற்காகவே இறைவன் முகம்மதைப் படைத்து அனுப்பிவைத்தான் என்று நம்பினார்கள் மதினாவாசிகள். இதனாலேயே, நம்ப முடியாத அளவுக்கு முகம்மதின் ஆதரவாளர்களும் இஸ்லாத்தில் இணைவோரும் அங்கே பெருகத் தொடங்கினார்கள். உருவமற்ற ஒரே பரம்பொருளின் பெருமைகளைத்தான் முகம்மது பேசினார். முஸ்லிம்களாக மாறிய அரேபியர்கள் தமது இனக்குழுப் பகைகளை முன்னிட்டுத் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகாமல், ஒற்றுமையாக இருந்து பொது எதிரிகளான உருவ வழிபாட்டாளர்களைப் பண்படுத்த முயற்சி செய்யும்படி முகம்மது தொடர்ந்து வலியுறுத்தி வரத் தொடங்கினார்.இவ்விஷயத்தில் அன்றைய மதினா நகரத்து யூதர்களையும் அனுசரித்து நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்தே இருந்தார். இதற்கான காரணங்கள் மிக நுட்பமானவை. யூதர்களும் உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்குபவர்கள் என்பது முதல் காரணம். தவிரவும் அவர்களில் படித்தவர்கள் அதிகம். அமைப்பு ரீதியில் வலுவாகக் காலூன்றிய அவர்களது மதகுருமார்களின் சபைகள், முடிவெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஓர் ஒழுங்கையும் நேர்த்தியையும் கடைப்பிடித்துவந்தன. உருவ வழிபாட்டாளர்களுக்கு எதிரான சமயமாக இஸ்லாத்தை முன்னிறுத்துகையில், யூதர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்றே முகம்மது அப்போது கருதினார். இரண்டும் சகோதர மதங்கள் என்பதை முன்வைத்து, இரு மதத்தினரும் சகோதரத்துவத்துடன் பழகவேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துச் சொன்னார். அப்படிச் செய்ய இயலுமானால், பொது எதிரியைச் சந்திக்க வலிமை கிட்டும். ஒரு யுத்தம் என்று வருமானால் ராணுவ பலம் அதிகரிக்கும். அரேபிய முஸ்லிம்களின் உடல் வலுவும் யூதர்களின் புத்திக்கூர்மையும் இணையுமானால் வெற்றிக்குப் பிரச்னை இராது. வேறு வேறு நம்பிக்கைகள், வேறு வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களே என்றாலும் உருவமற்ற ஒரே இறைத் தத்துவத்தின் அடிப்படையில் இரு மதங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது பெரிய காரியமல்ல என்றே முகம்மது கருதினார்.யூதர்களால் முதலில் முகம்மதை முழுமையாக ஏற்க முடியவில்லை. ஓர் இறைத்தூதர், காட்டான்களாகிய அரேபியர்களிடையே உதித்திருக்கிறார் என்பதை அவர்களது மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. அதே சமயம், உருவமற்ற ஒரே இறைவன் என்கிற கருத்தாக்கத்தை முகம்மது தொடர்ந்து வலியுறுத்தி வந்தது, அவரை நம்பித்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில், அரேபியர்களிடையே வேறு யாருக்கும் அப்படிச் சிந்திக்கக்கூடத் தோன்றாது.மதக் காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், சமூகப் பாதுகாப்பு, அரசியல்ரீதியிலான பலம் போன்ற காரணங்களுக்காவது முஸ்லிம்களுடன் இணைந்து செயல்படலாம் என்று யூதகுருமார்களின் சபை அப்போது தீர்மானித்தது. ஏனெனில், முகம்மதுவைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் நம்பமுடியாத அளவுக்கு அப்போது பெருகிக்கொண்டிருந்தது. ஜெருசலேத்திலிருந்து புறப்பட்ட நாளாக, அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களுக்கு அத்தகைய பாதுகாப்பு அவசியம் என்று பட்டது. அவர்களிடம் ஓர் ஒழுங்கான மத நிர்வாக அமைப்பு இருந்ததே தவிர, ஒழுங்கான ராணுவம் கிடையாது. ஒரு தகராறு என்று வருமானால் எதிர்த்து நிற்க ஆள்பலம் போதாது.ஆனால் முகம்மதுவின் ஆராதகர்கள் உடல்வலுவும் மனபலமும் ஒருங்கே பெற்றவர்களாக இருந்தார்கள். மண்டியிட்டுத் தொழத்தெரிந்தவர்களாகவும் வாளேந்தி யுத்தம் புரியக்கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். முகம்மது ஒரு சொல் சொன்னால் உயிரைத்தரவும் சித்தமாக இருந்தார்கள். அத்தகையவர்களுடன் நல்லுறவு கொள்வது யூதகுலம் யுத்தங்களில் மேலும் மடியாமல் இருக்க உதவியாக இருக்கும் என்று கணக்குப் போட்டது யூத மதகுருமார்களின் சபை.இந்தக் காரணங்களை மிக கவனமாகப் பார்க்கவேண்டும். முகம்மது, யூதர்களின் தோழமை முக்கியம் என்று கருதியதற்கு மதக் காரணங்கள்தான் உண்டு. யூதர்கள், இஸ்லாமியர்களின் தோழமையை விரும்பியமைக்கு ராணுவக் காரணங்களே பிரதானம். முகம்மதின் பிரச்னை, அவநம்பிக்கையாளர்கள் சம்பந்தப்பட்டது. யூதர்களின் பிரச்னை, சொந்த வாழ்க்கை தொடர்பானது. இரண்டும் வேறு வேறு எல்லைகளில் நிற்கிற பிரச்னைகள். ஆயினும் ஒரு நேர்கோட்டில் வந்து இணையவேண்டிய காலக்கட்டாயம் அப்போது ஏற்பட்டது.ஓர் உடன்பாடு செய்துகொண்டார்கள். இரு தரப்பினரும் பரஸ்பரம் வேண்டிய உதவிகள் செய்துகொள்ளவேண்டியது. யாருக்கு எந்தப் பிரச்னை என்றாலும் உடனே போய் உதவவேண்டியது முக்கியம். மெக்கா நகரின் குறைஷிகளால் மதினா முஸ்லிம்களுக்குப் பிரச்னை வருமானால் அங்குள்ள யூதர்கள் யுத்தத்தில் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். அதேபோல், மதினாவாழ் யூதர்களுக்கு யாரால் எந்தப் பிரச்னை வந்தாலும் முகம்மதின் படை உதவப் போகும்.நம்புவது கொஞ்சம் சிரமம்தான். மதினாவுக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் முகம்மது அங்கே ஒரு சக்கரவர்த்திபோலக் கருதப்பட்டார். அவரது சொல்லுக்கு மாறாக ஓர் எதிர்க்குரல் அங்கே எழுந்துவிட முடியாது. மதினாவில் இருந்த அரேபியர்கள் சமூகம் முழுவதையும் தமது அன்பாலும் கனிவுமிக்க பேச்சாலும் கவர்ந்திழுத்த முகம்மது, குர் ஆனின் வசனங்களை ஓதி ஓதிக் காட்டி, அவர்களின் மனங்களைப் பண்பட வைத்தார். எந்த ஒரு மனிதப்பிறவியும் குறிப்பாக அரபுக் கவிஞர்கள் இத்தனை அர்த்தம் பொதிந்த, இனிய வரிகளைக் கற்பனையில் தயாரித்துவிடமுடியாது என்று எண்ணிய அரேபிய ஆதிவாசிகள், நிச்சயமாக முகம்மது ஓர் இறைத்தூதர்தான் என்று பார்த்த மாத்திரத்தில் நம்பி, அடிபணிந்தார்கள். முகம்மதே தங்கள் மன்னர் என்றும் கருத ஆரம்பித்தார்கள்.சந்தேகமில்லாமல் அவர் ஒரு மன்னர்தான். ஆனால் நம்ப முடியாத அளவுக்கு எளிமையைக் கடைப்பிடித்த மன்னர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஒருகாலத்தில் பிணங்களை அடக்கம் செய்துகொண்டிருந்த ஓரிடத்தை விலைக்கு வாங்கி, அங்கே ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தார் முகம்மது. பக்கத்திலேயே ஈச்ச ஓலைகள் வேய்ந்ததொரு பள்ளிவாசலையும் தாமே கட்டிக்கொண்டார். முஸ்லிம்கள் ஜெருசலேத்தை நோக்கித் தொழவேண்டும் என்பதுதான் ஆரம்பக் காலத்தில் முகம்மது வாயிலாக வெளிவந்த இறைக் கட்டளையாக இருந்தது. (பின்னால்தான் மெக்கா இருக்கும் திசை நோக்கித் தொழுகை நடத்தும்படி கட்டளை மாற்றப்பட்டது.)எளிமையான, பாசாங்கில்லாத வாழ்க்கை, தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் நேர்மையைக் கடைப்பிடிக்கச் சொன்னது, சகோதரத்துவ போதனைகள் போன்றவை, கேள்விகளற்று முகம்மதுவை ஏற்கும்படிச் செய்தன. யூதர்களுக்குக் கூட, முகம்மது தம் ஆதரவாளர்களை ஜெருசலேம் நோக்கித் தொழச்சொல்லியிருந்தது மிகுந்த சந்தோஷமளித்தது. யூத மதமும் இஸ்லாமும் பல்வேறு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதுதானோ என்றும் அவர்கள் நம்ப ஆரம்பித்தார்கள். முஸ்லிம்கள் யூதப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்றுகூட அப்போது முகம்மது கூறியிருந்ததாகப் பல யூத சரித்திர ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். திருமண உறவுகள் அரசியல் உறவை வலுப்படுத்தும் என்று இரு தரப்பினருமே கருதியிருக்கலாம்.அதே சமயம், இந்தச் சரித்திர ஆசிரியர்கள் சில கற்பனையான யூகங்களையும் செய்திகள் போலவே வெளியிட்டுவிடுவதையும் சொல்லவேண்டும். உதாரணமாக, மார்ட்டின் கில்பர்ட் என்கிற புகழ்பெற்ற யூத சரித்திர ஆய்வாளர், “யூதர்கள் தன்னை அவர்களது இறுதி இறைத்தூதர் என்று முழுமையாக ஏற்றுக்கொண்டுவிடுகிற பட்சத்தில், முகம்மது தாமே ஒரு யூதராக மாறிவிடவும் தயாராக இருந்தார்” என்று சொல்கிறார். இதற்கு யூதர்கள் சம்மதிக்காததால்தான் இரு தரப்பாரிடையே உறவு முறியவேண்டியதானது என்று எழுதுகிறார்.குர் ஆனிலோ, முகம்மதின் வாழ்வையும் போதனைகளையும் சொல்லும் ஹதீஸ்களிலோ, முகம்மதின் உடனிருந்தவர்கள் வைத்துவிட்டுப் போன நினைவுக்குறிப்புகள் எது ஒன்றிலோ அல்லது மாற்று மதத்தவர் யாருடைய குறிப்புகளிலுமோகூட இம்மாதிரியானதொரு அதிர்ச்சிதரத்தக்க விஷயம் காணப்படவில்லை. இரண்டு வருடகாலத்துக்கு மேலாக மிகுந்த நல்லுறவுடன் வளர்ந்துவந்த முஸ்லிம் – யூத சகோதரத்துவம் மதினாவில் இற்றுப்போகத் தொடங்கியதற்கு உண்மையான காரணங்கள் வேறு. முதலாவது, கொடுத்த வாக்குப்படி அவர்கள் முஸ்லிம்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் செய்வதில் தயக்கம் காட்டினார்கள். முஸ்லிம்கள் மட்டும் தமக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். இரண்டாவது காரணம், முஸ்லிம்களின் ஒத்துழைப்பு வேண்டும்; ஆனால் முகம்மதை முழு மனத்துடன் இறைத்தூதராக ஒப்புக்கொள்ள இயலாது என்று அவர்கள் விடாப்பிடியாக நின்றது. இதை எந்த முஸ்லிமும் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார். “நீங்கள் இறைவனையும் எங்களையும் பழித்தால்கூட, சகித்துக்கொள்வோம். முகம்மது ஓர் இறைத்தூதர் என்று ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் எவ்வித உறவும் நமக்குள் இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்கள்.மூன்றாவதும் மிக முக்கியமானதுமான காரணம், இயேசு செய்ததைப் போலவே முகம்மதும் யூதர்கள் தம் மதத்தின் ஆதி நம்பிக்கைகளுக்குப் புறம்பான புதிய மதப்பழக்க வழக்கங்களை மேற்கொண்டதையும் குருமார்களுக்கான ஆராதனைகள் பெருகுவதையும் விமர்சனம் செய்யத் தொடங்கினார். ஒரே இறைவன். அவனைத்தவிர வழிபாட்டுக்குரியவர்கள் வேறு யாருமில்லை என்பதுதான் ஆபிரஹாம் என்கிற இப்ராஹிமின் வழித்தோன்றல்கள் மேற்கொள்ளவேண்டிய உறுதி. இதற்கு மாறாக யூதர்கள் நடந்துகொள்ளத் தொடங்கியபோது, அவர்களது நடத்தையை முகம்மது தயங்காமல் விமர்சித்தது, யூதர்களுக்குப் பிடிக்கவில்லை.இந்தக் காரணங்களால்தான் யூதர்கள் முஸ்லிம்களிடையே முதல் முதலில் பிளவு உண்டானது. கி.பி. 624-ம் வருடம் முகம்மது தமது மக்களிடம் இனி மெக்காவை நோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அதுநாள்வரை ஜெருசலேம் நோக்கித் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் அப்போதிலிருந்து மெக்காவை நோக்கித் தொழ ஆரம்பித்தார்கள்.இரண்டும் வேறு வேறு திசைகள். எதிரெதிரேதான் இருக்க முடியும்.நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 ஜனவரி, 2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *