Featured Posts
Home » நூல்கள் » சூஃபித்துவத் தரீக்காக்கள் » [தொடர் 9] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

[தொடர் 9] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

Bookالحقيقة ஹகீக்கத் (ரகசியம் )
ஹக்கீக்கத் எனப்படுவது சூஃபிகளின் ஷைத்தானிய அடிப்படை விதிகளில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றது. தன் வழியில் முஃமினாக வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மனிதன் மார்க்க விளக்கம் பெற ஷைத்தானிய தோழர்களாகிய சூஃபிகளை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து முஸ்லிமாக இருந்த அவனை தரீக்கத் எனும் பாதாளக் குழியில் தள்ளி, தம்மைத் தவிர வேறு யார் எது சொன்னாலும் கேட்கக் கூடாது எனும் நிலைக்கு அவனை ஆளாக்கி அவனிடம் பைஅத் – ஞான தீட்சை? பெற்ற பின்னர் அவனுக்கு சூஃபிகள் கற்றுக் கொடுக்கும் ஒரு இரகசியம்தான் இந்த ஹகீக்கத் எனும் சமாச்சாரம். அவர்களின் கருத்துப்படி இது ஒரு ரகசியம் இது தான் உண்மை – யதார்த்த நிலை. ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை. அவர்களிடம் ஞானதீட்சைபெறாதவர்களுக்குத் தெரிவிப்பதுமில்லை. காரணம் இவர்கள் கூறும் பைத்தியகாரத் தனமான உளறல்களையும், சாத்தானிய வசனங்களையும், பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைக் கட்டுக் கதைகளையும் நம்பி ஏமாறும் நிலையில் எந்தப் பாமரனும் இல்லை. எனவே இவனால் எழுப்பப்படும் கேள்வி களுக்குக் கூட இவர்களால் விடையளிக்க முடியாது. ஒன்றுமறியாத பாமரனும் இவர்கள் கூறுவதைக் கேட்டால் இவர்களின் குடுமியைப் பிடித்து ஆதாரம் கேட்பான். ஆப்பிழுத்த குரங்கு போல அவனிடம் மாட்டித் தவிக்க நேரிடும். ஆதாரம் இருந்தால்தானே சமர்ப்பிக்க முடியும். இந்துப் புராணங்களில், யூத கிருஷ்த்தவ, கிரேக்க தத்துவங்களில் வேண்டுமானால் ஆதாரம் கிடைக்கலாம். குர்ஆன் ஹதீதில் கிடைக்குமா? அத னால்தான் தமது சூஃபித்துவ வலையில் வீழ்ந்து தீட்சை பெற்று — மூளையை அடகு வைத்து மூடனாகி விட்டவர்களிடம் மாத்திரமே இந்த ஹக்கீக்கத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதுவும் அவனாக குருவின் அனுமதியின்றி எவரிடத்திலும் இது பற்றி வாய் திறக்கக் கூடாது எனும் நிபந்தனையுடன்..

அது என்ன ரகசியம் ? என்ன ஹக்கீக்கத் ? என்று பார்ப்போம்.

அதாவது இப்பிரபஞ்சமே அல்லாஹ்தான் அவனின் வெளிப்பாடே இப்பிரபஞ்சம் என்பதைத் தெரிந்து கொள்வதே ரகசியம். நாம் பார்க்கும், கேட்கும், தொடும் அனைத்துமே, நான், நீ, அவன், அவள், அது, வானம், பூமி, சந்திரன், சூரியன், ஆடு, மாடு ஏன் நாய், பன்றி அனைத்துமே அல்லாஹ்தான். கடலிலுள்ள நீர்தான் அலையாகவும், நுரையாகவும், உப்பாகவும் பரிணமித்திருப்பது போல் அல்லாஹ்தான் இப்பிரபஞ்சமாகத் தோற்றம் தருகின்றான். அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்துத்துத்தான் அல்லாஹ் எனப்படும் என்பதே இப்பைத்தியர்களின் மஃரிபத் எனும் மூடத் தத்துவம். இதை அறிந்தவர்தான் ஞானி – ஆரிப் என இவர்களிடம் அழைக்கப்படுவார்.

பிரபல சூஃபி கஸ்ஸாலி சொல்கின்றார்..
அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார். ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே, அவனை நோக்கியே, அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே. ( இஹ்யாஉலூமுத்தீன். 1—254 )

தொடர்ந்து கஸ்ஸாலி சொல்கின்றார்..
மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து ஒருமித்துத் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள், எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை – பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒருவகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் “நான் தான் அல்லாஹ்’ என்றும், வேறு சிலரோ ‘நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்’ என்றும், வேறு சிலர் ‘எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை’ என்றும் கூறியிருக்கின்றார்கள். (மிஸ்காதுல் அன்வார். ப:122)

கஸ்ஸாலி சொல்கின்றார்..
ஆரிபீன்கள் சொல்கின்றார்கள் ‘நாங்கள் நரக நெருப்புக்குப் பயப்படவுமில்லை. சொர்க்கத்துக் கன்னியர்க்கு ஆசைப்படவுமில்லை எங்கள் நோக்கமே இறை தரிசனம்தான். அவன் எம் கண்களுக்குப் புலப்படாமல் கனப் பொழுதேனும் தடைப்படக் கூடாது என்றே நாங்கள் யாசிக்கின்றோம்’. (அல் இஹ்யா 4–22 )

இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்…
ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார். ஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ் வாகத்தான் தென்படும். முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள், விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள். அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை, பொற்சிலை, வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள். ( புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192 )

இதுதான் வழிகெட்ட இந்த சூஃபிகள் சொல்லும் ரகசியம்.?? இது வழிகேட்டின் உச்சம், இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான். இது சுத்த பைத்திய காரர்களின் உளறல். முற்றிய பைத்தியம் என்பதைச் சாதாரணவன் கூடச் சொல்வான். அல் குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர், கலப்பற்ற ஷிர்க் என்று விவரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *