Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பிறர் வியாபாரப் பேச்சில் திருமணப் பேச்சில் குறுக்கிடாதே.

பிறர் வியாபாரப் பேச்சில் திருமணப் பேச்சில் குறுக்கிடாதே.

969. ”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது!”என நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

புஹாரி : 2139 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) .

970. ”(சரக்குகளை ஏற்றிக் கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்காதீர்கள்! ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடாதீர்கள்! வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடவேண்டும் என்பதற்காகவே விலைகேட்காதீர்கள்! (ஆளமர்த்தி அவ்விதம் விலைகேட்கச் செய்வதும் கூடாது!) கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசிகள் விற்றுக் கொடுக்க வேண்டாம்!” ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியை கனக்கச் செய்யாதீர்கள்! இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கிப் பால் கறந்து, திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் அந்த ஆட்டை ஒரு ஸாவு பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம்! இவ்விரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்கு உண்டு!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2150 அபூ ஹுரைரா (ரலி) .

971. (சந்தைக்கு வருவதற்கு முன்பு மொத்த) வியாபாரிகளை வழியில் எதிர் கொண்டு சரக்குகளை வாங்குவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். உள்ளூர்வாசி கிராமவாசிக்காக வாங்கித் தருவதையும், ஒரு பெண் தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் செய்துவிடும்படி நிபந்தனையிடுவதையும், தன் சகோதரன் விலை பேசும் அதே பொருளை, தானும் விலை பேசுவதையும், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளுக்கு) அதிக விலை கேட்டு, (வேண்டுமென்றே) விலை ஏற்றி விடுவதையும், (ஆடு மாடுகளின்) மடியை கனக்கச் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

புஹாரி :2727 அபூஹூரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *