Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்

மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்

1053. இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்” என்றார்கள். பின்னர் நான் ‘பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம்தான்; ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டு” என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! (என்னுடைய தோழர்களெல்லாம் மதீனாவுக்குச் செல்வார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின் தங்கியவனாக ஆகிவிடுவேனே!’ எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உம்முடைய அந்தஸ்தும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்’ எனக் கூறிவிட்டு, ‘உம்மை வைத்துச் சில கூட்டத்தினர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்” என்று கூறிவிட்டு, ‘யாஅல்லாஹ்! என்னுடைய தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே.” எனப் பிரார்த்தித்தார்கள். நோயாளியிருந்த ஸஅத் இப்னு கவ்லா (ரலி) மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக ‘பாவம் ஸஃது இப்னு கவ்லா (அவர் நினைத்து நடக்கவில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.

புஹாரி :1295 ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி).
1054. மக்கள் (தம் மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்” என்று கூறினார்கள்.
புஹாரி :2743 இப்னு அப்பாஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *