Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » முஜ்தலிஃபாவில் மக்ரிப் இஷா தொழுதல்.

முஜ்தலிஃபாவில் மக்ரிப் இஷா தொழுதல்.

807. ‘(ஹஜ்ஜில்) நபி (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தை விட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?’ என்று நான் கேட்டதற்கு, ‘தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்’ என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும் இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் செய்தார்கள். மக்ரிப் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், நபி (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தம் ஒட்டகங்களைத் தங்குமிடங்களில் படுக்க வைத்தார்கள். பின்னர் இஷாத் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்தினார்கள். (மக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளுக்கிடையில் (வேறு எதுவும்) அவர்கள் தொழவில்லை”

புஹாரி :139 உஸமா இப்னு ஜைத் (ரலி) .

808. நான் உஸாமா (ரலி)வுடன் அமர்ந்திருக்கும்போது, உஸாமாவிடம், ‘கடைசி ஹஜ்ஜில் அரஃபாவிலிருந்து திரும்பிய நபி (ஸல்) அவர்களின் நடை எவ்வாறிருந்தது?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கவர், ‘நபி (ஸல்) அவர்கள் சாதாரணமாக நடப்பார்கள். (மக்கள் நெருக்கடியில்லாத) விசாலமான இடம் வந்ததும் விரைந்து நடப்பார்கள்’ எனக் கூறினார்.

புஹாரி : 1666 உர்வா (ரலி).

809. இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள்.

புஹாரி: 1674 அபூ அய்யுப் அல் அன்ஸாரி (ரலி).

810. நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பிரயாணம் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.

புஹாரி :1091 இப்னு உமர் (ரலி) .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *