Featured Posts
Home » சிறுவர் பகுதி » கதைகள் » கனாக் கண்டேன்(டி) [சிறுகதை]

கனாக் கண்டேன்(டி) [சிறுகதை]

Story“சும்மா இருங்கம்மா! இப்படி பணம். பணம்ன்னு அலையறவங்களுக்கு உறைக்கிறமாதிரி நாலு வார்த்தை கேட்டால்தான் புத்தி வரும். கல்யாணங்கறது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு லட்சம் வேணும் 100 பவுன் நகை வேணும்னு வியாபார ஒப்பந்தம் போட வந்துருக்காங்க”.

“மஹர் கொடையை மணம் உவந்து கொடுத்திடுங்கன்னு. அல்லாஹ் சொல்கிறான். இவங்க என்னடான்னா. எங்கே பணம் கிடைக்கும். எங்கே கார் கிடைக்குமுன்னு ஊர் ஊரா அலையறாங்க”.

“ஏம்மா!. உங்க பெண்ணை அடக்கிவைங்க. மாப்பிள்ளை வீட்டுக் காரங்கன்னு மரியாதை கூட கொடுக்காம” என்றார் மாப்பிள்ளையின் தாயார்.

“ஆமா! பெரிய்ய மரியாதை! மகனை பெத்து வளர்ப்பது பெற்றோர் கடமைங்கற அடிப்படை விஷயம் கூட தெரியாம. பால் குடி செலவுல இருந்து பட்டப்படிப்பு செலவுவரை கணக்கெழுதிக்கிட்டு, பெத்த புள்ளையை பேரம் பேசி விலை பேச வந்துட்டீங்க. உங்களுக்கு என்ன மரியாதை வேண்டிகிடக்கு. மாப்பிள்ளைக்கு தாயா இருக்குற உங்களப் பார்த்து நான் கேட்கிறேன்!. நீங்களும் ஒரு பெண் தானே! உங்க தந்தையும் உங்களை கல்யாணம் பேசும்போது வரதட்சணை கொடுத்து தானே முடிச்சுருக்காங்க!. பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக, பல லட்சத்த வரதட்சணையா கொடுக்கும் போது மனது எவ்வளவு நொந்துப் போயிருக்கும். அது போகட்டும். உங்க வீட்டு பெண் புள்ளைங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது மட்டும் எங்க வரதட்சணை வாங்காத நல்ல மாப்பிள்ளை கெடைப்பான்னு பார்க்குறீங்களே!. அதே உங்க பையனுக்கு மட்டும் பெண் பார்க்கும் போது தன் கடந்த காலத்தையே மறந்துட்டு இதே மனோபாவம் தான் மற்ற பெண்வீட்டாருக்கும் இருக்குங்கிறத ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க”.

“இதப் பாருங்கம்மா! நல்ல இடம்னு புரோக்கரு சொன்ன காரணத்துணால தான் இங்கு வந்தோம். இப்படி ராங்கிப் புடிச்ச பொண்ணுன்னு, வந்த பிறகுதான் தெரியும். இப்படிப்பட்ட பெண் எங்களுக்கு தேவையில்ல!”.

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க!. அது சின்னப்பொண்ணு ஏதோ தவறுதலா பேசிட்டுது”, என வருத்தம் தெரிவித்தார் பெண்ணின் தாயார்.

“சும்மா இருங்கம்மா!. நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல! கட்டப்போற மாப்பிள்ளை எந்த இலட்சணம். அவங்க குடும்பம் எந்த இலட்சணம்னு ஆள் வெச்சு தெரிஞ்சுக்கற அளவுக்கு வெவரம் தெரிஞ்ச பொண்ணுதான். பார்க்க நல்ல ஆளா தெரிவதெல்லாம் சும்மா. இவங்க குடும்பத்தப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும்.

எங்கூட மதரஸாவில் படிக்கும் என் தோழி ஃபர்ஜானாவுடைய சொந்த தாய் மாமா, மாமிதான் இந்த இருவரும். ஆரம்பத்துல என் தோழியைத்தான் பெண்பார்த்து நிச்சயமும் பண்ணினாங்க. என் தோழி வீட்ல வரதட்சணைக் கொடுக்க மாட்டேன், நபிவழியிலதான் திருமணம் நடத்துவேண்ணு சொல்ல. அதவிட வசதியான பொண்ணுன்னு நம்மவீட்ட பார்க்க வந்துருக்காங்க. இதுவரை பெத்தவங்கண்ணு தான் எதுவும் நான் பேசல. மார்க்க விஷயம்ங்கறதால நான் சொல்கிறேன்.

வரதட்சணை கொடுக்கக் கூடியதா இருந்தா எனக்கு திருமணம் வேண்டாம். வரதட்சணை வாங்காத மாப்பிள்ளையை அல்லாஹ் எனக்கு தருவான். பணத்துக்காக பெண்பார்க்க வந்த குடும்பத்துல போய் நான் நிம்மதியா வாழ்வேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை!. பெத்தவங்க தான் அப்படின்னா புத்திரன் லட்சனம் அதுக்கு மேல, காலேஜில கூத்தடிச்சு, பல பெண்களுடன் தொடர்பும் வச்சிருக்கார். ஆண் என்றதும் யாரும் பெரிதுபடுத்தவில்லை. கற்பொழுக்கம் எப்படி பெண்ணுக்கு முக்கியமோ அதுபோல ஆம்பளைங்களுக்கும் முக்கியம். இப்படி மட்ட ரகமா புள்ளையை பெத்துவச்சிகிட்டு நல்ல மடத்தில் விலை போக வேணுமின்னு புரோக்கரை பிடிச்சிருக்கிறாங்க. இப்படிப்பட்ட மாப்பிள்ளை எனக்கு தேவையில்லை. இதைவிட கூலி வேலை பார்க்கும் மார்க்கப்பற்றாளனிடம் கூழும் கஞ்சியும் குடிச்சிக்கிட்டு வாழ்க்கை நடத்துவது மேல். இனி ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது. Get out..”

oOo

மக்கள் கூட்டம் நிறைந்துவழிய. மாப்பிள்ளை தோரணையில் மணமேடையில் அமர்ந்திருந்த இபுராஹீமிடம் தோழன் வஹாபு கேட்டான். “என்ன மாப்ளே! கல்யாண சமயத்துல முகத்த உம்முன்னு வச்சிகிட்டு..!”

“அட சும்மா இருப்பா நீவேற! நேத்து ராத்திரி ஒரு கனவு கண்டேன்! அதை நெனச்சுப் பார்த்தேன்”. என்று வழிந்தான் இபுராஹீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *