Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஹூதைபிய்யா உடன்படிக்கை பற்றி….

ஹூதைபிய்யா உடன்படிக்கை பற்றி….

1167. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப் (ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்’ என்று எழுதாதீர்கள்” (என்று சொல்லிவிட்டு) முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), ‘நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்” என்று கூறினர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், ‘அதை அழித்து விடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி), ‘நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை” என்று கூறிவிட்டார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அதை அழித்தார்கள். நானும் என் தோழர்களுடன் (மக்கா நகரில்) மூன்று நாள்கள் தங்குவோம். அதில் நாங்கள், ‘ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்’ உடன் தான் நுழைவோம் என்றும் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மக்கள், ‘ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்’ என்றால் என்ன?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், ‘உள்ளிருக்கும் ஆயுதங்களுடன் கூடிய உறை” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :2698 பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1168. நாங்கள் ஸிஃப்பீன் (போரில்) இருந்தோம். அப்போது ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) எழுந்து நின்று சொன்னார்கள்: மக்களே! (யாரையும் போரில் கலந்து கொள்ளாததற்காகக் குற்றம் சாட்டாதீர்கள்.) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாங்கள் ஹுதைபிய்யா உடன் படிக்கையின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போரிடுதல் பொறுத்தமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர் அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார்கள். உமர் அவர்கள், ‘போரில் கொலையுண்டு விடும்போது நம்முடைய வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களின் வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள். இல்லையா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி), ‘அப்படியிருக்க, நாம் ஏன் நம்முடைய மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பி விடுவதா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் அவர்கள், ‘அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்” என்று கூறினார்கள். அப்போது ‘அல் ஃபத்ஹ்’ (‘உமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்து விட்டோம்’ என்று தொடங்கும்) அத்தியாயம் 48 அருளப்பட்டது. அதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமருக்கு இறுதிவரை ஓதிக் காட்டினார்கள். அப்போது உமர் அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! வெற்றியா அது?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம் (வெற்றி தான்)” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3182 அபூவாயில் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *