Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்.

நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்.

நபிமார்கள் சிறப்புகள்
1468. ‘அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் விரல்களின் கீழேயிருந்தது அங்கிருந்த கடைசி நபர் உளூச் செய்து முடிக்கும் வரை தண்ணீர் சுரந்து கொண்டிருந்ததை பார்த்தேன்” என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
புஹாரி :169 அனஸ்(ரலி).

1469. நாங்கள் தபூக் யுத்தத்தின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்று கொண்டிருந்தோம். வாதில்குரா எனும் இடத்தை அடைந்தபோது ஒரு பெண் தன் தோட்டத்தில்இருந்ததைக் கண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழாகளை நோக்கி (இத்தோட்டத்தில்) எவ்வளவு பழங்கள் தேறும்? கணித்துக் கூறுங்கள்’ எனக் கேட்டுவிட்டு பத்து வஸக் அளவு (தேறும்) எனக் கணித்தார்கள். பின்பு அப்பெண்ணிடம் ‘இதில் கிடைப்பதைக் கணக்கிட்டுவை’ எனக் கூறினார்கள். நாங்கள் தபூக்கை அடைந்தபோது ‘இன்றிரவு கடும் காற்று அடிக்கும்; எனவே, யாரும் வெளியில் செல்ல வேண்டாம். ஒட்டகமுடையவர்கள் அதை நன்கு கட்டி வைக்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப்போட்டு விட்டோம். கடும் காற்றும் வீசத்தொடங்கிற்று. நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவராக ஒருவர் வெளியே எழுந்துவந்தார். உடனே காற்று அவரை தய்யி என்ற மலையில் கொண்டு போய்ப் போட்டது. வழியில், அய்லா என்ற ஊரின் மன்னன் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் போர்த்தினார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்றும் எழுதிக் கொடுத்தார். (போரிலிருந்து) திரும்பி, ‘வாதில் குராவை’ அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம் ‘உன்னுடைய தோட்டத்தில் எவ்வளவு தேறியது?’ எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கணித்த பத்து வஸக் தான்’ என்று கூறினார். பின்பு நபி (ஸல்) அவர்கள் ‘நான் விரைவாக மதீனா செல்ல வேண்டும். எனவே, உங்களில் யாரேனும் என்னோடு விரைவாக மதீனா வர நாடினால் உடனே புறப்படுங்கள்” என்றார்கள். மதீனா நெருங்கியபோது, ‘இது நறுமணம் கமழும் நகரம்” என்றார்கள். பின்பு உஹது மலையைப் பார்த்தபோது ‘இது அழகிய சிறிய மலை இது நம்மை நேசிக்கிறது நாம் அதை நேசிக்கிறோம்” என்று கூறிவிட்டு, ‘அன்ஸாரிகளில் சிறந்த குடும்பத்தினரை நான் அறிவிக்கட்டுமா?’ எனக் கேட்க தோழர்களும், ‘ஆம்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், ‘பனூ நஜ்ஜார், குடும்பத்தினர், பின்பு பனூ அப்துல் அஷ்ஹல், பிறகு பனூ ஸாயிதா அல்லது பனூஹாரிஸ் இன்னும் அன்ஸாரிகளின் அனைத்துக் குடும்பத்தினரும் சிறந்தவர்களே” என்றார்கள். மற்றோர் அறிவிப்பில் ‘பனூ ஹாரிஸா பின்பு பனூ ஸாயிதா’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது. மற்றோர் அறிவிப்பில் ‘உஹத் மலை நம்மை நேசிக்கிறது அதை நாம் நேசிக்கிறோம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.”அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனூஹாரிஸ், பிறகு பனூ சாஇதா குடும்பங்கள் ஆகும். அன்சாரிக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி) எங்களிடம் வந்து சேர்ந்தார். அப்போது (அவரிடம்) அபூ உஸைத்(ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு (அப்படிக் குறிப்பிட்டவர்களில்) நம்மைக் கடைசியானவர்களாகக் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) உடனே ஸஅத் இப்னு உபாதா (ரலி) நபி (ஸல்) அவர்களை அடைந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்கள் (தங்களால்) சிறப்பித்துக் கூறப்பட்டபோது (அன்சாரிகளில் ஒரு குடும்பத்தினரான) நாங்கள் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளோமே (ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் மிகச் சிறந்(குடும்பத்)தவர்களில் இடம் பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?’ என்று கூறினார்கள்.

புஹாரி : 1481 3791 அபூஹூமைத்(ரலி).

2 comments

  1. Assalamu Alaikkum. This article is helped for my education. Jazakallahu Hairan

  2. Mohammad nabi arbuthangal tamil book upload pannuga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *