Featured Posts
Home » பொதுவானவை » பொருளாதாரம் » தோல்வியடைந்த துணிகர முயற்சி!

தோல்வியடைந்த துணிகர முயற்சி!

மனிதன் உயிர் வாழ மூச்சுக்காற்று எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அமெரிக்க பொருளாதாரத்திற்கு எண்ணை வளம் அவசியம். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் போல தோன்றினாலும் உண்மை நிலவரத்திற்கும் இதற்கும் தூரம் அதிகமில்லை.

உலகின் மிகப்பெரிய 50 எண்ணை நிறுவனங்களின் பட்டியலில் பத்திற்கும் மேற்பட்டவை அமெரிக்க நிறுவனங்களே. இந்த நிறுவனங்களில் ஒன்றான Unocal-ஐ சில நாட்களுக்கு முன் சீனா விலை பேசியது. China National Offshore Oil Corporation (CNOOC) என்ற சீன நிறுவனம் Unocal-க்கு 18.5 பில்லியன் டாலர் வரை தர தயாராக இருந்தது.

CNOOC சீனாவின் புகழ்வாய்ந்த, சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஒன்று. Shell போன்ற அமெரிக்க எண்ணை நிறுவனங்களில் இயக்குனர்களாக இருந்தவர்கள் சிலர் தற்போது CNOOC-யின் இயக்குனர் குழுவில் இருக்கிறார்கள்.

Unocal-ஐ வாங்குவதற்கு ஏற்கனவே ஆர்வம் காட்டிய அமெரிக்காவின் மற்றொரு எண்ணை நிறுவனமான Chevron, 17 பில்லியன் டாலர் மட்டுமே கொடுக்க முன் வந்திருந்தது. அதுவும் முழுவதும் பணமாக அல்லாமல், ஒரு பகுதி தனது நிறுவனத்தில் பங்குகளாகவும் மற்றொரு பகுதியை பணமாகவும் அறிவித்திருந்தது. ஆனால் CNOOC தனது 18.5 பில்லியன் டாலரையும் பணமாகவே தருவதாக அறிவித்தது. அது மட்டுமல்லாமல் இந்த நிர்வாக மாற்றம் மூலமாக அமெரிக்கர்களின் வேலை எதுவும் பறிபோகாது என உத்தரவாதமும் அளித்திருந்தது.

எல்லா வகையிலும் கவர்ச்சிகரமானதாக இருந்தபோதிலும், CNOOC-யின் திட்டத்திற்கு அமெரிக்க அரசியல்வாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தம் நாட்டின் பொருளாதார வளத்திற்கு அதிமுக்கியமான எண்ணை வளத்தின் ஒரு பகுதியை (சிறு பகுதியாக இருந்தாலும்..) சீனா போன்ற கம்யூனிஸ நாட்டின் கைவசம் ஒப்படைப்பதா? என்ற தயக்கமே இதன் முதல் காரணம்.

அமெரிக்க அரசியல்வாதிகளிடமிருந்து இத்தகைய எதிர்ப்பலைகள் கிளம்புவது ஒன்றும் புதிதல்ல. 1980-களில் ஜப்பான் தீவிரமாக அமெரிக்க நிறுவனங்களை வாங்க முற்பட்டபோது இதே போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. அன்றைய சூழ்நிலையில் அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடு தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்ற தேவையற்ற அச்சம் காரணமாக சொல்லப்பட்டது.

அரசியல் எதிர்ப்புகளை காரணம் காட்டியே Institutional Shareholder Services என்ற அமைப்பு Unocal பங்குதாரர்களை CNOOC-யின் ஆஃபரை (offer) நிராகரிக்கும்படி அறிவுறுத்தியது. அதுவரை தனது முயற்சியில் தீவிரமாக இருந்து எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டிருந்த CNOOC, இந்த அறிவிப்பு வெளியானவுடன் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டது. இனி, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய எண்ணை நிறுவனமான Chevron, Unocal-ஐ தன் வசப்படுத்திக்கொள்ள தடையேதும் இல்லை.

இந்த முடிவு முன்பே யூகிக்க முடிந்ததுதான் என்றாலும், அமெரிக்காவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறை ஒன்றின் நிறுவனம் ஒன்றை விலைபேசிய சீனாவின் துணிகர முயற்சி பாராட்டத்தக்கது. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்பது இதுதானோ?

சீனாவின் இந்த முயற்சி ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல, மாறாக ஒரு trend என்றுதான் சொல்லவேண்டும். சீனா தனது ஷாப்பிங் கூடையை கையிலெடுத்து சில மாதங்கள் ஆகின்றன. 50 சீன நிறுவனங்களையாவது Global Champion-களாக உருவாக்கி அவற்றை உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் இருத்தி வைத்து அழகு பார்ப்பது என்பது சீனாவின் கனவுத்திட்டங்களில் ஒன்று. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக அரசாங்க ஆதரவுடன் பல சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை, குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டன.

பிரான்ஸின் Thomson, கொரியாவின் Ssangyong, அமெரிக்காவின் IBM நிறுவனத்தின் கணிணி தயரிக்கும் துணைநிறுவனம் ஆகியவை ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன.

Unocal விஷயத்தில் சறுக்கி விட்டாலும் சீனா தன் முயற்சியில் சற்றும் மனம் தளர்ந்ததாக தெரியவில்லை. ஆனால் இனிமேலும் மற்ற நிறுவனங்களை வாங்கும் தன் முயற்சியை வெளிப்படையாக அறிவித்துவிட்டு செய்யுமா என்பது சந்தேகமே.

தற்போது, கனடாவின் PetroKazakhstan-ஐ வாங்க சீன நிறுவனமான China National Petroleum Corp (CNPC) முயற்சித்துக் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதிலும் போட்டி இல்லாமலில்லை. இதில் சீனாவுடன் போட்டி போடுவது வேறு யாருமல்ல, லண்டனில் வசிக்கும் பில்லியனர் லட்சுமி மிட்டல் தான். இந்தியாவின் ONGC-யுடன் கைகோர்த்து மிட்டல் களத்தில் இறங்கியுள்ளார்.

போட்டியில் வென்றது இரு ஆசிய சக்திகளில் எது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

7 comments

  1. “அன்றைய சூழ்நிலையில் அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடு தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்ற தேவையற்ற அச்சம் காரணமாக சொல்லப்பட்டது.”

    தேவையற்ற அச்சம் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள் சலாஹுத்தீன் அவர்களே? வெள்ளைக்காரர்கள் இம்மாதிரி வணிக நோக்கத்தில் உள்ளே வந்துதானே இந்தியாவையே அடிமை கொண்டனர். ஆகவே உள்ளூர்காரர்கள் இம்மாதிரி எம்முயற்சியையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாதுதான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  2. டோண்டு, தேவையற்ற அச்சமா தேவையுள்ள அச்சமா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

    திறந்த பொருளாதாரச் சந்தையில் எதுவும் நடக்கும். அகலக்கால் வைத்தவன் சறுக்குதல் நடந்தே தீரும். இனிமேலாவது அமெரிக்கா விழித்துக் கொண்டு பேராசையைக் குறைத்துக் கொண்டால் நல்லது. அல்லது எந்த வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டென்பது நிரூபிக்கப் பட்டுவிடும்.

  3. டோண்டு அவர்களே, வெள்ளைக்காரர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய 18,19-ம் நூற்றாண்டுகளில் வேண்டுமானால் இந்த அச்சம் நியாயமானதாக இருந்திருக்கலாம். ஆனால் உலகமயமாக்கலின் தாக்கத்தால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இது தேவையற்ற அச்சமாகத்தான் படுகிறது.

    அது தவிர, சில ஆண்டுகளுக்கு முன் சவுதிஅரேபியாவின் Aramco அமெரிக்காவின் எண்ணை நிறுவனமொன்றை வாங்கியபோது இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ராகவன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  4. “ஆனால் உலகமயமாக்கலின் தாக்கத்தால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இது தேவையற்ற அச்சமாகத்தான் படுகிறது.”

    அப்படீங்கறீங்க? வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியாவில் கடை திறப்பதையும் பேசாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானா? என்னதான் உலகமே கிராமமாகப் போனாலும் sensitive துறைகளில் வெளிநாட்டு முதலீடு நடப்பது எதிர்ப்புக்குள்ளகும்தானே.

    “சவுதிஅரேபியாவின் Aramco அமெரிக்காவின் எண்ணை நிறுவனமொன்றை வாங்கியபோது இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.”
    சவுதியிடம் தேவையான அளவு உள்நாட்டு தொழில் வல்லுனர்கள் இல்லை என்பதும் உண்மைதானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  5. நல்லடியார்

    //சவுதியிடம் தேவையான அளவு உள்நாட்டு தொழில் வல்லுனர்கள் இல்லை என்பதும் உண்மைதானே//

    உண்மைதான். :-(

  6. kevinericks27082160

    i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Here

  7. 2005 ம் ஆண்டு எழுதப்பட்ட கடிதமாக இருந்தாலும் தற்போது படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. டோண்ட அவர்களின் கருத்தில் முற்றிலுமாக மாறுபட்ட நிற்கின்றோம் காரணம் நாங்கள் தற்போது சௌதியில் வேலை செய்து கொண்டியிருப்பவர்கள்
    //சவுதியிடம் தேவையான அளவு உள்நாட்டு தொழில் வல்லுனர்கள் இல்லை என்பதும் உண்மைதானே.//

    இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதே தற்போதைய நிலவரம் எல்ல துறைகளில் இந்நாட்டு மக்களை பணிஅமர்த்தவும் அதுவும் கைநேர்ந்த சிறப்பு தொழில் வல்லுனர்களைக் கொண்டு எங்கும் சௌதி மயம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. அதே சமயம் தகுதி வாய்ந்த நபர்களை பல்வேறு தொழில் நுட்ப மேற்படிப்பிற்க்கு அரசு செலவில் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படிப்பதற்க்கும் கடும் போட்டியே நிலவுகின்றது. 10 அல்லது 15 வருடங்களில் சிறந்த சௌதி உள்நாட்டு வல்லுனர்கள் இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்க்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்குகில்லை
    அன்புடன் அபூ ஸஆத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *