Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » நரகம் பற்றிய பயமேன்? 4

நரகம் பற்றிய பயமேன்? 4

மறுமையை நம்பாதவர் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது. மறுமையின் நம்பிக்கையில் நரகத்தை நம்புவதும் அடக்கம். திருக்குர்ஆனில் பல இடங்களில் ”நரக நெருப்புக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” என அல்லாஹ் எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் எச்சரிக்கையின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் நரகத்தை நம்புகிறார்கள் – நரக நெருப்புக்கு பயப்படுகிறார்கள்.

ஒரு வாதத்துக்காக மறுமை – நரகம் என்றெல்லாம் கிடையாது என்று வைத்துக் கொண்டாலும் அதனால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி, அல்லாஹ் கூறிய வழியில் – பொய் – களவு – சூது – கொலை – கொள்ளை – மோசடி செய்தல் – போதைப் பொருளை உபயோகித்தல் – விபச்சாரம் செய்தல் இன்னும் இது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களை விட்டும் விலகி இவ்வுலக வாழ்க்கையை நல்லொழுக்கத்துடன் அமைத்துக் கொள்கிறார்கள். நாளை மறுமையோ – நரகமோ இல்லா விட்டாலும். மறுமையையும் – நரகத்தையும் நம்பியதால் கட்டுப்பாடான வாழ்க்கைக்கு அந்நன்னம்பிக்கை துணையாக இருக்கிறது. (முஸ்லிம்கள் எல்லோரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்திடவில்லையே? என்ற கேள்வி இங்கு எழலாம், நரகத்தையும் நம்பிக்கைக் கொண்டு பஞ்சமா பாதகங்களைச் செய்யும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் சிபாரிசு பற்றிய தவறானக் கருத்துக்கு விளக்கமளிக்கும் போது இவர்கள் பற்றிய தெளிவு கிடைத்து விடும்)

மாறாக, மறுமை – நரகம் என்றெல்லாம் கிடையாது என நம்பி, இவ்வுலகத்தை எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்று தன் மனோ இச்சைப்படி ஒழுக்கக் கேடாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் நம்பிக்கைக்கு எதிராக, நாளை மறுமையும் – நரக தண்டனையும் உண்டென்று நிரூபிக்கப்பட்டால் இவர்களின் கதி? மீட்டெடுக்க முடியாத கைசேதத்திற்குத் தள்ளப்படுவார்கள். என்று சொல்லிக்கொண்டு நரகம் பற்றிய எதிர்வாதங்கள் மீண்டும் வைக்கப்பட்டால் நாமும் தொடர்வோம்.

நிரந்தர நரகவாசிகள்.
நரகத்தைப் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களை எடுத்தெழுதி, அதற்கு விளக்கமாக நச்சுக் கருத்தையே அள்ளி வீசியிருக்கிறார். இஸ்லாத்தை அறியாதவர்கள் வேண்டுமானால் நேசகுமார் கக்குவது விஷமென அறிந்து கொள்ள முடியாமல் மூக்கில் விரல் வைக்கலாம். இஸ்லாத்தை சிறிது அறிந்தவர்களிடம் அவரின் கருத்துக்கள் செல்லாக்காசு பெறாது.

தன் மத வேதங்களோடு – இஸ்லாத்தின் இறுதி வேதமான திருக்குர்ஆனையும் ஒப்பிட்டு திருக்குர்ஆன் வசனங்களுக்கு மனம் போன போக்கில் – தான் தோன்றித்தனமாக விளக்கமளிக்கிறார். ”நிரந்தரமாக நரகத்தில் தங்கியிருப்பார்கள்” என்று நரகவாசிகளைப் பற்றி திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடும் போது, எதற்காக அத்தண்டனை என்பதற்கானக் காரணங்களும் அந்த வசனங்களில் விவரிக்கப்படுகிறது.

இவ்வுலகத்தில் மனிதனின் செயல்களுக்கேற்ப கூலியும் – தண்டனையும் வழங்கப்படுவதே மறுமை நாள். மனிதன் தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, திருந்தும் வாய்ப்பும் மறுமை நாளில் எவருக்கும் அளிக்கப்படாது. அதற்கான சந்தர்ப்பம் இவ்வுலகத்தில்தான் வழங்கப்படும்.

5:39. எவரேனும் தம் தீயச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான் என்பதை வலியுறுத்தி பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கிறது. ”ஆதத்தின் மக்கள் அனைவரும் தவறு செய்பவர்களே! தவறிலிருந்து திருந்தி மன்னிப்புக் கேட்பவர்களே மேன்மையானவர்கள்”!! இந்தக் கருத்தில் பல நபிமொழிகளும் இருக்கின்றன. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் – தவறு செய்தவர்கள் வருந்தினாலும் திருந்தினாலும் நிரந்தர நரகம்தான் என்று இஸ்லாத்தின் மீது நச்சுக் கருத்தைத் தடவுகிறார் பாருங்கள்.

ஒரு முறை தீர்ப்பு வழங்கிவிட்டால் அவ்வளவுதான், பின் அதை என்றென்றைக்கும் மாற்றவே முடியாது. தவறு செய்தவர்கள், திருந்தினாலும், மனம் மாறி வருந்தினாலும் – நிரந்தர நரகம்தான்( ” அவர்கள் என்றென்றும் (நரகத்தில்) தங்கி இருப்பர்” திருக்குரான் வசனங்கள் 2:39, 2:81, 2:217, 2:257, 2:275,3:116, 4:14, 4:169, 5:37,7:36, 98:6 – “மறுமையின் (தீர்ப்பு நாளின்) வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.” திருக்குரான் வசனம் 20:127 )

இதுதான் அவர் இஸ்லாத்தை விளங்கிய லட்சணம்.

இனி…
நபி (ஸல்) அவர்களின் சிபாரிசு பற்றி பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *