Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்

உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1554. நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து (வாயில் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று கூறினார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (ஆற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3693 அபூமூஸா (ரலி).

1555. நான் என் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்” என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், ‘நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்” என்று கூறினர். நான் (நபி (ஸல்) – அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச்சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), ‘இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்” என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், ‘யார் அது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(நானே) அபூபக்ர் (வந்துள்ளேன்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு (நபி – ஸல் – அவர்களிடம்) சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், ‘உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்” என்று சொன்னேன். உடனே, அபூபக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப்பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), ‘அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்” என்று சொல்லிக் கொண்டேன்.” இன்னார்’ என்று அபூ மூஸா அல் அஷ் அரீ (ரலி) கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டே” என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினார்: அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், ‘யார் அது?’ என்று கேட்டேன். வந்தவர், ‘(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்) என்று சொன்னார். நான், ‘கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, ‘இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் சென்று, ‘உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். ‘அல்லாஹ் இன்னாருக்கு (என்சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான் என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான்,’யார் அது?’ என்று கேட்டேன். அவர், ‘(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)” என்று பதிலளித்தார். உடனே, ‘கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு அனுமதி கொடுங்கள்.அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், ‘உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்” என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்)அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்:

ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்), ‘நான் (நபி – ஸல் அவர்களும், அபூபக்ர் (ரலி ) அவர்களும், உமர் (ரலி) அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3674பூமூஸா அல் அஷ்அரி (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *