Featured Posts
Home » பொதுவானவை » அரைகுறை பகுத்தறிவாளர்கள்!

அரைகுறை பகுத்தறிவாளர்கள்!

ஐயா! நீங்கள் நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் யாருமே தன்னைக் கெட்டவர்(ன்) என்று சொல்ல விரும்புவதில்லை. ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று தீர்மானிப்பது யார்? ஏன்? சமூகத்தில் ஏற்கனவே நல்லவை என்று தீர்மானித்திருப்பதற்கேற்ப நடந்தால் நல்லவர்! மாற்றமாக நடந்தால் கெட்டவர்! என்பதே நடைமுறையில் இருந்து வருகிறது!

சமூகம் என்றால் யார்? குறிப்பிட்ட சிலர் ஏற்கனவே தீர்மானித்திருப்பதற்கு ஏற்ப இருந்தால் நல்லவர்/கெட்டவர் எனப்பகுப்பது நியாயமா? எல்லோருமே அடுத்தவர் நல்லவராக இருக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள். அடுத்தவருக்கு நல்லவராக இருந்து என்ன சார் பயன்? இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் பகுத்தறிவுப்படி தவறல்ல!

அன்றாடச் செய்திகளில் போர்,ஆக்கிரமிப்பு, குண்டுவெடிப்பு, அமைதியின்மை போன்றவை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு இவற்றிற்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பவை மதங்களே என்று முடிவுக்கு வந்து மதங்களின்றி மனிதர்களால் வாழச் சாத்தியமுண்டு; ஆனால் மனிதர்களின்றி மதங்கள் வாழச் சாத்தியமில்லை. எனவே இனி மதம்/மதங்கள் தேவையில்லை என்ற நாத்திக மனநிலைக்குச் சிலர் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அமைதி மார்க்கமாகிய இஸ்லாத்தைப் பின்பற்றும் நாடுகளின் மக்கள்தான் உலகளவில் அமைதியற்று, நிம்மதியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; அன்பே கடவுள் என்று சொல்லும் கிறித்தவ நாடுகளின் ஆட்சியாளர்களே அன்பின்றி இராக், ஆப்கன் போன்ற நாடுகளைக் கூட்டாக ஆக்கிரமித்து அன்பின்றி அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கிறார்கள்.

புழுபூச்சிகளையும் ஹிம்சிக்கக்கூடாது என்று அஹிம்சை போதிக்கும் இந்து மதத்தினைச் சேர்ந்த சிலனர்தான் மீரட் முதல் மதுரைவரை பிறரின் வழிபாட்டுத்தலங்களை உடைத்தும்,கலவரங்களை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கில் மனித உயிர்களை (கருவில் இருக்கும் சிசு உட்பட) கொல்கிறார்கள்.ஆசையை ஒழிக்கச் சொன்ன புத்தம்தான் இன்று தமிழர்களையும்,திபெத்தியரையும் கொல்லக் காரணமாக இருக்கின்றது.

மதத்தின் தேவைக்கான காரணங்களுக்கும் அதன் விளைவுகளும் முரணாக இருக்கின்றனவே? மனிதர்கள் நாகரிகமின்றி, சரியான வழிகாட்டுதல்களின்றி மிருகங்களைப்போல் கட்டுப்பாடின்றி காடுகளில் சுற்றித்திரிந்தக் காலத்தில் வேண்டுமானால் மதங்கள் அவசியமாக இருந்திருக்கலாம். அண்டைக் கிரகங்களில் குடியேறத் திட்டமிடுமளவுக்கு விஞ்ஞானத்தில் கோலோச்சும் அறிவியல் யுகத்திலும் மதங்கள் குறித்து பழமைவாதம் பேசலாமா? என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இதுவரை மதங்களைப் பின்பற்றி மனிதவாழ்வு மேன்மையடைந்ததாகத் தெரியவில்லை; எனவே நாத்திகத்தையும் பரீட்சித்துப் பார்க்கலாமே; மதக் கோட்பாடுகளைச் சரியாகப் பின்பற்றி என்றோ கிடைக்கவிருக்கும் மோட்ச வாழ்வைவிட கண்ணருகில், கையருகில் தொட்டுவிடும் தொலைவிலுள்ள இவ்வுலகத்தையே சுவர்க்கமாக்கி எஞ்சிய வாழ்நாளைச் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுச் சாகலாமே என்றும்
நினைக்கிறார்கள்!

மதங்களுக்கு மாற்றாகச் சொல்லப்படும் நாத்திகம் சிறந்ததா? நாத்திகத்தைப் பின்பற்றினால் நிம்மதியாக வாழமுடியுமா? நாத்திகம் என்பது மதங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதா? எனப்பகுத்தறிவதே இப்பதிவின் நோக்கம்.
மற்ற மதங்களை ஒப்பிட்டால் இஸ்லாத்தை முன்னிறுத்துவதற்காக பிற மதங்களைச் சாடுகிறேன் என்று திசைதிருப்பப்படும் வாய்ப்பிருப்பதால் நாத்திகம் Vs இஸ்லாம் குறித்து மட்டும் பார்ப்போம்!

நாத்திகம் எனும் கடவுள்/கள் மறுப்பையே இஸ்லாமும் சொல்கிறது (சுட்டி). பகுத்தறிவுவாளர்கள் பாதி முஸ்லிம்கள்! இஸ்லாமும் கடவுள்கள் இல்லை என்றே சொல்கிறது. இஸ்லாத்தின் தாரக மந்திரமான கலிமாவின் அர்த்தம் வணக்கத்திற்குறிய இறை வேறு யாருமில்லை; அல்லாஹ்வைத் தவிர்த்து! என்பதாகும். நாத்திகர்களின் கடவுள் மறுப்பு இஸ்லாத்தின் முழக்கத்தில் முதல் பாதியாகும்!

படைத்தவன் ஒருவன் இல்லாவிட்டால் படைப்புகள் எப்படி உருவாயின? என்ற கேள்விக்கு நாத்திகம் அறிவியலைச் சான்றாக வைக்கிறது. பிரபஞ்சம், உலகம், மக்கள் எல்லோருமே தானகவே தோன்றி தானாகவே அழிவார்கள் என்று சொல்கிறது. ஒருவாதத்திற்கு அது உண்மையெனக் கொண்டால், ஏன் தானாகத் தோன்ற வேண்டும்? சிலவருடங்கள் கழித்து ஏன் அழிய வேண்டும் என்ற கேள்விகளும் உடன் எழும்!

எனக்குப் பிடிக்காதவனை அல்லது என்னை எதிர்ப்பவனைக் கொன்றால் நான் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? நல்லவனாக அடங்கி ஒடுங்கி வாழ்வதைவிட கெட்டவனாக யாருக்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாகத் திரிந்தால் இன்னும் சந்தோசமாக இருக்கலாமே? சட்டம் போட்டு ஏன் தடுக்க வேண்டும் என்ற கேள்விகளும் எழும்! “வலியது பிழைக்கும்” என்ற அறிவியல் பரிணாமக் கோட்பாட்டின்படி தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றால் உலகம் அமைதியாக இயங்குமா?

மனிதர்களைக் கட்டுப்படுத்தி,வழிகாட்ட ஒரு வழிமுறை இருக்க வேண்டும். அத்தகைய வழிமுறைகளில் ஒன்றுதான் இஸ்லாம்! மற்ற மதங்களெல்லாம் தத்தமது கடவுள்/களை வணங்கவே சொல்கின்றன.பிற(ர்) கடவுளை வணங்க வேண்டாம் எனச் சொல்வதில்லை.ஆனால், அல்லாஹை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு இணையாக யாருமில்லை என்று வலியுறுத்துகிறதே! இஸ்லாம் சமய சகிப்புத்தன்மைக்கு எதிராக இருக்கிறதே என்றும் கேட்கலாம்; கேள்வியில் நியாயமும் உண்டு!

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அல்லாஹ்வை மட்டுமே வணக்க வேண்டும் சொல்லவில்லை. மனித நேர்வழிக்கான அனைத்து வழிகளையும் சொல்லி, தகுந்த சான்றுகளை முன்வைத்து, ஓரிறையைச் சிந்தித்துப் பார்த்தே வழிபடச் சொல்கிறது.அறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுத்தறிவுவாதிகளாகிய நாத்திகர்களில் எத்தனைபேர் அவற்றைச் சிந்தித்துப் பார்த்திருப்பர்?பகுத்து அறிந்து சிந்திந்து உண்மையை ஏற்பதுதானே பகுத்தறிவு! ஏற்க மறுப்பதை அல்லவா இவர்கள் பகுத்தறிவு என்று சொல்கிறார்கள்?

“எல்லாக் காலத்திற்கும் ஏற்ற கொள்கை என்று ஒன்றில்லை. காலத்திற்கு ஏற்ப மாறாதது புறந்தள்ளப்பட வேண்டியதே. அவ்வகையில் இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் ஏற்றது இல்லை என்பதும் சரியான வாதமன்று. ரத்தஉறவு முறைகளும் காலங்காலமாக, மாற்றமின்றியே பின்பற்றி வரப்படுகின்றன. நாகரிக வளர்ச்சியைக் காரணம் சொல்லி அண்ணன்-தங்கையை அல்லது தந்தை-மகளைத் திருமணம் செய்வதில்லை. (பகுத்தறிவுப்படி திருமணமே தேவையில்லை!)

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது பகுத்தறிவுப்படி இயற்கையான உணர்வு என்று யாரும் இதை நியாயப்படுத்துவதில்லை. மனிதர்களால் உருவாக்கிக் கொண்டதை மாற்றம் செய்ய ஒத்துக் கொள்ளாத பகுத்தறிவு இறைவனால் சொல்லப்பட்டதை காலத்திற்கேற்ப மாற்ற வேண்டும் என்பது நியாயமா?

சாமான்யர் சக்திக்கு மீறியதை இஸ்லாம் என்றுமே நிர்ப்பந்திக்கவில்லை. தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்திலும் இஸ்லாமியக் கொள்கைகளைத் தற்காலிகமாகச் சமரசம் செய்து கொள்வதற்கும் தடையில்லை, இஸ்லாமியச் சட்டங்களும் கோட்பாடுகளும் எல்லாக் காலத்திற்கும், மக்களுக்கும் ஏற்பவே சொல்லப்பட்டுள்ளன.

ஐயா!, இஸ்லாத்தைப் பற்றி சொல்வதெல்லாம் ஓரளவு நியாயகே இருக்கிறது. ஆனால் நாத்திகராக இருப்பது அதைவிட நியாயமாக இருக்கிறதே என்று கேட்கலாம். நாத்திகர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் “கடவுள் நம்பிக்கை” மட்டுமே வேறுபடுத்துகிறது.நாத்திகர்களாக, கடவுள் நம்பிக்கை இன்றி நல்லவராகத்தானே இருக்கிறோம்! இறைநம்பிக்கை எதற்கு? என்றும்
கேட்கலாம்.

நாத்திகராகவும் நல்லவராகவும் நீடிக்க முடியுமென்பதற்கு உத்திரவாதம் இல்லை. (யார் யாரிடம் கொடுப்பது?) செயல்களின் நியாயத்தை அளவிட்டு நல்வினை / தீவினைகளைக் கண்காணிக்க யாருமில்லை என்று உள்மனது நினைக்கத் தொடங்கிவிட்டால் நாத்திகன் கெட்ட நாத்திகனாக, சமூக விரோத நாத்திகனாக மாறிவிடுவான். தன் செயல்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றன; தன் செயல்களுக்குப் பதில் சொல்லியாகவேண்டும்; தீவினைக்கு கடும் நோவினை உண்டு என்று கட்டுப்பாட்டுடன் வாழும் முஸ்லிம், நாத்திகரைவிடச் சற்று நல்லவராக வாழ முடியும்.

கடவுள் நம்பிக்கையற்று நல்லவராக வாழ்வது சிறந்ததா? கடவுளை நம்பி சற்றுக் கூடுதல் நல்லவராக வாழ்வது சிறந்ததா?என்று பகுத்தறிவிடம் கேட்டுக் கொள்ளுங்கள்! ஏனெனில் கேள்வி கேட்பதுதானே பகுத்தறிவுக்கு அழகு!

5 comments

  1. ‘தீவினைக்கு கடும் நோவினை உண்டு என்று கட்டுப்பாட்டுடன் வாழும் முஸ்லிம், நாத்திகரைவிடச் சற்று நல்லவராக வாழ முடியும்.’

    தலிபான், அல்-கொய்தா போன்ற
    உதாரணங்களைக் கொண்டு இதை
    விளக்கவும்.

  2. பெயர் குறிப்பிட பயந்த Anonymous அவர்களே !
    தாலிபன் , அல் கொய்தா பற்றி தங்கள் கரிசனத்துக்கு நன்றி.
    இஸ்லாம் எனபது தாலிபன் , அல் கொய்தா அல்ல .
    தாலிபன் , அல் கொய்தா என்பது ஒரு தீவிர வாத அரசியல் இயக்கம்.
    உலகில் 100 கோடி முஸ்லிம்களில் வெறும் 10000 பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
    அவர்களும் அவர்களின் உள்நாட்டு போர் வெற்றிக்காக பாடு படுகிறார்கள் .
    எனவே அவர்களின் சதவிகிதம் என்பது 0 .1 % கும் குறைவே.
    கணிதத்தில் இது விலக்க தக்கது .

  3. السلام عليكم ورحمة الله و بركاته

    பதிவு அருமையாக இருக்கிறது இதன் தொடர்ச்சி எங்கே ??

  4. நிர்வாகி

    wa alaikkum salam warah..

    missing lines, updated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *