Featured Posts
Home » பொதுவானவை » இறைவன் கொடியவனா?

இறைவன் கொடியவனா?

புதியபறவை படம் என்று நினைக்கிறேன். அதில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “எங்கே நிம்மதி?” எனத்தொடங்கும் பாடலில் “பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் எவரையும் முணுமுணுக்க வைக்கும்.

“அர்த்தமுள்ள இந்து மதம் ” என்று புத்தகம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் மிகுந்த இறைநம்பிக்கை உள்ளவர் என்றே நினைக்கிறேன்.(இவரின் சிந்திக்க வைக்கும் பல கவிதைகளை மதுபோதையுடனேயே எழுதுவார் என்று குற்றம் சாட்டப் பட்டபோது,நான் எழுதிய களைப்பைப் போக்கிக் கொள்ளவே குடிப்பேன்; எழுது முன்பு குடிப்பதில்லை என்று அவர் பதில் சொன்னதைப் படித்திருக்கிறேன்!). கண்ணதாசனையோ அல்லது அவரின் கவிதைகளைப் பற்றியோ எழுதுவதல்ல இப்பதிவின் நோக்கம்;” இறைவன் கொடியவன் ” என்ற அவரது பாடல் வரியைப் பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்யவே இப்பதிவு.

எல்லா மதங்களிலுமே கடவுள் கருணை வடிவாகச் சொல்லப்படுகிறார். அன்பே சிவம் என்று இந்துக்களும் அன்பே கடவுள் (GOD IS LOVE) என்று கிறிஸ்தவர்களும் நிகரற்ற அன்புடையோன் (அர்ரஹீம்) என்று கடவுளைப்பற்றி முஸ்லிம்களும் சொல்கிறார்கள். அன்புடையோனாய்ச் சொல்லப்படும் இறைவனை “கொடியவன்” என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள் சோகத்தின் ஆழத்தில் எழுந்தவை என்று எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு பக்கம் , சுனாமியால் இலட்சக் கணக்கானோர் உயிரிழந்தபோது , அவர்களில் பால்குடிக் குழந்தைகளும் பாலூட்டும் தாய்மாரும் முதியோரும் அடங்குவர். இறந்தவர்களில் இந்து- முஸ்லிம்-கிறிஸ்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாமத இறைநம்பிக்கையாளரும் இருந்தனர். “எந்தக் கடவுள் உண்மையானவர் என்ற விவாதத்திற்குச் செல்ல வேண்டாம் ; ஏதாவது ஓர் உண்மையானக் கடவுள் இவர்களைக் காப்பாற்றி இருக்கக்கூடாதா?” என்று கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கேட்டதை ப் பல கருத்துப் பரிமாற்றங்களில் அறிந்து, அக்கேள்விக்குப் பொருத்தமான பதிலாக எதை முன் வைக்கலாம் என்று சிந்தித்திருந்ததுண்டு.

பிபிசி இணையதளத்தில் சுனாமிக்குப் பிறகு மக்களுக்கு இறைவன் மீதான நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பலரும் பலவறான கருத்துக்களைச் சொல்லி இருந்தனர். இத்தகையப் பேரழிவுகள் பணக்கார நாடுகளில் ஏற்படும்போது இழப்புகள் குறைவாகவும் ஏழை நாடுகளில் ஏற்படும்போது அதிகமாகவும் உள்ளன. ” கடவுள் ஏன் ஏழைகளை மட்டுமே குறிவைத்து அழிக்கிறான்?” என்று ஒருவர் ஆதங்கப்பட்டிருந்தார் . சமீபத்தில் பங்களாதேஷில் ஏற்பட்ட சிடார் புயலின் அழிவுகளைப் பற்றி அறிந்தபோது இத்தகைய ஆதங்கக் கேள்விகள் நியாயம் போலவே தோன்றின. (BBC – An act of God?)

அவசரயுக மனிதர்கள் அல்லல்படும்போது விரக்தியிலும் ஆதங்கத்திலும் இப்படித்தான் அவசரகதியில் கடவுளைப் பற்றி முடிவுக்கு வருகிறோம் . பொதுவாகவே மனிதர்களுக்கு நஷ்டம் ஏற்படும் போது சபிப்பதற்கு யாரும் கிடைக்காத போது, இறைவனைச் சபிக்கிறோம் . உண்மையில் இறைவன் எல்லாச்சூழல்களிலும் கருணையானவன் என்பது நம்பிக்கையாளனின் நிரூபிக்க முடியாத வெறும் வாதமாகவே தோன்றும்.

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு , உலகச் சுற்றுச்சூழல் நிபுனர்கள் கூடி , குளோபல் வார்மிங் எனும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் அதன் விளைவால் சூரியவெப்பக்கதிர் வீச்சில் இருந்து பூமியைக் காக்கும் ஓஸோன் மண்டலம் பழுதடைந்து, பூமியின் தென் துருவப் பனிமலைகள் உருகி, உலகின் பிற பகுதிகளில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று எச்சரித்தார்கள்.

அண்டை நாடான மாலத்தீவுகள் உட்பட உலகின் பல கடலோர நகரங்கள் கடல்நீரில் மூழ்கும் என்றும
் கவலைப்பட்டார்கள். கவலைப்பட்டதோடு சரி, அதிலிருந்து பாதிக்கப்படவுள்ள பூமியைக் காக்க சிறுதுரும்பையும் எடுத்துப் போடவில்லை.

அகில உலகையும் ரட்சிக்கஅவதாரம் எடுத்திருப்பதாகக் கொக்கரிக்கும் அமெரிக்காவே புவியின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது ; தனது கழிவுகளைக் குறைத்து உலகச் சுற்றுச்சூழலைக் காக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்ற சொல்லப்பட்டதற்கு, ” உலகின் காற்றைச் சுத்தப்படுத்தும் வேலையை அமெரிக்கா சுமக்க முடியாது!” என்று திமிராகச் சொன்னார் அதிபர் ஜார்ஜ் புஷ்!

இப்படித்தான் மனிதர்கள் கூடுவார்கள் , கவலைப்படுவார்கள் , கலைவார்கள் . இளிச்சவாயன் எவனவது அகப்பட்டால் ஐக்கிய நாடுகள் சபையில் வைத்து ப் பொருளாதாரத் தடைப் பூச்சாண்டி காட்டி வழிக்குக் கொண்டு வருவார்கள் ; மறுத்தால் அமெரிக்கா தலைமையில் போர் செய்து அழித்தொழிப்பார்கள் . ஆனால் , இறைவன் அப்படிப் பட்டவனல்லன்! “பூமியில் சிலகாலம் தங்கி இருங்கள்” என்று மனிதர்களை அனுப்பி வைத்து, பேரழிவுகளால் அழித்தொழிக்கும் அளவுக்கு நியாயமற்றவன் அல்லன் இறைவன் .

இந்தோனேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பூமியின் டெக்டானிக் தட்டு நகர்ந்ததால் 2004 டிசம்பர்-24 அன்று சுனாமி ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம் . அதேதினம் சுனாமி நிகழ்வால் பூமியின் சுழற்சி சில பாகைகள் மாறி இருப்பதாக புவியியலார்கள் சொன்னதை எத்தனை பேர் அறிவீர்கள் என்று தெரியவில்லை. (How earthquake jolted the planet)

சுனாமிக்குப் பிறகு உலகின் பல பாகங்களின் தட்ப வெப்பநிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் கவனித்திருக்கலாம் . சுனாமிக்குப் பிறகு பல தீவுகள் கடல்மட்டத்திலிருந்து உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது . அதாவது கடலில் மூழ்கவிருந்த பகுதிகள் உயர்த்தப் பட்டுள்ளன . சுனாமி தாக்குதலன்று மாலத்தீவிலிருந்த எனது உறவினரிடம் தொலைபேசியபோது , கடலலைகள் தலைநகர் மாலே தீவைக் கடந்து சென்றதாகச் சொன்னார் .

இருபது வருடங்களுக்குப் பூமியின் சில பகுதிகள் கடலினுள் மூழ்குவதில் இருந்து காப்பாற்றவே இறைவன் புவியின் மேற்பரப்பைச் சரி செய்துள்ளான் என்றும் நினைக்கத் தோன்றவில்லையா ? 60-70 வருடங்கள் ஆயுட்காலம் கொண்ட மனிதமனம் தனது ஆயுளுக்குள் அற்புதம் நடந்தால்தான் இறைவனை நம்புவேன் என்று அடம் பிடிக்கிறது. ஆனால் பாவம் இறைவன்! அவன் மிகுந்த பொறுமையாளன்! யாருக்கு, எதை, எப்போது , எப்படிச் செய்யவேண்டும் என்பதை ஏற்கனவே தீர்மானித்துள்ளபடி அவ்வப்போது சரியாகவே செய்து வருகிறான்.

ஆக, இதுவரையிலான எனது பார்வையின்படி இறைவன் கொடியவனல்லன் என்றே தோன்றுகிறது !

4 comments

  1. இக்பால்

    அருமையான பதிவு

  2. மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் – அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். (16:61-அல்குர்ஆன்)

  3. avanukku thaan ella power-m irukke. appuram yem tsunami-la ithana pera konnu itha pannanum

  4. சேதுக்கரசி

    உங்க கருத்தோடு உடன்படுகிறேன். கவியரசு சும்மா ஆண்களை (பொய்யாகவாவது?) மனம் குளிரவைக்க மட்டுந்தான் அப்படி எழுதிட்டுப் போயிட்டார்னு தோணுது :-)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *