Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » விற்ற ஒட்டகத்தில் சவாரி செய்யலாமா?

விற்ற ஒட்டகத்தில் சவாரி செய்யலாமா?

1029. (ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்து விட்ட என்னுடைய ஒட்டகம் ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே, அது இதற்கு முன் இதுபோல் எப்போதும் நடந்ததில்லை என்னும் அளவிற்கு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘இதை எனக்கு ஓர் ஊக்கியாவுக்கு நீங்கள் விற்று விடுங்கள்” என்று கேட்டார்கள். அவ்வாறே, என் வீட்டாரிடம் போய்ச் சேரும்வரை அதில் நான் சவாரி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இட்டுவிட்டு அதை அவர்களுக்கு நான் விற்றுவிட்டேன். (அவர்களும் என் நிபந்தனையை ஒப்புக் கொண்டார்கள்.) நாங்கள் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்தபோது அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்கக்) கொண்டு சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் செல்ல, எனக்குப் பின்னாலேயே நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் வரவழைத்து), ‘உன் ஒட்டகத்தை நான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. உன்னுடைய அந்த ஒட்டகத்தை நீயே எடுத்துக் கொள். அது உன்னுடைய செல்வம்” என்று கூறினார்கள்.

புஹாரி :2718 ஜாபிர் (ரலி).

1030. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் புனிதப் போருக்குச் சென்றேன். நான், களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க்கொண்டிருந்த நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை (வழியில்) வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், ‘உன் ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நான், ‘அது களைப்படைந்துவிட்டது” என்று பதிலளித்தேன். அதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சற்றுப் பின்தங்கி அதை அதட்டி அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே அது தனக்கு முன் சென்று கொண்டிருந்த ஒட்டகங்களை முந்திக் கொண்டு செல்லத் தொடங்கியது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன் ஒட்டகத்தை இப்போது எப்படிக் காண்கிறாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘நல்ல முறையில் காண்கிறேன். அது தங்களின் பரக்கத்தைப் பெற்றது” என்று சொன்னேன். உடனே அவர்கள், ‘நீ அதை எனக்கு விற்று விடுகிறாயா?’ என்று கேட்டார்கள். நான் (பதில் சொல்ல) வெட்கப்பட்டேன். (ஏனெனில்,) எங்களிடம் அதைத் தவிர நீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆயினும் நான், ‘சரி (விற்று விடுகிறேன்)” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியாயின் அதை எனக்கு விற்று விடு” என்று கூற, நான் அதன் மீது சவாரி செய்து மதீனாவைச் சென்றடைய என்னை அனுமதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்று விட்டேன். நான் அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் புது மாப்பிள்ளை” என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். எனவே, நான் மற்ற மக்களை விட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்து விட்டேன். அப்போது என்னை என் தாய்மாமன் (ஜத்து இப்னு கைஸ்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை விற்றுவிட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் குறை கூறினார்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், ‘நீ கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணந்து கொண்டாயா?’ என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், ‘வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மணமுடித்துக் கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்துவிட்டார்கள். அல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறுவயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. எனவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்தேன்” என்று பதிலளித்தேன்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது காலையில் ஒட்டகத்துடன் அவர்கள் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தையும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

புஹாரி :2967 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1031. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது ஒட்டகத்தையோ மாட்டையோ அறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை இரண்டு ஊக்கியாக்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ஸிரார்’ என்னுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறுக்கப்பட்டது. அதை அனைவரும் உண்டார்கள். மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (தொழுது முடித்த) பிறகு, ஒட்டகத்தின் விலையை எனக்கு நிறுத்துத் தந்தார்கள்.

புஹாரி :3089 ஜாபிர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *