Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » குழந்தை பிறப்பால் விதவையின் இத்தா முடிவுறுகிறது.

குழந்தை பிறப்பால் விதவையின் இத்தா முடிவுறுகிறது.

948. சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் (ரலி) பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஸஅத் (ரலி) இறந்துவிட்டார்கள். அப்போது ‘சுபைஆ’ கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்த நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான ‘அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக் (ரலி) சுபைஆ அவர்களிடம் வந்து, ‘திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனுடைய இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய ‘இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து நாள்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு) மணம் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள். சுபைஆ (ரலி) கூறினார்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் என்னுடைய உடையை உடுத்திக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். அதற்கு, ‘நீ பிரசவித்துவிட்டபோதே (மணந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்து கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.

புஹாரி :3991 சுபைஆ பின்த் அல்ஹாரித் (ரலி).

949. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், ‘தன் கணவன் இறந்து நாற்பது நாள்களுக்குப் பின் பிரசவித்த ஒரு பெண்(ணின் ‘இத்தா’ பிரசவத்தோடு முடிந்துவிடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்கிடுங்கள்” என்று கேட்டதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி), ‘இரண்டு தவணைகளில் பிந்தியது” என்று கூறினார்கள். உடனே நான் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,) ‘கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும்” (என்று குர்ஆன் 65:4 வது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன். அப்போது அபூஹுரைரா (ரலி), ‘நானும் என் சகோதரர் மகன் அபூ ஸலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) தம் பணியாளர் ‘குரைப்’ என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்முஸலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு ஸலமா (ரலி) (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவரின் கணவர் (ஸஅத் இப்னு கவ்லா (ரலி) இறந்துவிட்டார். அவர் இறந்து நாற்பது நாள்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தை பெற்றெடுத்தார். உடனே, அவரைப் பெண் பேசப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக் (ரலி) அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு ‘இத்தா’ பிரசவம் வரையில்தான்.)

புஹாரி :4909 உம்மு ஸலமா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *