Featured Posts
Home » சட்டங்கள் » நிச்சயிக்கப்பட்ட பெண்களைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையரைகள்

நிச்சயிக்கப்பட்ட பெண்களைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையரைகள்

திருமணத்தை ஆகுமாக்கிய மார்க்கம் இஸ்லாம்:-
இறைவனால் தன்னை வணங்குவதற்காகவே படைக்கப்பட்ட இனங்களுல் மனித இனம் சிரேஷ்டமானது. இவ்வினத்தைப்படைத்த இறைவன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான எல்லா வஸ்துக்களையும் வசப்படுத்தி கொடுத்து மனிதனது விருப்பு வெறுப்புக்களையும் தட்டிக்கழிக்காது எண்ணிளடங்கா அருட்கொடைகளையும் வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். மனிதனை இருஇனங்களாக ஒரு ஆண் மற்றும் பெண்ணிலிருந்து படைத்த அந்த இறைவன் அந்த இரு இனமும் சங்கமிக்கும் திருமணம் எனும் வரப்பிரசாதத்தையும் ஆகுமாக்கியுள்ளான்.

‘உங்களில் வாழ்கை துணையில்லாதவருக்கும், உங்களுடைய ஆண் அடிமைகளுக்கும், இன்னும் நல்லொழுக்கமுல்ல அடிமைப் பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய பேரருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் மிக்க விசாலமானவன் நன்கறிந்தவவன்’ (சூரதுன் நூர் 32) என அல்லாஹ் தன் திருமறையயில் திருமணத்தை ஆகமாக்குவதை காணலாம். அவ்வாரே அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களும் திருமணம் முடித்து குடும்பம் நடத்தியவர்களாகவே அதிகமானகவர்களை நம்மால் கண்டுக் கொள்ள முடிகிறது.

குறிப்பாக இறுதித் தூதர் முஹம்மது ஸல்)அவர்கள் கூட இந்த வழிமுறையை எடுத்துக்கொண்டதோடு முழு இளைஞர் சமுதாயத்தையும் பார்த்து ‘வாலிபர்களே உங்களில் யார் (உடல் மற்றும் ஏனைய) சக்தி பெறுவாரோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது (திருமணம் கற்பைக் காத்துக் கொள்வதற்கும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் (போதுமானது)…..’ (புகாரி 5065, முஸ்லிம் 1400) என தெளிவாகவே திருமணம் முடித்துக் கொள்ளும் படியும் அதனால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்.

இவ்வாரு இஸ்லாமிய சட்டமூலத்தின் அடிப்படைகளே திருமணத்தைப் பற்றி தெளிவுபடுத்திக் கொண்டிருக்க இன்று எத்தனையோ மதங்கள் தங்களது மதப்பெரியார்களுக்கு இந்த மனித உரிமையை வழங்காது இருப்பது வேடிக்கையானது. இதன் விளைவாக மதகுருமார்களினதும் பாதிரிமார்களினதும் சில்மிசங்கள் கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்ற தலைப்புக்களில் நாலாந்தம் ஊடகங்களில் அரகேற்றப்படுகின்றன. இவற்றை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் கிடையாது, என்றாலும் இஸ்லாம் வழங்கியிருக்கக்கூடிய இவ்வடிப்படை உரிமையை சில முஸ்லிம்களே புரிந்து கொள்ளாது இருப்பதை கண்டுகொள்லாமல் இருந்துவிட முடியாது. எனவே வாழ்க்கையில் ‘சாதித்து விட்டுத்தான் திருமணம்’ என சாட்டுப்போக்கு சொல்லுபவர்கள் திருமணம் முடித்து வாழ்ந்து காட்டுவதும் ஒரு சாதனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கடமையாக்கப்பட்ட திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணை அடைந்துக் கொள்ள முயலும் ஒரு ஆணுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதன் சட்டங்களை நோக்குவோம்.

பொதுவாகவே பெரும்பான்மையான உலமாக்கள் பெண்ணைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றனர். பின்வரும் சான்றுகளைக் கொண்டு இக்கருத்தை உறுதிசெய்ய முடிகிறது.

நபி (ஸல்) அவர்களை விழித்து அல்லாஹ் கூறுகின்றான்,

பின்னர் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத்தவிர வேறு பெண்கள் உமக்கு ஆகுமாக்கப்படவில்லை. இன்னும் அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் அவர்களை (உம்முடைய மனைவியராக) இவர்களைக் கொண்டு நீர் மாற்றிக் கொள்வதும உமக்கு (அனுமதி) இல்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் கண்காணிக்கின்றவனாக இருக்கின்றான். (சூரதுல் அஹ்ஸாப் 52)

இங்கு அல்லாஹ் பெண்களின் அழகு கவரப்படுவதாக கூறுகின்றான். உண்மையில் அழகு பார்ப்பதன் மூலம்தான் புலப்படும் என்பது வெள்ளிடைமலை. எனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்க்க முடியும் என விளங்க முடிகின்றது.

இவ்வாரே அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் ஒரு செய்தியில்

“நான் நபியவர்களிடம் இருந்த போது அவரிடம் ஒரு மனிதர் வந்து அவர் அன்ஸாரியப் பெண்ணை திருமணம் முடித்தாக (நிச்சயிக்கப்பட்டதாக) கூறினார் அவரிடம் நபியவர்கள் ‘நீர் அவளைப் பார்த்தாயா?’ ஏன வினவவே, அவரோ இல்லை என்றார். சென்று அவளைப் பார்ப்பீராக நிச்சயமாக அன்ஸாரிகளின் கண்களில் ஏதோ உண்டு என நபியவர்கள கூறினார்கள்”. (முஸ்லிம் 1424, நஸாயி 6:69)

அவ்வாரே ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் நபியவர்கள சொன்னதை நான் கேட்டேன்

‘யார் ஒருவர் பெண்ணை நிச்சயிக்க முற்படுகிறாரோ அவர் அவளின் சில உறுப்புக்களை பார்க்க முடியுமானால் பார்த்துக் கொள்ளட்டும் (ஹதீஸின் சுருக்கம்) அபூதாவுத் 2082, அஹ்மத் 3:360

இவ்வாறு பல செய்திகள் நபியவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளமையால் பெண்ணைப் பார்ப்பது ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.

அதேவேளை, இமாம் மாலிக்கைத்தொட்டும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க முடியாது என்ற கருத்தை ‘காபி’ என்ற நூலில் இமாம் இப்னு அப்துல் பர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் இக்கருத்தை கூறக்காரணம் பொதுவாக பல்வேறு ஹதீஸ்கள் பெண்களைப் பார்ப்பதை தடை செய்துள்ளதை ஆதாரமாகக் கொள்கின்றார். என்றாலும் பிரத்யேகமாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் காணப்படுவதனால் “முடியாது” எனும் கருத்து வலு இழந்து போகிறது.

எந்த இடங்களைப் பார்க்களாம்:-

1. பொதுவாக பெண்கள் வெளிப்படுத்தக்கூடிய இரு கைகளையும் மற்றும் முகத்தைப் பார்ப்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. என்றாலும் பெரும்பான்மையான உலமாக்கள் இவ்விரு உறுப்புக்களையும் பார்ப்பதுடன் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்கின்றனர். ஆனால் ஹன்பலி மத்ஹபின் கருத்துப்படி இரு கைகள், கால் மற்றும் ஒரு பெண் சாதாரணமாக வீட்டில் இருக்கும் போது வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் உறுப்புக்களைப் பார்க்கலாம் என்கின்றனர்.

2. இக்கருத்துக்கு ஆதாரமாக நபியவர்கள் விஷேடமாக பெண்ணைப் பார்க்கும் படி ஏவியிருப்பதில் இருந்து அவள் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இரு கைகளையும் முகத்தையும் பார்ப்பதைச் சொல்லவரவில்லை. மாறாக அவள் வீட்டில் இருக்கும் போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உறுப்புக்களைப் பார்ப்பதைக் குறிக்கும் என்கின்றனர்.

3. அதேவேளை அல்அவ்சகி அவர்கள் பெண்ணின் அவயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்க்கலாம் என்கின்றார்.

இவ்வாறு பல கருத்துக்கள் இருந்த போதிலும் பெரும்பான்மையான உலமாக்களின் கருத்தான முதலாவது கருத்தே ஏற்றமானது எனலாம். காரணம் இரு கைகள் முகம் என்பவற்றைத் தாண்டி ஒரு பெண்ணைப் பார்ப்பதன் மூலம் வேறு விதமான குற்றச்செயல்கள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.

எனவே இதிலிருந்து நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சில வரையரைகளுடன் பார்க்க வேண்டும் அது நபி வழியாகும் என்பதை விளங்கின்றோம். இன்று சில சகோதரர்கள் அவள் “அஜ்னபி பெண்” அவளை எவ்வாறு பார்ப்பது? என கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நபிவழிக்கு மாற்றமாக குருட்டுத் திருமணம் செய்கின்றனர். இது பிழையான விடயமாகும். காரணம் இவ்வாறு ஒரு பெண்ணைப் பார்க்காமல் திருமணபந்தத்தில் இணைவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை திருமணத்திற்குப் பின்னால் எதிர்நோக்கலாம். ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர்பார்ப்புக்கள் திருமணத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் திருமண வாழ்க்கை ஜொலிக்கும்.

இதே வேளை இன்றும் சிலர் நபியவர்பகள் பார்க்கச்சொல்லியிருக்கிறார்கள்தானே என சொல்லிக் கொண்டு முடியைப்பார்ப்பது, நடையைப்பார்ப்பது என பட்டியலை நீட்டிக்கொண்டு செல்வார்கள். இக்கருத்தை உடையவர்களும் நபியவர்கள் பார்க்கச் சொன்னது வரையருக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதற்கும் மேல் ஒருவருக்கு கட்டாயம் சில விடயங்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் ஆணின் சகோதரி அல்லது தாயின் மூலமாக இவ்விடயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பெண்பார்க்கும் படலத்தை பெரும் பரீட்சை மண்டபம் போன்று ஆக்கிக்கொண்டு குறித்த பெண்ணை துருவித்துருவி நீண்டநேரம் பார்க்கக் கூடாது. காரணம் ஒரு பெண்ணும் ஆணும் தனித்து இருக்கும் போது ஷைத்தான் மூன்றாவது நபராக இருக்கின்றான் (அஹ்மத் 01:18, திர்மதி 1171) எனக் கூறியுள்ள செய்தியை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே வேளை நபியவர்கள் ஆணும் பெண்ணுமாக தனித்திருப்பது அனுமதித்ததாக காண முடியவில்லை. மாறாக ஒரு ஆண் பெண்ணோடு தனித்திருக்க நேரிட்டால் குறித்த பெண்ணின் கிட்டிய உறவுக்காரர் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம் (புகாரி 3006, முஸ்லிம் 1341) என பொதுவாகவே நபியவர்கள் வழிகாட்டியுள்ளமை பெண்பார்க்கும் படலத்திற்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.

எப்போது பெண்ணைப் பார்க்கவேண்டும்?

ஒரு ஆண், தான் திருமணம் முடிக்க எல்லா வகைகளிலும் தயார் என்பதில் உறுதியான பின்னர் தனது துணையை தெரிவு செய்வதற்கு முற்படவேண்டும். இதற்கு மாற்றமாக திருமணம் முடிப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னிருந்தே நாற்பது வீட்டிற்கு ஏறி இறங்கி பெண்பார்க்கின்றோம் என்ற பெயரால் வீண் விரயமாக பணத்தை இரைத்து பெண்மக்களைப் பெற்ற பெற்றோரின் வயிற்றிலும் அடிக்கும் நடவடிக்கையை எமது சமூகம் விட்டு விட வேண்டும். இந்நடைமுறையானது பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி ஒரு ஆண் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்தபின்னர், தனக்கு இப்பொழுது திருமணம் முடிக்க முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் பெண் கொஞ்சம் உயரம் அல்லது கட்டை கொஞ்சம் நிறம் காணாது என்றெல்லாம் இலேசாக சொல்லி விடும்போது குறித்த பெண் பாரிய மன உலைச்சலுக்கு ஆளாகின்றாள் என்பதனையும் நமது மாப்பிள்ளைமார் மறந்து விட்டனர்.

பெண்ணின் அனுமதி கேட்க வேண்டுமா?

பெண்பார்ப்பதற்கு குறித்த பெண்ணின் அனுமதி கேட்கத்தேவையில்லை என்பது பெரும்பான்மையான உலமாக்களின் கருத்தாகும் இமாம் மாலிக் அவர்கள் பெண்ணுக்கு அறியப்படுத்திய பின்னால் பார்த்தால் அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என கூறிய போதிலும் பெரும்பான்மையான உலமாக்களின் கருத்து மிகவும் ஏற்றதாகத் தெரிகின்றது. காரணம் ஒரு ஆண் சில வேளை பெண்ணை விரும்பலாம். சில வேளை விரும்பாமலும் இருக்கலாம். விரும்பவில்லை என்றாலும் கூட குறித்த பெண்ணுக்கு விடயம் தெரியாததால் அவளுக்கு உலவியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படப்போவதில்லை. எனவே பெண்ணின் அனுமதியில்லாமலும் குறித்த பெண்ணை பார்ப்பதற்கு ஆணுக்கு அனுமதிக்க முடியும். அதே வேளை இந்த விடயத்தில் பெண்ணை இச்சையோடு பார்ப்பது மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட அம்சங்களாகும்.

நிழற்படத்தின் மூலம் (Photo) நவீன கருவிகள்(video, messenger) போன்றவற்றினூடாக பெண் பார்க்க முடியுமா?

பொதுவாக நபியவர்கள் பெண்ணை பார்ப்பதற்கு அனுமதித்த செய்திகளில் இருந்து மேற்குறிப்பிட்ட நவீன ஊடகங்களின் ஊடாக அவளைப்பார்ப்பதற்கு அனுமதி அளிக்க முடிகின்றது. இது விடயத்தில் மிகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகவும் இருக்கும் பட்சத்தில் அனுமதிக்க முடிகின்றது. என்றாலும் இன்றைய சூழலில் அதிகமான தில்லுமுல்லுகள் தங்கையைக் காட்டி அக்காவைக் கொடுக்கும் கில்லாடி வேளைகள் இடம் பெருவதாலும் தரகர்களின் திருவிளையாடல்கள் மலிந்து போய் உள்ளதாலும் இதனை பலர் அனுமதிப்பது கிடையாது. இஸ்லாத்தில் எந்த விடயத்திலும் ஏமாற்றுதலுக்கு இடமில்லை என்பதனை குறித்த தரப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே வேளை அனுமதிக்க முடியாது என்பவர்களின் வாதத்திற்கு வழு சேர்க்க பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றனர்.

– நிழற்பிரதியைப் பொறுத்தவரையில் ஒரு பெண்ணின் யதார்த்தமான உருவத்தை நவீன கருவிகளைக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் செய்து அழகு படுத்தலாம்.

– இதற்கு எதிர் மரையாக நேரடியான தோற்றத்திற்கு மாற்றமான அசிங்கமான தோற்றத்தைக்கூட புகைப்படங்கள் ஏற்படுத்தலாம்.

– இவ்வாரான புகைப்படங்கள் அல்லது messenger ஊடாக பெண்ணைப்பார்த்து விட்டு சில நயவஞ்சகர்கள் குறித்த பெண்ணை இணையத்தின் internet ஊடாக கேவலப்படுத்த முனையலாம்.

எனவே இது போன்ற காரணங்களினால் இவ்வாரான நவீன வசதிகளினூடாக பெண் பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் ஏற்றமானது. வேறு வழியில்லாமல் இவ்வழிகளில்தான் பார்த்து ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இரு தரப்பும் சரியான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்ணுடன் கைலாகு செய்வது அல்லது உறுப்புக்களைத் தொடுவது கூடாது

இன்று சர்வசாதாரணமாகிப்போன கைலாகு (handshaking) செய்வது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இடம்பெறுவதையோ, உறுப்புக்களைத் தொடுவதையோ இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. நபியவர்கள் தெளிவாகவே

‘நான் பெண்ணுடன் கைலாகு செய்ய மாட்டேன்’ (திர்மதி 1597, நஸாயி 4181, இப்னுமாஜா 2874, அஹ்மத் 6:357)

என கூறியுள்ளார்கள். நபி வழியை எமது வழியாகக் கொண்ட. மேலைத்தேயரின் நாகரீகத்திற்கு ஒப்பாகி ஆண், பெண் கைலாகு செய்வதையும் ஏனைய உறுப்புக்களை தொடுவதையும் தவிர்த்துக் கொள்வது கட்டாயமானதாகும். அதே வேளை முக்கியமான தேவைகளுக்கு அல்லாமல் வீணாக, குறித்த பெண்ணோடு தொலை பேசியினூடாக அரட்டை அடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா?

தொடர்ந்து ஒரு ஆண் பெண் பார்ப்பதன் ஒழுங்கு முறைகளையும் சில சட்டங்களையும் அவதானித்தோம். தற்போது ஒரு பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா என்று பார்ப்போம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணைப் போன்றே தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கலாம். எனவே இஸ்லாம் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கும் செவி சாய்த்து பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது. இன்றைய எமது சமூக சூழலில் பெண்ணுக்குறிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது. சில வேளை பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே ‘நான் கீறிய கோட்டை எனது பிள்ளை தாண்டாது’ என இருமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெருகின்றமை பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று சொல்லலாம். அற்ப பணத்திற்காக தனது பிள்ளையை UK மற்றும் America மாப்பிள்ளைக்கு விற்றுவிடக் கூடிய பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? இல்லையா? என்பதைக் கேட்கத் தவறிவிடுகின்றனர். இதனால் எமது சமூக அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் குறிப்பாக தலாக் மற்றும் கணவன் இருக்க இன்னொருவனோடு ஓடிப்போகும் சமபவங்கள் இடம் பெருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

நாம் ஏற்கனவே பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆண் பெண்ணைப் பார்க்கலாம் என்று சொன்னோம் அதனால் ஏற்படும் பிரதிபலனையும் கோடிட்டுக் காட்டினோம். ஆனால் ஆண் அவ்வாறு பார்த்து விரும்பியதன் பின்னர் நேரடியாக திருமண ஒப்பந்தத்திற்கு செல்லமுடியாது. சில வேளை பாரிய வயது வித்தியாசமான கிழவர்கள் கூட பெண்கள் அனுமதியில்லாமல் அவளைப்பார்த்து விரும்பலாம். அதன் பின்னால் பெண்ணின் அனுமதியையும் பெற்று அவள் பார்த்து OK சொன்னால்தான் பெண்ணுக்குறிய உரிமைகளை வழங்கியவர்களாகவும் அவளின் மனோநிலையை மதித்தவர்களாகவும் ஆக முடியும். எனவே இவ்விடயத்தில் ஆண்கள் கரிசனை செலுத்தி, தான் பார்த்து விரும்பிய அந்தப்பெண்ணுக்கு தன் மேல் விருப்பம் இருக்கிறதா? என்பதை அவள் ஆணைப்பார்த்து உறுதி செய்து கொள்வதற்கும் திருமணத்திற்கு முன் இஸ்லாம் கூறும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து இருமணங்கள் சங்கமிக்கும் திருமண வாழ்வில் இணைந்து ஈருலகிலும் வெற்றிபெற அல்லாஹ் துணைபுரிவாணாக!

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ

11 comments

  1. பல கருத்துகளை சிறி பத்திகளாக(பேரகிராப்பாக) வெளியிட்டால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

  2. நிர்வாகி

    சரிசெய்யப்பட்டுள்ளது.

  3. Assalaam-mu-alaikkum
    Migavum thelivaga vi-luck-e yathat-ku mikka nandri…arumuyana aakkam..

  4. அஹ்மது

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    இக்கட்டுரையில் எழுத்துப் பிழைகள் ஏராளம் காணப்படுகின்றன. இத்தகைய பயனுள்ள கட்டுரைகளை எழுத்துப் பிழை, சொற்பிழைகளின்றிப் பதிவு செய்தால், மிக நன்று.
    -அதிரை அஹ்மது

  5. it’s very nice full comments

  6. சகோதரர்களான அஹமது, இஸ்மாயீல் ஆகியோருக்கு மிக்க நன்றி. இனிவரும் ஆக்கங்களில் எழுத்துப் பிழைகளை சரி செய்து கொள்கின்றோம். மீள்பார்வை செய்யாது அவசரமாக பிரசுரித்தமையை இட்டு வருந்துகின்றோம்.

  7. அஸ்ஸலாமு அழைக்கும்
    தங்களுடைய கட்டுரை நன்றாக இருந்தது .. நான் ஒரு வேண்டுகோளை இங்கு நான் வைக்கிறேன் , திருமணதிற்கு முன்னர் நிச்சயக்கபட்ட பெண்கள் ஆண்களிடம் பேசலாம் அல்லது பேச கூடாது அதற்காக ஒரு கட்டுரை இங்கு பதியவும் ..

  8. வஅலைக்கும் அஸ்ஸலாம்
    சகோதரின் வேண்டுகோளுக்கு நன்றி. இன்ஷாஅல்லாஹ் ரமழானுக்குப் பின் இது தொடர்பாக எழுத முயற்சிக்கின்றோம்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக.

  9. Kadhal thirumanam seithu kollalaamaa? pls answer my question.

  10. pen paarthu avalai pidikavillai yendral yenna seivathu

  11. Jasakallahu hairan…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *