Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கன்னியை மணமுடித்தலின் சிறப்பு.

கன்னியை மணமுடித்தலின் சிறப்பு.

929. நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாள்களுக்குப் பின்) என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘யாரை மணமுடித்தாய்?’ என்று கேட்டார்கள். நான் ‘கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்” என்று பதிலளித்தேன். அதற்கவர்கள், ‘உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?’ என்று கேட்டார்கள். என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கேட்டார்கள்.

புஹாரி :5080 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

930. என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ‘ஏழு பெண் குழந்தைகளை’ அல்லது ‘ஒன்பது பெண் குழந்தைகளை’விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்” என்று சொன்னேன். அவர்கள், ‘கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!” என்று கூறினார்கள். அதற்கு நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி), பல பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு ‘சுபிட்சத்தை அளிப்பானாக’ அல்லது ‘நன்மையைப் பொழிவானாக’ என்று கூறினார்கள்.

புஹாரி :5367 ஜாபிர் பின்அப்தில்லாஹ் (ரலி).

931. நான் ஒரு போரில் (தபூக்கில்) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக் கூடிய ஒட்டகத்தின் மீது இருந்தவாறு நான் அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) ‘உமக்கு என்ன அவசரம்?’ என்று கேட்டார்கள். ‘நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்தாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப் போனபோது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம் வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் இப்னு பஷீர் (ரஹ்) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்றார்கள். அதாவது ‘குழந்தையைத் தேடிக்கொள்” என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார்.

புஹாரி :5245 ஜாபர் பின் அப்தில்லாஹ் (ரலி).

932. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன்; அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. ‘ஜாபிரா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?’ என்று கேட்டார்கள். ‘என் ஒட்டகம் களைத்துப் பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது அதனால் நான் பின்தங்கி விட்டேன்!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு ‘ஏறுவீராக!’ என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களை விட என்னுடைய ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள். ‘நீர் மணமுடித்து விட்டீரா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘கன்னியையா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!’ என்று கூறினார்கள். நான், ‘எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!’ நிதானத்துடன் நடந்து கொள்வீராக!’ என்று கூறிவிட்டு பின்னர். ‘உம்முடைய ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?’ என்றார்கள். நான் ‘சரி (விற்று விடுகிறேன்!)’ என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கினார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். ‘இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘உம்முடைய ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!’ என்றார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!’ என்றார்கள். நான் (மனத்திற்குள்) ‘இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை’ என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘உம்முடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!’ எனக் கூறினார்கள்.

புஹாரி :2097 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *