Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » உடன்படிக்கையை மீறுவோர் மீது….

உடன்படிக்கையை மீறுவோர் மீது….

1155. (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். ஸஅத் (ரலி) அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று (மக்களிடம்) கூறினார்கள். ஸஅத் (ரலி) வந்து அல்லாஹ்வின் தூதருக்கு அருகே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். ஸஅத் (ரலி), ‘அப்படியென்றால் நான் அவர்களிடையேயுள்ள போரிடும் வலிமையுள்ளவர்களைக் கொன்று விட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கிறேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்களின் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி :3043 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1156. அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத் (ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு ‘எங்கே? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது ‘பனூ குறைழா’ குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தீர்ப்பை ஸஅத் இப்னு முஆத் (ரலி), ‘பனூ குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்படவேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்” என்று கூறினார்கள்.

புஹாரி: 4122 ஆயிஷா (ரலி).

1157. (காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தபோது) ஸஅத் (ரலி), ‘இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் என்னுடைய காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்து விடு” என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரின் நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களின் கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த ‘பனூ ஃகிபார்’ குலத்தாருக்கு ஸஅத் அவர்களின் கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள், ‘கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழிய ‘ஸஅத்’ (ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே ஸஅத் (ரலி) இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக!.

புஹாரி 4122 ஆயிஷா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *